விமர்சனம்
கல்கி சினி விமர்சனம்
பறந்து செல்ல வா
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்துவது தற்போது தமிழ்த் திரை உலகின் ட்ரண்ட். இந்தப் படம் சிங்கப்பூரில் அத்தனை அழகையும் ஒட்டுமொத்தமாக வடித்துக் கொடுத்திருக்கிறது. 120 ரூபாய் செலவில் சுமார் இரண்டே கால் மணி நேரத்தில் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.
சுற்றுலாவுக்கு நடுவில் மெல்லிசாக கதாநாயகன் லூத்ஃபுதின் பாஷா போல மெல்லிசாக - கதையும் கொஞ்சம் இருக்கிறது. அது சரி, யார் அந்த லூத்ஃபுதின் பாஷா? நடிகர் நாசரின் கலையுலக வாரிசுதான் இவர். நாசரின் கூர்முகமும், விசித்திரமான மூக்கும் அச்சு அசலாக இவரிடம் இருக்கிறது. காலக்கிரமத்தில் நடிப்பும் கற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
ஏரியில் ஷாட்கள் பிரமிப்பூட்டுகின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான படப்பிடிப்பு.
மாநிறத்துக்கும் சற்றுக் கம்மியான ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நடிக்க இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அடேயப்பா! இன்னொரு கதாநாயகியான அந்த சீன நடிகை நரேல் கேங் அபாரமான நடிப்பு. ஆனால் மற்றவருடன் நிச்சயமான ஆணை - தன்னை விரும்பாத ஒருவரை விழுந்து விழுந்து காதலித்து மடைமாற்றுவது நெருடலாக இருக்கிறது. ரெமோவின் உல்டாதானே இது!
ஜோ மல்லூரி நல்ல நடிகர்தான். அவரை டம்மி பீஸாக்கியிருப்பது வேதனை. பொன்னம்பலம் அந்தக் கால வில்லன்களைப் போல ஓவர் ஆக்டிங் செய்து அடிக்கடி கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஃப்யூஷன் மேரேஜ் என்ற கோட்பாட்டை ஒரு பாத்திரம் முன்வைக்கிறது. எவ்வளவு தூரம் அது நமக்குச் சரிபட்டுவரும் எனத் தெரியவில்லை.
தமக்குத் தாமே என்று நடைப்பயணம் போகலாமே போன்ற நக்கல் நையாண்டி வசனங்கள் புன்னகை ஏற்படுத்துகின்றன. அதேபோல இணையத்தில் உலவும் ஃபேக் ஐடிகள் பற்றிய விவரணைகளும் ஜோர். நைட்டி மேல் துப்பட்டா அணியும் நங்கைகளையும் லேசாகக் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்து மது அருந்துவதை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே காண்பிக்கிறார்கள். அதிலும் பெண்கள் சர்வசாதாரணமாகக் கோப்பையில் மதுவை உறிஞ்சியபடி வலம் வருகிறார்கள். ஓவர் டோஸாகிக் கதாநாயகி மட்டையாகும் காட்சியும் உண்டு. கோராமைடா சாமி!
கதை மெதுவாகவே நகர்கிறது. சாண்டில்யன் நாவலை எந்த இடத்திலிருந்து படித்தாலும் கதை விளங்குவதைப்போலப் படத்தை எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் புரிந்து கொள்ளலாம்.
பறந்து செல்ல வா; நகர்ந்து சென்று போகிறது!
திரையரங்கில் ரசிகர் சந்தோஷின் கருத்து: சிங்கப்பூர் காட்சிகள் சூப்பர். கூடவே சிங்கப்பூர் அம்மணிகளும் ஹி...ஹி..















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!