விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரஹ்மான், நாசர், ஜோக்கர் குருசோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், அனுசரன், யோகி பாபு, பசிசத்யா... உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, "காக்கா முட்டை" இயக்குனர் எம் மணிகண்டன் ‛காக்கா முட்டை படம் மாதிரியே ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் படம் தான் "குற்றமே தண்டனை".
கதைப்படி, பிறவியிலிருந்தே கண் பார்வை குறைபாடு உடையவர் விதார்த். எல்லோரும் போல் சரியாக பார்க்கத் தெரியாத அவருக்கு, கண் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தான் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி கிரிடிட் கார்டு கடன் கலெக்ஷன் ஏஜென்சியிலும் இன்னும் பிற இடங்களிலும் கேட்டுப்பார்க்கும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அது சமயம், விதார்த் குடியிருப்பு வளாகத்தில் நடக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் கொலையில் கையும் களவுமாக விதார்த்திடம் சிக்கும் ரஹ்மான் அதை மறைக்க., உடந்தையாக இருக்க, விதார்த்க்கு தேவையான பணம் தர சம்மதிக்கிறார் பெரிய மனிதர் ரஹ்மான். அதற்கு சம்மதிக்கும் விதார்த், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளும், சம்பவங்களும் தான் "குற்றமே தண்டனை" மொத்தப் படமும்.
‛ஜீ போட்டு பேசறவங்களை கண்டாலே எரிச்சலா இருக்கு.... எனும் நாயகர் விதார்த் பாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார். சரியாக கண் தெரியாத விதார்த்திடமே முற்றிலும் பார்வை தெரியாத ஒரு பெண் சாலையை கிராஸ் செய்ய உதவி கேட்பது போன்ற காட்சியில் ஒரு பார்வையாலேயே பலதும் சொல்லுகிறார் விதார்த். பலே, பலே.. விதார்த்தின் கண் பார்வை வழியிலான கேமிரா கோணம் பலவும் பேசுகிறது... ஆனால் அவரால் சிலவற்றை தான் பார்க்க முடிகிறது என்பது பாவம்.
ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா இரு நாயகியரில் பூஜாவிற்கே நடிக்க நிறைய வாய்ப்பு கொஞ்ச நேரமே வந்து, அகால மரணமடையும் ஐஸ்வர்யா ராஜேஷையும் குறை சொல்வதற்கில்லை.
விஜய் பிரகாஷ் எனும் பெரும் புள்ளியாக வரும் மாஜி ஹீரோ ரஹ்மான் கம்பீரம்.
மகனின் வெளிநாட்டு பிரிவால் கிரிடிட் கார்டு கலெக்ஷன் பாய் விதார்த் திடம் பாசம் காட்டும் நாசர் அதகளம்.
ஜூனியர் வக்கீல் பாலாவாக ஜோக்கர் குருசோம கந்தரம் கச்சிதம்.
"ஒண்ணும் தெரியாதுங்கிறாங்க... ஆனா, வரும் போதே வக்கீலோட வந்துடுறாங்க...." எனும் இன்ஸ்மாரிமுத்து ஹாஸ்யம்.. ராஜசேகர், அனு சரன், யோகி பாபு, பசிசத்யா... உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளம் படத்திற்கு கூடுதல் பலம்.
ஆனந்த் அன்னாமலையின் படத்தொகுப்பு கச்சிதம். இளையராஜாவின் இசைஞானம் பேசுகிறது.
"காக்கா முட்டை" இயக்குனர் எம் மணிகண்டன் "காக்கா முட்டை" மாதிரியே ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் படமான "குற்றமே தண்டனை"-யில், "எது தேவையோ அதுவே தர்மம்...", "நல்லது நினை..." உள்ளிட்ட "பன்ச்"கள் மூலமும், ஐஸ்வர்யா - விதார்த் சம்பந்தப்பட்ட ப்ளாஷ்பேக் காட்சிகள் மூலமும் கவனிக்க வைக்கும் இயக்குனர், நாசருக்கு விதார்த் பணம் பறிக்கும் உண்மை தெரிந்தும் அவர் போலீஸுக்கு போகாதது ஏன்? எனவும் நாசரிடமும் விதார்த் முழு உண்மையாக இல்லாதது ஏன்..? எனவும் லாஜிக்காக கேட்கவும் வைக்கிறார். மற்றபடி, ‛‛குற்றமே தண்டனை - ‛காக்கா முட்டை அளவிற்கு சுவாரஸ்யமாய் இல்லை... என்றாலும், தண்டனையாகவும் இல்லை!
மொத்தத்தில், "குற்றமே தண்டனை - தமிழ் சினிமாவில், புதுவித ரசனை!"
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கண்ணுக்கு நேராக இருப்பது மட்டும்தான் தெரியும். பக்கவாட்டில் இருப்பது நடப்பது எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட கண் நோயால் பதிக்கப்பட்டவர் விதார்த்.
அவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைப் பார்க்க முதலாளி ரகுமானும் காதலர் அருணும் அடிக்கடி வந்து போகிறார்கள். திடீரென்று ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையைச் செய்தது ரகுமானா? காதலனா? வேறு யாராவதா?
இந்தக் கொலையைப் பயன்படுத்தி தன் கண் அறுவை சிகிச்சைக்கான பணத்தை கறக்கப் பார்க்கிறார் விதார்த்.இந்தச் சிக்கலை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
இந்தக் கொலையைச் செய்தது யார்? யாருக்குத் தண்டனை? யாருக்கு ஆதாயம்? இதைச் சொல்வதல்ல இந்தப் படம். ஒரு குற்றம் மூலம் ஒருவரின் மனசாட்சி அவருக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்பதைச் சொல்லும் படம்.
பார்வைக் கோளாறு அது தரும் வருத்தம், அதைவிட, அதை மற்றவர்களிடமிருந்து மறைக்க விதார்த் படும்பாடு, சிகிச்சைக்காக பணத்தைத் திரடட எடுத்துக் கொண்ட அக்கறை, குற்ற உணர்வுக்காக கண் கலங்குவது. தப்பிலும் ஒருநேர்மை, இரக்க குணம் என்று விதார்த் விதவிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரம் என்றாலும் மனதில் நிற்கிறார் பூஜா தேவரியா பொருத்தமான வார்ப்பு. ரகுமான் கதைக்கு வலு சேர்க்கிறார். குருசோமசுந்தரமும் நாசரும் மனதில் பதிகிறார்கள்.
'எது தேவையோ, அதுவே தர்மம்!' என சினனச் சின்ன வசனங்கள் கதையைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
இளையராஜாவின் இசையும் இயக்குநர் மணிகண்டனின் ஒளிப்பதிவும் பெரிய ப்ளஸ்.
சுறுசுறுப்பில்லாமல் நகரும் கதை, கிளைமாக்ஸில் ஏற்பட்ட குழப்பம், லட்சங்களில் பணம் கைமாறுதல், குற்றம் சாட்டப்ட்ட அருண் குடும்பத்தாருடன் நடக்கும் பேரம், இதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீஸ் விசாரணை என்று நேர்த்தியற்ற திரைக்கதையால் படம் 'உச்' கொட்ட வைக்கிறது.
கு.த.: துணிச்சல்!
குமுதம் ரேட்டிங் : ஓகே