இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளரி ஷிண்டே இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் ‛டியர் ஜிந்தகி. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
படத்தின் கதையே கைரா எனும் ஆலியா பட்டை சுற்றியே நகருகிறது. ஒளிப்பதிவில் மிகவும் ஆர்வம் கொண்ட கைரா, பெற்றோர்களுடன் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மும்பையில் தனியாக வசித்து வருகிறார். கைராவின் லட்சியமே சினிமாவில் ஒருபடம் இயக்க வேண்டும் என்பது தான். அதற்கான முயற்சியில் இறங்கும் கைராவிற்கு இயக்குநர் ரகுவேந்திரா எனும் குணால் கபூரிடத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி இருவரும் உருகி உருகி காதலிக்கிறார்கள். குணாலை கரம்பிடிக்கலாம் என்று காத்திருந்த கைராவிற்கு ஒரு பேர் அதிர்ச்சி. குணால், ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயப்பட்டவர். இதனால் நிலை குலைந்து போகிறார் ஆலியா. இந்த நிலையில் தன்னை மீட்க மனோதத்துவ நிபுணரான டாக்டர் ஜகாங்கீர் கான் எனும் ஷாரூக்கானை அணுகிறார். அங்கு ஷாரூக்கான், ஆலியாவிற்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளிக்கிறார். அவரிடம் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களையும் ஒரு நண்பர் போல் பகிர்ந்து கொள்கிறார். ஷாரூக்கானின் அன்பு, ஆலியாவை காதலிக்க தூண்டுகிறது. ஆலியா, ஷாரூக்கிடம் காதலை சொன்னாரா...?, ஷாரூக்கான், ஆலியாவின் காதலை ஏற்று கொண்டாரா...? என்பது ‛டியர் ஜிந்தகி படத்தின் மீதிக்கதை.
மனோதத்துவ டாக்டராக ஷாரூக்கான் அருமையாக நடித்திருக்கிறார். ஆலியாவிற்கு ஏற்பட்ட உணர்வு போன்று பெண்களை மெய்யாலுமே காதலிக்க தூண்டும் அற்புதமான மனிதராக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் ஷாரூக்.
கைராவாக ஆலியா பட், அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால் அதேஅளவு அழகு நடிப்பில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் தன் ரோலை ஓரளவுக்கு சிறப்பாக செய்திருக்கலாம்.
ஷாரூக், ஆலியா போன்றே குணால் கபூர், அங்கத் பேடி, அலி ஜாபர் உள்ளிட்டோரும் தங்களது பாத்திரமறிந்து சிறப்பாக பளீச்சிட்டிருக்கின்றனர்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் கெளரி ஷிண்டே, இம்முறை தனது மேஜிக்கை காட்ட தவறிவிட்டார். படத்தின் முதல்பாதி அருமையாக இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம்பாதி மிகவும் இழுவையாக இருக்கிறது. படத்தின் பெரிய மைனஸே அது தான். அமித் திரிவேதியின் இசையும், லக்ஷ்மண் உத்தேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், அதை எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை படமாக அல்லா பாடமாக சொல்லியிருக்கிறது இந்த டியர் ஜிந்தகி, அதை காண விரும்புவர்கள் இப்படத்தை காணலாம்.
மொத்தத்தில், ‛டியர் ஜிந்தகி - ‛படம் சொல்லும் பாடம்!