1982-ம் ஆண்டு வெளிவந்த "மணல் கயிறு" படத்தின் இரண்டாம் பாகமாக அதில் பிரதான பாத்திரமேற்ற விசு - எஸ்.வி.சேகர்... உள்ளிட்டோர் இதிலும் முக்கிய பங்காற்ற, சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் கதாநாயகராக நடிக்க, பூர்ணா அவரது ஜோடியாக நடிக்க, மதன்குமார் இயக்கத்தில் ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ்" என்.இராமசாமி தயாரிப்பில் காமெடியும், கலகலப்புமாக வந்திருக்கிறது "மணல் கயிறு-2".
தன் எட்டு கண்டீஷன்களில் ஒன்றுக்கு கூட ஒத்து வராத பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் கல்யாண புரோக்கர் நாரதர் நாயுடு என்பதால் அவர் மீது 34 ஆண்டுகளாக தீராத குரோதம் மற்றும் விரோதத்தோடு இருக்கும் கிட்டு மணி, பிஸினஸ், பிரண்ட்ஷிப் என பிஸியாய் அலையும் தன் ஒரே மகளுக்கு நாரதர் நாயுடு இல்லாது, நல்லதொரு மணமகனை தேடிப் பிடிக்க வேண்டும் என கோதாவில் குதிக்கிறார்.
கிட்டு மணியின் மகளும் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் அன்று, அப்பா போட்ட கண்டீஷன்களைக் காட்டிலும் "பகீர் "ரகத்தில் எட்டு கண்டீஷன்களை எடுத்து விடுகிறார். பத்தாயிரம் திருமணங்களை சக்ஸஸ் புல்லாய் நடத்தி வைத்த பெருமை மிகு கல்யாண புரோக்கர் நாரதர் நாயுடுவின் கைங்கர்யம் இல்லாது, அந்த எட்டு கண்டீஷன்கள் அத்தனைக்கும் ஒத்து வரும் மணமகன், கிட்டுவுக்கும் அவரது ஒற்றை மகளுக்கும் கிடைத்தாரா? அல்லது நாரதர் நாயுடு, கிட்டுவின் மகள் திருமணத்திலும் சபாஷ் நாயுடு எனும் அளவிற்கு புகுந்து புறப்பட்டாரா?, கிட்டு மகளின் பகீர் ரக எட்டு கண்டீஷன்களும் என்னென்ன?, அவை அத்தனைக்கும் சுத்தமாய் ஒத்து வராத நாரதர் நாயுடு வழி மணமகன் எப்படி? எட்டு கண்டீஷன்களையும் புட்டு போட்டு பொளக்கிறார்...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், நிறைய காமெடியாகவும் 34 -ஆண்டுகளுக்கு முன் வந்த "மணல் கயிறு" பட பாணியிலேயே சற்றே மார்டனாக பதில் திரிக்க முயன்றிருக்கிறது "மணல் கயிறு-2".
மணமகனாக, கதாநாயகனாக கிட்டு மணி - எஸ்.வி.சேகரின் மருமகனாக, அவரது நிஜமகனான அஸ்வின் சேகர் கச்சிதம். கதைப்படி, சேகரின் மகள் பூர்ணா போடும்எட்டு கண்டீஷன்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லாது எட்டுக்கும் ஏகப் பொருத்தம் என தன்னைக் காட்டிக் கொள்ள, அஸ்வின் செய்யும் தகிடுதித்தங்கள், சாகசங்கள் எல்லாம் ஹாஸ்யம். என்ன, கதைப்படி, என்ன தான் மாப்பிள்ளை கேரக்டர் என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் உடம்பை குறைத்துக் கொண்டிருந்தார் என்றால், அன்றைய மணல் கயிறு அப்பா சேகரை பீட் பண்ணியிருக்கலாம் அஸ்வின். ஆனாலும், பிற பாத்திரங்களால் பெரிதாய் குறையாய் தெரியவில்லை இவர்.
கிட்டு மணியின் செல்ல மகளாக பூர்ணா, மப்பும் மந்தாரமாய் ரொம்ப நாளைக்கப்புறம் பூர்ணா, படத்தில் அவர் போடும் எட்டு கண்டீஷன்கள் மாதிரியே செமன்னா. (எஸ்.வி.சேகரால் தன் மகன் அஸ்வினின் உடம்பை குறைக்கச் சொல்லி குறைக்க வைக்க முடியாவிட்டாலும், அவருக்கு ஏற்றார் போன்று குண்டடித்த பூர்ணாவை இப்பட நாயகியாக பிடிக்க முடிந்த மைக்காக, சேகரை பாராட்டலாம்...)
திருமண புரோக்கர் நாரதர் நாயுடுவாக விசு, அசட்டு கிட்டு மணியாக எஸ்.வி சேகர், அவரது இல்லாளாக தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ, செம்புலி ஜெகன், டெல்லி கணேஷ், ஷாம்ஸ், ஸ்வாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, ஜார்ஜ் உள்ளிட்டவர்களில் கிட்டு_சேகரின் அசட்டுத்தன ஏமாற்றங்களும், நாரதர் - விசுவின் நன்மை கலகங்களும் ஸ்வீட் டீ ஆன்ட்டி ஜெயஸ்ரீ மாதிரி சுவாரஸ்யம். ஆனாலும், விசுவின் கணீர் குரல், ஏதேதோ(வயது)காரணங்களால் காணாமல் போயிருப்பது வருத்தம்.
தரணின் இசையில், அஸ்வின் சேகர், அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்ட எல்லோரும் இன்றைய டிரண்டுக்கு ஏற்றபடி பாடி, ஆடியிருக்கும் ஒ ராஜாத்தி ராஜன்... , யாரு பெத்ததோ என்ன பண்ணுதோ..., அடியே தாங்க மாட்டே... , முதல் மழை விழுந்ததே... , வேட்டிய தூக்கிக் கட்டு.. உள்ளிட்ட பாடல்கள் வெவ்வேறு வித ரசமஞ்சரி. அனிரூத் பாடலில் இளம் இசைஞர் தரணும் கிடாருடன் தலை காட்டியிருப்பதும், அனிரூத்தும் இவரது இசையில் பாடி ஆடியிருப்பதும் ப்ளஸ்.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் காட்சிப் பதிவு. அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு இல்லை என்றாலும் ரசிகனை படுத்தாத தொகுப்பு.
எஸ்.வி.சேகரின் கதை, திரைக்கதையில் டிராமாத்தனம் அதிகம் என்றாலும், கலர்புல் காமெடியை ரசிக்கலாம்.
மதன்குமாரின் வசனம் மற்றும் இயக்கத்தில், சில டிரமாடிக் காட்சிகள் "ப்ச்" என உதடு பிதுக்க வைத்தாலும், "புரியாத பிரியம் பிரியும் போது தான் புரியும்...", "நீ கொஞ்சம் இறங்கி வந்திருந்தா, நான்., இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்க வேண்டியதில்லை....", "இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கூட பேசினா தீர்ந்துடும், பட், புருஷன் பொண்டாட்டி பிரச்சினை..... பேச பேச வளர்ந்துகிட்டு தான் போகும்..'', அந்த சைடு இழுக்குறப்போ, இந்தப் பக்கமும், இந்த பக்கம் இழுக்குறப்போ அந்தப் பக்கமும் விட்டுக் கொடுத்தா தான் குடும்பம் கரை சேரும்..." என்பது உள்ளிட்ட தத்துவவித்துவ டயலாக் "பன்ச் "கள் பளிச், "பளிச்" என மின்னல் கீற்றாய் மன வசியம் செய்கின்றன.
ஆக மொத்தத்தில், தன் மகனை வைத்து, தனது கதை, திரைக்கதையில் "மணல் கயிறு-2"-வையும் தன் பாணியில், சமீபத்திய சமூக அரசியல் நிகழ்வுகளை நக்கல், நையாண்டியாக வைத்து சரியாகவே திரித்திருக்கிறார் எஸ்.வி.சேகர். அது, இக்கால ரசிகர்களால் போதுமான அளவு சிலேகிக்கப்படுமா? பொருத்திருந்து பார்க்கலாம்!"
"மணல் கயிறு-2 - வயிறு வலி - டூ - காமெடி ரசிகன்!"