ஹாரர், சஸ்பென்ஸ், த்ரில்லர் படமாக எக்ஸாம் (Exam) எனும் பெயரில் வெளிவந்த ஆங்கிலப் படத்தை சுட்டு, "தாயம்" எனும் பெயரில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, கண்ணன் ரங்க ஸ்வாமியின் இயக்கத்தில், "பியுச்சர் பிலிம்பேக்டரி" பட நிறுவனத்தினர் தமிழ் "படுத்தி"யிருக்கின்றனர்!
ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சிஇஒ வேலை இன்டர்வியூக்கு போகும் இளைஞன், தன் கூட அந்த நேர்முகத் தேர்விற்கு வந்த மூன்று இளம் பெண்கள், நான்கு இளைஞர்கள் உள்ளிட்ட ஏழுபேரை ஒரு அமானுஷ்ய அறைக்குள் வைத்து கார்ப்பரேட் கல்ச்சர் எனும் பெயரில் போட்டுத்தள்ளி விட்டு அந்த வேலையை பிடிக்க முயற்சிக்கிறார். ஒரு மணி நேர கால அவகாசத்தில் அந்த அமானுஷ்ய அறையிலிருந்து யார் உயிரோடு திரும்புகிறார்களோ? அவர்களுக்கே அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் சிஇஒ போஸ்ட் என்பதால், ஹீரோ மற்ற ஏழு பேரையும் தீர்த்து கட்டத் துணிகிறார். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அசுர அவதாரம் எடுக்கும் அவர், ஏழு பேரையும் போட்டுத் தள்ளி விட்டு சிஇஓ போஸ்டிங்கை பிடித்தாரா? அல்லது அந்த ஏழு பேரை கொன்ற விரக்தியில் தானும் தன் கையில் இருக்கும் கத்தியின் வாயிலாக கழுத்தை அறுத்துக் கொண்டு வீழ்ந்தாரா...? எனும் திக் திக் திக் கதைக்கு மேலும் திகிலூட்டும் விதமாக க்ளைமாக்ஸில், "மல்ட்டிபிள் பர்ஸ்னாலிட்டி டிஸார்டர்..." எனும் புது வியாதி ஹீரோவுக்கு, உண்மையில் அவர் ஒருவரே தான், தன் மன அழுத்தங்களை ஏழெட்டு உருவங்களாக பாவித்துக் கொண்டு மற்ற ஏழு கேரக்டர்களையும் போட்டுத் தள்ளியது மாதிரியும், தான் ஒரு பெருங் கொலையாளி... என்பது மாதிரியும் தனக்குத்தானே உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் யாரையும் கொல்லவில்லை என்றும் புது கரடி விட்டு ஒரு வழியாக படத்தை முடிக்கின்றனர். அடி ஆத்தி!
‛கதை திரைக்கதை வசனம் இயக்கம்' சந்தோஷ் பிரதாப், அஸ்வின் அகஸ்டின் எனும் நாயகர் பாத்திரத்தில் நடிக்க, நாயகியர் என்று யாரும் இல்லாமல் ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், ஆகிய மூன்று இளம் பெண்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஜெயக்குமார், "ஜீவா" ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், "காதல்" கண்ணன், அஜய், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா... உள்ளிட்ட தெரிந்த, தெரியாத முகங்களின் பங்களிபபும் படம் முழுக்க ஒரே அறைக்குள் நடைபெறுவதால் படுத்தி எடுக்கும் படி பயங்கரமாய் பளிச்சிட்டிருக்கிறது.
சுதர்சனின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பும் அல்ல, பக்கா தொகுப்பும் அல்ல. பாக்கியராஜின் ஒளிப்பதிவில் காமிரா மொத்தமும் ஒரே அறைக்குள் சுற்றி சுழன்றிருப்பது சுத்த போர். சதீஸ் செல்வத்தின் பின்னணி இசை, ஹாரர் கதைக்கேற்றபடி மிரட்டியிருப்பது ஆறுதல்.
படத்தின் க்ளைமாக்ஸில், "முதல்ல இந்த ரூமை விட்டு வெளிய வா..." என டாக்டர் ஹீரோவை பார்த்து சொல்லும் போது, "முதல்ல தியேட்டரை விட்டு ரசிகனை வெளியே வா... என்பது போல் இருக்கிறது பாவம் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு. இது பலமா? பலவீனமா..? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!
இதையெல்லாம் தாண்டி, மொத்தப் படத்தில் பத்து பதினோறு கேரக்டர்கள் காட்டப்பட்டாலும் அஸ்வின் அகஸ்டீன் எனும் ஒரே ஒரு பாத்திர பெயர் மட்டுமே க்ளைமாக்ஸில் உச்சரிக்கப்படும் புதுமைக்காக (ஆமாம், இதில் என்ன புதுமை? எனக் கேட்காமல்...)., கண்ணன் ரங்கஸ்வாமியின் இயக்கத்தில "தாயம் " படத்தை தைரியமிருந்தால், தயக்கம் இல்லாமல் எல்லோரும் பார்க்கலாம் பயப்படலாம்!
மொத்தத்தில், "தாயம் - பாவம், உருட்டலாம், ஓட்ட முடியாது!"