96,96

96 - பட காட்சிகள் ↓

96 - சினி விழா ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர்
இயக்கம் - பிரேம்குமார்
இசை - கோவிந்த் வசந்தா
தயாரிப்பு - மெட்ராஸ் என்டர்பிரைசஸ்


சினிமாவில் எப்படிப்பட்ட படங்களை வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம், ஆனால், காதல் படங்களைக் கொடுப்பதற்கு தனி உணர்வு வேண்டும். காதலில் முழுமையாகத் திளைத்தவர்களுக்கு மட்டுமே ரசனையான காதல் படங்களைக் கொடுக்க முடியும். அப்படி ஒரு காதல் படத்தை தன்னுடைய முதல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை ஒவ்வொரு காட்சியிலும் காதலில் மூழ்க வைத்திருக்கிறார் இயக்குனர். உள்ளுக்குள் தேக்கி வைத்துள்ள காதலை வெளிக்காட்டுவது சாதாரண விஷயமல்ல. அதை விஜய்சேதுபதி, த்ரிஷா, அவர்களின் பள்ளிப் பருவ காலத்து கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா, கௌரி ஜி கிஷன் ஆகியோர் அவ்வளவு உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார்கள்.

கே. ராமச்சந்திரன், எஸ். ஜானகிதேவி இருவரும் தஞ்சாவூரில் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள். இருவருக்குமே உள்ளுக்குள் காதல். ஜானகி தனக்குள் இருக்கும் காதலை அவ்வப்போது காட்டிக் கொண்டாலும் ராமச்சந்திரனுக்கு அதை வெளிக்காட்ட ஒரு பயம். ஜானகி அருகே வந்து பேசினால் ராமச்சந்திரனுக்கு மயக்கம் வராத குறை. இந்த சூழ்நிலையில் பத்தாவது படித்து முடித்ததும் ராமச்சந்திரன் யாரிடமும் சொல்லாமல் தஞ்சாவூரை விட்டு சென்னைக்குச் சென்று விடுகிறான்.

22 வருடங்கள் ஓடோடி விடுகிறது. டிராவல் போட்டோகிராபராக இருக்கும் ராமச்சந்திரன் ஒரு நாள் தன் பள்ளி வழியே செல்கிறான். மீண்டும் பழைய நினைவுகள் வாட்டி எடுக்கிறது. நண்பனுடன் தொடர்பு கொள்கிறான். பள்ளி காலத்து நண்பர்கள் மீண்டும் 'ரீயூனியன்' ஆக சந்திக்க முடிவு செய்கிறார்கள்.

திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலான ஜானகி தேவி அந்த சந்திப்புக்கு வருகிறாள். ராமச்சந்திரனும் அவளும் சந்திக்கிறார்கள். தங்களது அந்தக் கால காதலை ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் இருந்த அந்தக் காதல் 22 வருடங்களாக அப்படியே இருக்கிறது. அந்தக் காதல் ஞாபகங்கள் அவர்களை என்ன செய்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இது நிச்சயமாக வழக்கமான சினிமா காதல் கதை அல்ல. வெற்றி பெற்றால் மட்டுமே அது காதல் அல்ல, திருமணத்தில் முடிந்தால் மட்டுமே அது காதல் அல்ல, காதலித்தவர்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றாலும், அந்தக் காதல் என்றுமே மனதில் இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக, நெகிழ்வாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கே. ராமச்சந்திரன் ஆக விஜய் சேதுபதி. எப்படித்தான் இப்படி தனக்கான கதாபாத்திரங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறாரோ விஜய் சேதுபதி. இல்லை, அவரைத் தேடிப் போய் இயக்குனர்கள் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைக் கொடுக்கிறார்களோ ?. மனிதர் எப்படியெல்லாம் நடிக்கிறார். ரியூனியன் சமயத்தில் த்ரிஷாவை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக மறைந்திருந்து கொண்டு ஒரு தவிப்பை வெளிப்படுத்துகிறாரே.....ப்ப்ப்ப்ப்ப்ப்பா. அவரும் த்ரிஷாவும் மேற்கொள்ளும் அந்த ஒரு இரவுப் பயணத்தில் அவர் காட்டும் முகபாவம், உடல்மொழி, வசன உச்சரிப்பு அனைத்திலும் காதலியைப் பிரிந்த ராமச்சந்திரனின் மொத்த காதலும் நாடி, நரம்பு, ரத்தம் ஆகியவற்றில் கலந்து விட்டதோ என்ற மாதிரி நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அட, த்ரிஷாவுக்கு இவ்வளவு சிறப்பாக நடிக்கத் தெரியுமா?. சினிமாவில் அறிமுகமாகி இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவருடைய நடிப்பை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கூட அவரை அழகுப் பதுமையாகத்தான் காட்டியிருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அவ்வளவு சிம்பிளான தோற்றத்தில் நடிப்பில் மொத்த காதலையும் தன் நடிப்பில் இறக்கியிருக்கிறார். இரண்டே இரண்டு ஆடைகள்தான் படம் முழுவதும். ரியூனியன் நடக்கும் ஹோட்டலுக்கு வந்த பிறகு, விஜய் சேதுபதியைத் தேடும் அவருடைய கண்கள் ஆயிரம் கவிதைகளைச் சொல்கின்றன. தனக்கே, தனக்கான முதல் வெற்றியை, முழுமையான பாராட்டை இந்தப் படத்தின் மூலம் பெறுவார் த்ரிஷா.

பள்ளிப் பருவத்து விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர், த்ரிஷாவாக கௌரி ஜி கிஷன். இருவரது நடிப்பிலும் அப்படி ஒரு யதார்த்தம். எந்த ஒரு இடத்திலும் பள்ளிப் பருவ காதலை வரம்பு மீறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களது தோழியாக வரும் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் அசத்தியிருக்கிறார். இரண்டே இரண்டு காட்சியில் பழைய நகைச்சுவை நடிகர் ஜனகராஜ். தேவதர்ஷினி, பக்ஸ் கொஞ்சமே வந்தாலும் நல்ல நட்புக்களாக தோள் கொடுக்கிறார்கள்.

ஜானகிதேவி சிறப்பாகப் பாடுபவர். அடிக்கடி வகுப்பிலும் பாடுவார். 90களின் கதை என்பதால் அவர் பாடுவது எல்லாமே இளையராஜா பாடல்கள்தான். எந்த இசையும் இல்லாமல் இனிமையான குரலில் வரும் அந்தப் பாடல்கள் தனி அழகு. அதிலும் 'யமுனை ஆற்றிலே....' பாடல் வேண்டுமென ராமச்சந்திரன் கேட்பதும் அதைக் கடைசி வரை பாடாமல் ஜானகி தவிர்ப்பதும் காதலின் தாகம்.

இடைவேளைக்குப் பின்னர் விஜய்சேதுபதி, த்ரிஷா இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அதிகம் இருப்பது சற்றே அலுப்பைத் தருகிறது. இருப்பினும் அப்போது வரும் பிளாஷ்பேக்கில் சில டிவிஸ்ட்டுகளை வைத்து அதைச் சமாளிக்கிறார் இயக்குனர்.

இளையராஜா பாடல்களை அடிக்கடி பயன்படுத்தியதாலோ என்னவோ, அவற்றி மீறி கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மிஞ்ச முடியவில்லை. உணர்வு பூர்வமான படம் என்பதால் கதாபாத்திரங்களின் உணர்வுகளை குளோசப் காட்சிகள் மூலம் நமக்குள் செலுத்திவிடுகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள்.

96 - காதல் 100/100

 

96 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

96

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓