2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்
தயாரிப்பு - சுஜா மூவீஸ்
இயக்கம் - காயத்ரி ரகுராம்
இசை - அஷ்வின் வினாயகமூர்த்தி, அச்சு
வெளியான தேதி - 19 ஜுன் 2020
நேரம் - 1 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

சினிமாவையே கதைக்களமாகக் கொண்டு நிறைய படங்கள் வருவதில்லை. சினிமா உலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன, அரசியல் இருக்கின்றன, சென்டிமென்ட் இருக்கின்றன. 100 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சினிமாவைக் கதைக்களமாகக் கொண்டு வந்துள்ள படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முன்னணியில் நடித்து பெயரை வாங்கும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நாயகர்கள், நாயகிகளுக்குப் பின்னணியில் இது போன்ற நடனப் பெண்கள், சண்டைக் கலைஞர்கள், துணை நடிகர்கள் எனப் பலரும் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் சினிமாவில் குழு நடனமாடும் ஒரு நடனப் பெண்ணின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி, அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் காயத்ரி ரகுராம்.

காயத்ரி ரகுராம் பள்ளியில் சிறப்பாகப் படிப்பவர். சினிமாவில் குழு நடனமாடியவரின் மகள். வறுமை வாட்டி வதைக்க படிப்பதை விட்டுவிட்டு அம்மாவைப் போலவே சினிமாவில் குழு நடனமாடச் செல்கிறார் தாமரை. முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவர், காயத்ரியை படுக்கை வரை பகிர்ந்து கொள்ள நினைக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு மறுக்கும் காயத்ரி வாய்ப்புகளை இழக்கிறார். மீண்டும் வறுமை துரத்த துபாயில் கிளப்பில் நடனமாடச் செல்கிறார். அங்கும் ஒருவன் காயத்ரியை தவறாகப் பயன்படுத்துகிறான். அங்கிருந்து தப்பித்து வரும் காயத்ரி தன்னைக் காதலிக்கும் டான்ஸர் வசந்தைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் காயத்ரி ஆபாசப்படத்தில் நடித்ததைப் பார்க்கும் வசந்த், குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு மனைவியை வீட்டை விட்டு துரத்துகிறார். நிலை தடுமாறும் காயத்ரி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தெருத்தெருவாக அலைகிறார். அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சினிமாவில் நடனமாடும் பெண்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை முடிந்தவரை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் காயத்ரி. அவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது, காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார்.

நடனப் பெண் தாமரை கதாபாத்திரத்தில் காயத்ரி ரகுராம் நடித்திருக்கிறார். 1992 முதல் 2018 வரை படத்தின் கதை ஒவ்வொரு காலகட்டங்களாய் நகர்கிறது. பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவி கதாபாத்திரம் முதல், கிளைமாக்சில் மற்றவர்கள் வாழ்க்கைக்கும் நல்லது செய்யும் பெண்மணி கதாபாத்திரம் வரை அந்தந்த வயதுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காயத்ரி.

மற்ற கதாபாத்திரங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்யன் இயல்பாய் நடித்திருக்கிறார். காயத்ரின் காதலன், கணவனாக நடித்திருக்கும் வசந்த் குமார் பேசுவது இயல்பாய் உள்ளது, நடிப்புதான் செயற்கையாக இருக்கிறது. காயத்ரி அம்மாவாக நடித்திருக்கும் லதா பாலகிருஷ்ணன், காயத்ரியின் தோழியாக நடித்திருக்கும் சிந்து கிருஷ்ணன் அவர்களது கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ஆகாயம் தாயாக... பாடல் உருக வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளன. அச்சுவின் பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒன்றிப் போய் உள்ளது.

வாழ்க்கையில் தடுமாறி, தடம் மாறிப் போன ஒரு பெண்ணின் கதையை அங்கங்கே தடுமாற்றத்துடனும் சில இடங்களில் தடம் பதிக்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

யாதுமாகி நின்றாய் - தாமரை தான் பெண்குயின்

 

பட குழுவினர்

யாதுமாகி நின்றாய்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓