தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான நடிகர் வித்யூத் ஜம்வால், பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வெளியான ‛கமாண்டோ படத்தின் இரண்டாம் பாகமாக, கறுப்பு பணத்தை பற்றி பேசி, வெளியாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் படம் தான் ‛கமாண்டோ-2‛. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, மத்திய உள்துறை அமைச்சர் மலேஷியாவில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர ‛கமாண்டோ கரண் வீர் சிங் எனும் வித்யூத் ஜம்வால் தலைமையில் ஒரு குழு அனுப்புகிறார். இந்த குழுவில் வித்யூத்திற்கு துணையாக ஏசிபி பக்தாவர் எனும் பிரீடி தருவாலா, இன்ஸ்பெக்டர் பவானா ரெட்டி எனும் அடா சர்மா மற்றும் ஜாபர் ஹூசைன் எனும் சுமித் குலாதியும் செல்கின்றனர். குற்றவாளி என கருதப்படும் விக்கி சத்தாவின் மனைவி மரியா எனும் இஷா குப்தா, தன் கணவர் விக்கியை கைது செய்ய கரணுக்கு உதவுவதாக கூறுகிறார். ஆனால் விக்கியை கைது செய்ய போகும்போது உண்மையான விக்கி அவர் இல்லை என்பது தெரியவருகிறது. அப்படியானால் உண்மையான கறுப்பு பண குற்றவாளி விக்கி யார்...?, கரண், குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வந்து கறுப்பு பணத்தை மீட்டெடுத்தாரா...? என்பது ‛கமாண்டோ--2 படத்தின் பரபரப்பான மீதி ஆக்ஷ்ன் கதை.
கமாண்டோ கரணாக வித்யூத், ஆக்ஷ்னில் மிரட்டியிருக்கிறார். நடிப்பு எடுபடவில்லை என்றாலும் படம் முழுக்க அவரது ஆக்ஷ்ன் சாகசங்கள் அனல் பறக்கிறது. கூடவே ரொமான்ட்டிக் காட்சிகளிலும் கொஞ்சம் ரொமான்ஸ் எட்டி பார்த்து இருக்கிறது.
நாயகி அடா சர்மா, இஷா குப்தா, சுமித் குலாதி, பிரீடி தருவாலா உள்ளிட்டவர்களும் தங்களது ரோலை அறித்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
மன்னன் ஷா, கவுரவ் ரோஸின், பிரசாத் சாஸ்தே ஆகியோரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கின்றன.
சிரந்தன் தாஸின் ஒளிப்பதிவு பளீச் பதிவாக இருக்கிறது. படத்தொகுப்பும் பக்கா தொகுப்பாக உள்ளது.
படத்திற்கு பெரிய பலமே வித்யூத்தின் ஆக்ஷ்ன் தான். ஆக்ஷ்ன் காட்சி என்று வந்துவிட்டால் மனிதர் தரையிலேயே இருப்பது கிடையாது. அந்தளவுக்கு சும்மா பறந்து பறந்து பரபரப்பாக்குகிறார். கூடவே ரசிகனையும்...! ஸ்டண்ட் இயக்குநருக்கு பாராட்டுகள்.
கறுப்பு பணத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குநர் தேவன் போஜனி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‛கமாண்டோ-2, முதல்பாதி பரபர ஆக்ஷ்ன் என விறுவிறுப்பாகவும், பிற்பாதி சற்றே மெதுவாக நகரும் திரைக்கதையும் ரசிகனை வெறுப்பேற்றுகிறது. படம் முழுக்க ஆக்ஷ்ன், ஆக்ஷ்ன் என ஒன்றை வைத்து மட்டுமே படத்தை ஓட்டி விடலாம் என்று இயக்குநர் தப்பு கணக்கு போட்டு விட்டார்.
மொத்தத்தில், ‛கமாண்டோ-2 - ஆக்ஷ்ன் பிரியர்களுக்கு ‛வாவ், மற்றவர்களுக்கு...?!