3

விமர்சனம்

Advertisement

காஸ்ட்லீ கார்களை கடத்தி விற்கும் கூட்டத்தைப் பற்றிய கதையை கருவாகக் கொண்டு, உருவாகி வந்திருக்கிறது... ஆர்.டி, இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பேனரில் ராஜரத்திரனம், ஸ்ரீதரன் இருவரும் தயாரித்து வழங்க, கே.ஆர்.பிலிம்ஸ் வெளியிட, அறிமுக இயக்குனர் தாஜ் என்பவரது எழுத்து, இயக்கத்தில் நட்டி - நடராஜ், ருஹிசிங், மனிஷாஸ்ரீ, அதுல் குல்கர்னி, முனிஷ் காந்த் - ராமதாஸ் உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளம் நடித்திருக்கும் "போங்கு" திரைப்படம்.

பல கோடி விலை மதிப்புடைய மிக உயர்ரக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை விற்பனை செய்யும் குஜாராத் - அகமதாபாத் கார் விற்பனை நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் தேவ், பாஸ்கர் இருவரும், ஒரு எம்.பி வீட்டுக்கு, தங்கள் பொறுப்பில், டெலிவரிக்கு எடுத்துப் போகும் ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு கார் ஒன்று துப்பாக்கி முனையில் சிலரால், இவர்களிடமிருந்து கடத்தப்படுகிறது. அதானால் வேலை இழந்து சிறை தண்டனை அனுபவிக்கும் இருவரையும் அதே நிறுவனத்தில் இவர்களோடு சேர்ந்து வேலை இழந்த இவர்களது தோழி ஜனனி, சிறையில் இருந்து வெளியில் எடுக்கிறார்.

அதன் பின் மூவரும் சேர்ந்து எங்கெங்கோ வேலை தேடியும் இவர்கள் மீதுள்ள திருட்டு பழியால் எதுவும் கிட்டாததால், இன்னும் இரு கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு அதிநவீன அல்ட்ரா மார்டன் வசதிகளுடன்... மெய்யாலுமே காஸ்ட் லீ கார்கள் திருட்டில் கால் பதிக்கின்றனர் தமிழ் நாட்டில். அதுவும் பத்து கார்களை மதுரையையே ஆட்டிவிக்கும் கோடீஸ்வர தாதா பாண்டியிடமிருந்து தூக்க களமிறங்கும் இவர்களின் கண்ணில் சிக்குகிறது. அவர்களிடமிருந்து கடத்தப்பட்டு, அவர்கள் கார் கடத்தல்காரர்களாக காரணமான அந்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு கார்.

அப்புறம்? அப்புறமென்ன... பாண்டியின் பத்து காஸ்ட் லீ கார்களையும் கடத்தி விட்டு, அவனிடமே 200 கோடி பந்தயம் கட்டி, அந்த சொகுசு காரையும், 200 கோடி பணத்தையும் தன் புத்திசாலிதனத்தால் அடித்து, பாண்டியை போலீஸிலும் பிடித்துக் கொடுத்து, பதினோறு கார்களை போலீஸ் வாயிலாக முறையே உரியவர்களிடமும் சேர்பித்து நல்ல பெயர் வாங்கி, இருநூறு கோடி, ப்ளஸ், ஏற்கனவே மதுரை பாண்டியிடம் அடித்த இன்னும் சில கோடிகளுடன் நண்பர்கள் மற்றும் நாயகியுடன் எப்படி எஸ் ஆகிறார் ஹீரோ தேவ்..? என்பது தான் "போங்கு" படத்தின் கதை, களம், ரசிகனைப்படுத்தாத காட்சிப்படுத்தல்.... எல்லாம்!

தேவ் எனும் ஹீரோவாக நட்டி நடராஜ், செம ஷார்ப்பாக தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து படு கேஷ்வலாக கார் கடத்தல் பேர்வழியாக கலக்கியிருக்கிறார். நவீன டிவைஸ் கனெக்ட் செய்து ஒரு பிஎம்டபிள்யூ காரரை பல கோடி பணத்தோடு கடத்தும் முதல் சீனில் தொடங்கி, இறுதியில் அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை, பாண்டியிடம் சொல்லி அடித்து, அதற்குரிய எம்.பி., மகளிடம் ஒப்படைப்பது வரை தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் நட்டி - நடராஜ்.

"சம்பவங்கள் நிறைய பண்ணிக்கிட்டு இருந்தா தான் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும். அதுவரை ஒடிக்கிட்டே இருக்கணும்...", "மதுரைக்கு வந்தது உன் காரைத் தூக்கத்தான்... ஆனா வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது தூக்க வேண்டியது உன் கார்களை மட்டுமல்ல, உன்னையும் சேர்த்து தான் என்று..." என்பது உள்ளிட்ட இவர் பேசும் சீரியஸ் பன்ச்களுக்கும் சரி, "நமக்கு மணி ரொம்ப ரொம்ப முக்கியம்", "எனக்கு ஊதுபத்தி காட்டணும்னு நினைச்சில்ல அதான், உனக்கு சாம்பிராணி புகை போட்டுள்ளேன்...", "நாமல்லாம் நல்லது பண்றதுக்கும் நல்ல நேரம் பார்க்கணும், கெட்டதுபண்ணவும் நல்ல நேரம் பார்க்கணும்..." என்பது உள்ளிட்ட சிலேடை சிரிப்பு சிந்தனை வசனங்களுக்கும் சரி... தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சபாஷ், கீப் இட் அப் நட்டி!

நாயகியாக ஜனனி பாத்திரத்தில் ருஹி சிங், வசீகரிக்கும் வடக்கத்திய புதுவரவு. வித்தியாசமாக தெரிகிறார்.

எம்.பி மகள் பிரியாவாக கிட்டத்தட்ட மற்றொரு நாயகி எனும் அளவிற்கு மனிஷாஸ்ரீயும் வந்து போகிறார்.

வில்லன் மதுரை பாண்டியன் எனும் பாண்டியாக பார்வையாலே பயம் காட்டி, பின் புத்திசாலி ஹீரோவிடம் எல்லாவற்றையும் இழந்து சிறை செல்லும் கேரக்டரில் ஷரத் லோகித்தஷ்வா செம கச்சிதம்.

சுபாஷ் எனும் காவல்துறை அதிகாரியாக அதுல் குல்கர்னி மிடுக்கு காட்டியிருக்கிறார். அப்பாவி மணியாக முண்டாசுபட்டி முனிஷ்காந்த் - ராமதாஸ், தேவ்வின் நண்பர் பாஸ்கராக - அர்ஜுன், பாபுவாக வரும் ராஜன் பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் உள்ளிட்டோரும் கார், கடத்தல் கதையிலும் கலகலப்பூட்டுகிறார்கள்.

சுப்ரீம் சுந்தரின் சண்டை பயிற்சி மிரட்டல், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் குறையொன்றுமில்லை, மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் கலர்புல் கார்களும், காட்சிகளும்... கலக்கல்.

ஸ்ரீ எனும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "போங்கு போங்கு அம்பு வில்லுடா அர்ஜூனரு...", "வெள்ளக்குதிர...", "வானம்..." உள்ளிட்ட பாடல்கள் சுபராகம். பின்னணி இசை இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம்.

புதியவர் தாஜ் எழுத்து, இயக்கத்தில், ஒரு சில லாஜிக் குறைகள், சில பல - நம்ப முடியாத ஹம்பக் காட்சிகள்... ஆங்காங்கே இப்படத்தில் இடம் பிடித்திருந்தாலும், "எந்த ஆட்டத்துலேயும் முதல்ல ஜெயிக்கிறது லக்-கும்பாங்க... நீங்க இரண்டாவது ஆட்டத்துலேயும் ஜெயிச்சிருக்கீங்க... நிச்சயமா, இதுக்கு லக் மட்டும் காரணமில்லை", "பொதுவா, நல்லவன், கெட்டவன், பலசாலி.... யார்கிட்ட வேணாலும் மோதலாம் புத்திசாலிகிட்ட யோசித்து மோதனும்..." என்பது உள்ளிட்ட ரசனை வசனங்களுக்காகவும், ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ் , பிஎம்டபிள்யூ, ஜாகுவார், பெராரி... உள்ளிட்ட காஸ்ட்லீ கார்களின் அணிவகுப்பை, தமிழ் சினிமாவில் படம் முழுக்க, முதன் முறையாக காணவும், "போங்கு படத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் போகலாம்!"

ஆக மொத்தத்தில், "போங்கு - செம பாங்கு!"

 

பட குழுவினர்

போங்கு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓