நாயகன் - நானி
நாயகி - கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் - திரிநந்த ராவ்
தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் நானி, இம்முறையும் கலர்புல்லான காதல் கதையுடன் களம் காண்கின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் திரிநந்த ராவ், இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பாபு(நானி) எனும் பொறியியல் கல்லூரி மாணவன், படிப்பை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றான், நாயகி கீர்த்தி(கீர்த்தி சுரேஷ்)-ஐ பார்த்ததும் காதலில் விழும் பாபு அவளை காதல் டார்ச்சர் செய்து இறுதியில் சம்மதமும் வாங்குகின்றார். கீர்த்தியுடன் டூயட் பாடும் பாபுவிற்கு வழக்கம் போல் வில்லனாகிறார் காதலியின் தந்தை. தந்தையின் சம்மதத்துடன் கீர்த்தியை பாபு கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
மிகவும் பழக்கபட்ட காதல் கதை தளத்தில் உருவான நேனு லோக்கல் படத்தை தனது மாறுபட்ட திரைக்கதையால் வித்தியாசப்படுத்திக்காட்ட முயற்சித்திருக்கின்றார் இயக்குனர் திரிநந்த ராவ். வழக்கமான கதையாக இருப்பினும் சிரிப்பைத்தூண்டும் நகைச்சுவை காட்சிகளும், காதல் காட்சிகளும் திரைக்கதைக்கு புது வேகம் கொடுக்கின்றனர்.
படத்தின் மிகப்பெறும் பலம் நாயகன் நாணி. இதுவரை காணப்படாத வகையில் ஹீரோயிசம், வசன உச்சரிப்பு என மாஸ் ஹீரோவாக மாறியிருக்கின்றார் நானி. தனித்துவமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நானி மீண்டும் தனது முத்திரையை பதித்து விட்டார்.
நகைச்சுவை, கீர்த்தியுடன் ரொமேன்ஸ் என செல்கிறது முதல் பாதி. நாணி கீர்த்தி சுரேஷுக்கிடையேயான கெகிமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது. காவல் நிலையத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளும், திருமணத்திற்கு முந்தைய கலாட்டா காட்சிகளும் திரையரங்கில் சிரிப்பலைகளை உண்டாக்குகின்றன. கீர்த்தியின் தந்தையாக வரும் ஹிந்தி நடிகர் சச்சின் கெடேகர் தனது வில்லதனமான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றார்.
சினிமா சூபிஸ்த மாவா எனும் வெற்றிப்படம் கொடுத்த திரிநந்த ராவ் அதே பார்முலாவை நேனு லோக்கல் படத்தில் பயன்படுத்தியிருப்பது சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக திரைக்கதை நகர்விற்கே வலுக்கட்டாயமாக இரண்டாம் பாதியில் காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது பலவீனம். ரசிகர்களின் யூகத்திற்கேற்ப இறுதிக்காட்சிகள் முடிகின்றன. ரகு பாபு, வெண்ணிலா கிஷோருக்கு குறிப்பிடும்படியான காட்சிகள் இல்லை. பூஷ்னி கிருஷ்ண முரளி தனது வழக்கமான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றார்.
பின்னணி இசையில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பாடல்களில் ஆட வைக்கின்றார். தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தின் தரத்தில் தாராளம் காட்டியுள்ளார் என்பது திரையில் தெரிகின்றது. நாணிக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டுள்ள வசனங்களுக்கு தனது உடல் மொழியால் கூடுதல் பொலிவை சேர்த்துள்ளார் நாணி. இறுதிக்காட்சி வசனங்களும் குறிப்பிடும் படி அமைந்துள்ளன. எடிடிங் சுமார் ரகமே.
தனது முந்தைய படத்தில் சொன்ன அதே மாமனார்-மருகன் கதையை இப்படதிலும் இயக்குனர் கையாண்டிருக்கின்றார். இருப்பினும் மாஸ் ஹீரோவாக நானியை திரையில் மிளிர செய்து தனது தவறை மறைத்துக் கொண்டுள்ளார். நகைச்சுவை கலந்த நடிப்பால் திரையரங்களில் ரசிகர்களை கட்டிபோடும் நானியை இன்னும் சரியாக கையாள தவறிவிட்டார் இயக்குனர். இருப்பினும் கொடுத்த பணியை சிறப்பாக செய்து தனக்கான திரையரங்கில் கூட்டம் சேர்க்கின்றார் நானி.
மொத்தத்தில், பழக்கப்பட்ட கதை பாதகமில்லை எனில் நேனு லோக்கல் பொழுதுபோக்கும்.