அகிரா படத்தை தொடர்ந்து சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் படம் தான் நூர். நூர் படம் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திப்படுத்தியதா...? என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, மும்பையில் ஒரு பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றுகிறார் நூர் எனும் சோனாக்ஷி சின்ஹா. தன் வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமலும் பெரிய முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதால் வருத்தப்படுகிறார் நூர். ஒருநாள் தன் வீட்டில் வேலை பார்க்கும் மால்டி எனும் ஸ்மிதா, டாக்டர் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி, தன் சகோதரனின் கிட்னியை திருடிவிட்டதாக கூறுகிறார். இதையே ஒரு சவாலாக ஏற்று களத்தில் இறங்க முற்பட நினைக்கும் நூர், தன் முதலாளியிடம் இதை செய்தியாக்க கேட்கிறார். ஆனால், அவரோ ஒரு இரண்டு நாள் வெயிட் பண்ணுங்க என்கிறார்.
இதற்கிடையே இந்த விஷயத்தை தனது பாய்பிரண்ட்டான அயன் பானர்ஜி எனும் புராப் கோலியிடம் தெரிவிக்கிறார் நூர். அவர் ஒரு பீரிலான்சர் என்பதால், நூர் சொன்ன விஷயத்தை வேறு ஒரு பத்திரிகைக்கு செய்தியாக்கி விடுகிறார். இதனால் ஆத்திரமாகும் அந்த டாக்டர் தனது செல்வாக்கை பயன்படுத்தி மால்ட்டியின் சகோதரனை கொலை செய்து விடுகிறார். இந்த சம்பவத்திற்கு காரணம் நூர் தான் என எண்ணுகிறார் மால்டி. நூர், தன் தரப்பு நியாயத்தை நிலை நிறுத்தி, குற்றவாளியான டாக்டரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தாரா...? என்பது நூர் படத்தின் மீதிக்கதை.
அகிரா போன்றே நூர் கதாபாத்திரத்திலும் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி. ஆனால் அவரின் நடிப்பு இணையாக திரைக்கதை விறுவிறுப்பாக அமையாதது பெரும் குறையாக தெரிகிறது. சோனாக்ஷியை போன்றே புராப் கோலி, கணன் கில் உள்ளிட்டவர்களும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநராக சுனில் சிப்பி தனது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் வலுவான கதையை திரைக்கதையில் சிறப்பாக பிரதிபலிக்க தவற விட்டுவிட்டார் சுனில். படத்தில் முன்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, பின்பாதியில் இல்லாததும், ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும், குறைகளும் இருப்பது படத்திற்கு பலவீனம். ஆனாலும் படத்தில் வசனங்கள் தெறிக்கிறது. ஒளிப்பதிவு அவ்வளவு ரம்மியாக இருக்கிறது. படத்தொகுப்பை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்.
மொத்தத்தில், நூர் - பாஸ் மார்க்கை எட்டினாலே மகிழ்ச்சி தான்!