ரெட்டை தீபாவளி எனும் விளம்பர வாசகத்துடன் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க ., தனுஷூடன் முதன்முதலாக த்ரிஷா நடிக்க, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்கியிருக்கும் படம் தான் "கொடி".
பொள்ளாச்சி பகுதியல் கட்சி, கட்சி என ஓடி ஓடி உழைத்து கட்சிக்காகவே தற்கொலை செய்து கொண்ட அடிமட்ட தொண்டன் கருணாஸின் இரட்டை வாரிசுகள் கொடி - தனுஷும், அன்பு எனும் மற்றொரு தனுஷும். முன்னவர் அப்பா வழியில் கட்சி பணியாற்ற களம் இறங்க, பின்னவர் அம்மா சரண்யா காட்டும் வழியில் படித்து கல்லூரி லக்சரராக காலம் தள்ளுகிறார். கட்சி பணியாற்றும் தனுஷூக்கு எதிர்கட்சியில் இவர் மாதிரியே வளர்ந்து வரும் ருத்ரா- த்ரிஷா மீது காதல். லக்சரர் தனுஷூக்கு போலி நாட்டு முட்டை விற்கும் அனுபமா பரமேஷ்வரன் மீது காதல்.
பொள்ளாச்சி பகுதியை உலுக்கும் பாதரச பேக்டரி பாலிடீக்ஸால் எதிர்பாராமல் வரும் இடைத்தேர்தலில் த்ரிஷாவுக்கு அவர் சார்ந்துள்ள கட்சியிலும் தனுஷூக்கு இவர் சார்ந்துள்ள கட்சியிலும் வேட்பாளர் சீட் வழங்கப்பட, ஒரு கட்டத்தில் தனுசை ஜெயிக்க முடியாது என உணர்ந்து கொள்ளுவதோடு, தவறாகவும் புரிந்து கொள்ளும் த்ரிஷா, அவரை தன், காதலன் என்றும் பாராமல் யாருக்கும் தெரியாமல் நயவஞ்சகமாக தீர்த்து கட்டுகிறார். அதன் பிறகு த்ரிஷாவின் கட்சியில் சேர்ந்து, அரசியலில் அனுதாபத்தில் அன்னபோஸ்டில் ஜெயிக்கிறார் லக்சரர் தம்பி தனுஷ். அவரை தம் கட்சியில் சேர்த்து அன்னபோஸ்டில் ஜெயிக்க வைத்ததற்காக ராஜ்யசபா எம்.பி பதவியையும் தலைமையிடம் கேட்டுப் பெறும் த்ரிஷா, சென்ட்ரல் மினிஸ்டர் ஆகவும் திட்டம் போடுகிறார். இந்நிலையில் த்ரிஷா தான், தன் அண்ணனை கொன்றது என்னும் உண்மை தம்பி தனுஷூக்கு தெரிய வருகிறது. த்ரிஷா சென்ட்ரல் மினிஸ்டர் ஆனாரா? சென்ட்ரல் ஜெயிலுக்கு போனாரா..? அல்லது தனுஷால் சின்னாபின்னமானாரா....? என்பது மீதிக் கதை.
முதல் தனுஷ், அடர்தாடியும் முறுக்கி விடப்பட்ட மீசையுடன் கூடிய கொடியாக, இளம் அரசியல்வாதி கெட்அப்பில் கட்சிதம் என்றால், மற்றொரு தனுஷ் அன்புவாக அடக்க ஒடுக்கமான பயந்த சுபாவமுள்ள லக்சரராக பிரமாதம். அவருக்குள் அண்ணன் தனுஷ் இறந்த பின் ஏற்படும் மாற்றங்கள் முரட்டு தனங்கள் எல்லாம் இயல்பாக படமாக்கப்பட்டு வழக்கம் போல வெகுவாக ரசிகனை ஈர்க்கின்றன.
"நீங்க எம்.பி, நான் எம்எல்ஏ கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து வாங்கணும். பர்ஸ்னல் வேற, இது வேற.. என த்ரிஷாவிடம் பொக்கே கொடுத்து விட்டு சற்றே சந்தேகத்துடன் முரட்டுத்தனமாக பேசுவதில் தொடங்கி, மக்களுக்கு சேவை செய்யணும்னா ஒருத்தனும் பத்து பைசா தர மாட்டங்க. ஆனா, எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் தரணும்னா லட்சம் லட்சமா கொட்டி கொடுப்பானுங்க... எல்லாரும் பொறக்கும் போது சிங்கிள் நான் பிறக்கும்போதே டபுள்..." என்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் அசரடிக்கிறார் தனுஷ். மனிதர் ஆக்ஷன் காட்சிகளிலும் வழக்கம் போலவே அதிரடி செய்திருக்கிறார். சபாஷ்!
த்ரிஷா, அதிரடி பேச்சாளராக தீப்பொறி ருத்ராவாக பாத்திரத்திற்கு அவ்வளவாக பொருந்தாது பவனி வருகிறார். பதவிக்காக த்ரிஷா காதலன் தனுஷை கொலை செய்வதையெல்லாம் நம்பவே முடியவில்லை பாவம்.
மற்றொரு நாயகி அன்பு - தனுஷின் காதலியாக முட்டை வியாபாரியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் போலி நாட்டு முட்டையும் ஒரிஜினல் முட்டை விழிகளுமாக அசத்துகிறார். ரசிகனின் நெஞ்சங்களை அதிகம் அள்ளுவது ஆறுதல்.
தனுஷூகளின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக கருணாஸ், நண்பராக காளி வெங்கட், அரசியல் தலைவராக எஸ்ஏ சந்திரசேகரன், அரசியல் வாதிகளாக மாரிமுத்து, ராஜ்கபூர், சிங்கமுத்து, நமோ நாராயணன், டேவிட் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் "வேட்டை போட்டு கொண்டாடு...", "சிறு... வாசம் காத்தோட..." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்க முற்பட்டிருக்கிறது. வெங்கடேஷ்.எஸ்ஸின் ஒளிப்பதிவு ஓஹோ, ஆஹா பதிவு. பிரகாஷ் மப்புவின் படத்தொகுப்பு பலே தொகுப்பு இல்லை என்றாலும் படுத்தாத தொகுப்பு. ஸ்டன் சிவா ஆக்ஷன் அதிரடி!
துரை செந்தில்குமாரின் எழுத்து, இயக்கத்தில் "பார்க்குறதுக்கு பளபளன்னு தெரியற பாதரசம் தான் உலகிலேயே இரண்டாவது கொடூரமான பொருள்..." என்பது உள்ளிட்ட மெஸேஜுக்கள் ஓ.கே. என்றாலும், பார்த்து சலித்த அரசியல் சப்ஜெக்ட் என்பது சற்றே போர். மேலும் மருந்துக்குக் கூட இப்படக் கதைக் களமான பொள்ளாச்சி, கோவை பகுதி பேச்சு வழக்கு பாஷை இல்லாதது பலவீனம்.
ஆக மொத்தத்தில், ஏற்கனவே பார்த்து ரசித்த அரசியல் நெடி அதிகம் வீசும், "கொடி - சற்றே கடி!"