2.5

விமர்சனம்

Advertisement

"வேலையில்லா பட்டதாரி" படத்தின் தொடர்ச்சியாக, பகுதி-2 ஆக, "வி கிரியேஷன்ஸ்" கலைப்புலி எஸ்.தாணு & "வொண்டர் பார் பிலிம்ஸ்" தனுஷ் தயாரிப்பில், தனுஷே கதை, வசனம், எழுதி, கதாநாயகராகவும் நடிக்க, அவரது கொழுந்தியாள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை, இயக்கத்தில், வந்திருக்கும் திரைப்படம் தான் "வேலையில்லா பட்டதாரி - 2".

கதைப்படி, காதலித்து கரம் பிடித்த ஆசை மனைவி ஷாலினி - அமலா பால், கண்டதற்கும் காச்மூச் என கத்தி, கண்டிஷன் போட, அந்த அதட்டல் உருட்டலின் காரணம் புரியாது வெறுப்பில் இருந்தாலும் ரகுவரன் - தனுஷ், தான் இன்ஜினியராக வேலை செய்யும் அனிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ரொம்பவும் விசுவாசமாக இருந்து டெல்லி வரை சென்று, "இன்ஜினியர் ஆப் த இயர்" விருதெல்லாம்வாங்குகிறார். அதுவே, அவரை மிகப் பெரிய கட்டுமானக்கலை நிறுவனமான வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி வசுந்தரா - கஜோலுக்கு எதிராக்குகிறது.

அதன் விளைவு மீண்டும் தனுஷை வி.ஐ.பி அதாங்க, வேலையில்லா பட்டதாரி ஆக்குகிறது. அப்புறம்? அப்புறமென்ன..? தனுஷ் எப்படி, தன் வி.ஐ.பி பிரண்ட்ஸ்களுடனும், பர்ஸ்ட் பார்ட்டில் இறந்து போன தன் தாய் சரண்யாவின் ஆசியுடனும், அப்பா சமுத்திரகனியின் அனுசரனையுடனும், எதிரி கஜோலை ஜெயித்து, மனைவி அமாலாபாலின் அன்புக்கும் பாத்திரமாகிறார். அதற்கு இயற்கையும் எப்படி, எப்படி எல்லாம் ஒத்துழைக்கிறது என்பது தான் "வேலையில்லா பட்டதாரி - 2" படத்தின் கரு, கதை, களம் காட்சிப்படுத்தல் எல்லாம்!

தனுஷ், ரகுவரனாக முதல் பார்ட்டில் வாழ்ந்தது போலவே தன்னை தாழ்த்திக் கொண்டு வாழ முயற்சித்து, பாதி தோற்று பாதி ஜெயித்திருக்கிறார். அதற்குக்காரணம், முதல் பார்ட்டில் டைட்டிலுக்கு ஏற்றபடி வேலையில்லாத தனுஷ், இதில் ரொம்பவே வேலை பார்த்து, "இன்ஜினியர் ஆப் த இயர்" விருதெல்லாம் வாங்குவதும், வேலை கிடைத்த பின்பும் சும்மா குடித்துவிட்டு வந்து மனைவியிடம் ஏச்சும் பேச்சும் வாங்குவதும் மட்டுமின்றி, காரணமே இன்றி இல்லாத தத்துவமெல்லாம் பேசிக் கொண்டு கஜோலிடம் மல்லுக்கு நிற்பதும் கூட காரணமாக இருக்கலாம். பாவம்!

ஆனாலும் "ஒரு ஆண் ஒரு பெண்ணை விட உடல் அளவில் வலுன்னு சொல்லிக்கிறாங்க... ஆனா, ஒரு பெண் மனதளவில் ஆண்களை விட மிகவும் பலசாலி", "நான்சிங்கத்துக்கு வாலா இருப்பதை விட பூனைக்கு தலையா இருக்கறதுதான் கெளரவமா கருதுறேன்..." என மிடுக்கு காட்டுவது, அப்பா சமுத்திரகனியின் பேச்சைக் கேட்டு கோபமாக இருக்கும் மனைவியிடம் ஒரு முழம் பூவுடன் "ஷாலினி, காலி நீ..." என்றபடி சமாதானம் செய்ய நெருங்கி, மூக்குடைப்பட்டு திரும்பி, "இந்த காலத்துல் ஒரு பவுன் தங்க சங்கிலியை கொடுத்தாலே பத்தாதுன்னு தூக்கி அடிப்பாங்க... ஒரு முழம் பூவைக் கொடுத்தா சும்மா இருப்பாளா..?" எனப் புலம்புவது, "நீ மாமியாரா இருக்கிற வரைக்கும் நான் சாமியாரா போக வேண்டியது தான்.." என மாமியாரைப் பார்த்து கமென்ட் அடிப்பது, "மேடம்,அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிரூள் உய்த்துவிடும்" என அடிக்கடி திருக்குறள் சொல்வது என சகலத்திலும் ஜமாய்த்திருக்கிறார் தனுஷ். அதற்காக தனுஷை பாராட்டலாம்!

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே ஆரம்பம் தொட்டு வில்லியாகவும், க்ளைமாக்ஸில் ஹீரோவின் பேச்சைக் கேட்டு திடீரென நல்லவராகவும் மாறும் வசுந்தரா கஜோல் வசீகரம் என்றாலும் ஓவர் மேக் அப்பில் ஆங்காங்கே ரசிகன்ன பயமுறுத்துகிறார். அம்மணி க்ளைமாக்ஸில் தண்ணீரால் திருந்தினரா? தனுஷால் திருந்தினாரா..? என்பது புரியாத புதிர்.

அமலா பால் தனுஷின் மனைவி ஷாலினியாக காச்மூச் என கத்தியபடி கண்ணாமூச்சி காட்டிப் போகிறார்.

கேரக்ட்ர ஆர்ட்டிஸ்டுகள் மீது அப்படி என்ன வருத்தமோ தனுஷூக்கு, தன் அண்ணன் செல்வராகவன் தவிர, இயக்குனர்கள் பாலாஜி மோகன், சிட்டிசன் சரவண சுப்பையா, சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குநர்களையும் படம் முழுக்க பாத்திரங்களாக்கியிருக்கிறார் மனிதர். அவர்களும் கஜோலின் செயலாளராக வரும் ரைசா, தனுஷின் அம்மா சரண்யா, மாமியார் மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும் , மகனுடன் ஒரு நண்பனாய் பழகும் சமுத்திரகனி ஹாசம்.

ஷமீர் தாகிரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சீனிலும் காஸ்ட் லீ ஒவியப்பதிவென்பது பெறும் ஆறுதல்.

இசையாளர் ஷான் ரோல்டனின் "வி.ஜ.பி......" , "என் பச்சை மரம் பிச்சுக்கிச் சே...", "இறைவனாய் தந்த இறைவியே..." உள்ளிட்ட பாடல்கள் இசை, பின்னணி இசையைக் காட்டிலும் ஆங்காங்கே ஒலிக்கும் அனிருத்தின் பகுதி - 1-ன் தீம் மியூசிக்ஸ் கவனம் ஈர்க்கிறது.

தனுஷ் தனது கதை வசனத்தில், செளந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை இயக்கத்தில் படம் முழுக்க மிஸ் ஆகும் கன்டினியூட்டி காட்சிகள் (உதாரணத்திற்கு ஆரம்ப காட்சியில் தன் ஓட்டை மொபட்டில் ருத்ராட்சை அணிந்தபடி ஒரு சீனிலும் அடுத்த சீனில் அது இல்லாமலும் வரும் தனுஷ்...)ஒரு பக்கம் குறையாக தெரிந்தாலும் மழை வெள்ளத்தால் வில்லி மனசு மாறிடும் க்ளைமாக்ஸ் அவ்வளவு எடுப்பாக இல்லாதது வருத்தம்.

ஒரு மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் பணக்கார பெண் முதலாளி தன் கம்பெனியில் வேறு ஒரு சிறிய நிறுவனத்து சிறந்த இன்ஜினியரை பணியமர்த்த விரும்பி அழைக்கிறார். அங்கு மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கப்போகும் நாயகர், அவரை அவமரியாதை செய்து விட்டு வருவதும் நம்பும்படியாக இல்லை. அதற்கு பதிலடியாக அந்த பணக்கார பெண் முதலாளி உலகத்தில் வேறு வேலையே இல்லாத மாதிரி அந்த இளம் இன்ஜினியரை விட்டேனா பார்... என துரத்தி, துரத்தி துகிலுரிப்பதும் லாஜிக்காக இல்லை... இப்படி, மொத்தக் கதையையும் சினிமாட்டிக்காக எடுத்து விட்டு, க்ளைமாக்ஸை மட்டும் யதார்த்தமாக மழையால் வெள்ளத்தால் வில்லி மனசுமாறுவதாக முடிக்க முயன்றிருப்பதும் அழகாக இல்லை.

ஆக மொத்தத்தில், வேல்ராஜின் இயக்கத்தில், அனிருத்தின் இசையமைப்பில் வந்த "வேலையில்லா பட்டதாரி" மாதிரி இல்லை "வேலையில்லா பட்டதாரி - 2" என்பது ஏமாற்றமே!

 

பட குழுவினர்

வேலையில்லா பட்டதாரி 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓