Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்,velainu vanthuta velaikaran
03 ஜூன், 2016 - 18:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

தினமலர் விமர்சனம்


துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்திப் பறவை, வெள்ளக்கார துரை" உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குனர் எஸ்.எழிலின் இயக்கத்தில், வளரும் நாயகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிக்கி கல்ராணி, சூரி, நரேன், ரவி மரியா, ரோபோ சங்கர்... உள்ளிட்டோர் உடன் நடிக்க வெளிவந்திருக்கும் முழு நீள காமெடி கமெர்ஷியல் படம் தான் "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.


கதைப்படி, அமைச்சரின் மனைவிக்கு அழகாகவும், அளவாகவும் ஜாக்கெட் தைத்து கொடுத்ததின் வாயிலாக அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து எம்.எல்.ஏ.வாகவும் ஆனவர் ஜாக்கெட் ஜானகிராமன். அவரது தையல் மற்றும் அரசியல் அடிப்பொடிகள் கதையின் நாயகர் முருகனும், அவரது காமெடி நண்பர் சர்க்கரையும். இவர்களது எம்எல்ஏ ஜாக்கெட்டின் வளர்ச்சி, அமைச்சரின் மைத்துனர் பூதத்திற்கும், சக எம்எல்ஏ ஒருவருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.


இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அமைச்சர், எல்லோரையும் வெளியே போக சொல்லிவிட்டு, எம்எல்ஏ ஜாக்கெட் ஜானகியை தனியாக அழைத்து, தான் ஏமாற்றி சுருட்டிய 500 கோடியை எங்கு பதுக்கி வைத்திருக்கிறேன்... எனும் ரகசியத்தை சொல்லி, சாக கிடக்கும் தனது கடைசி ஆசையாக அந்த பணத்தை எடுத்து மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்? என்பதையும் சொல்லி மரணமடைகிறார். இதில் 500 கோடி என்பதை மட்டும் ஒளிந்திருந்து கேட்கும் இறந்த அமைச்சரின் மைத்துனர் பூதம் அண்ட் கோவினர், ஜாக்கெட்டை பணம் இருக்குமிடம் அறிந்து கொள்ள துரத்துகின்றனர். இதில் விபத்தில் சிக்கும் ஜாக்கெட் கோமா ஸ்டேஜுக்கு போகிறார். அவரின் சுயநினைவு திரும்பினால் தான் 500 கோடி ரகசியம் தெரிய வரும் என்பது மட்டுமின்றி, ஹீரோவின் காதலும் கை கூடும், ஹீரோ நண்பரின் நின்று போன கல்யாணமும் நடந்தேறும் எனும் நிலை.


அந்த பணம் பற்றிய ரகசியத்திற்காக வில்லன் பூதம் கோஷ்டியும், நாயகி அர்ச்சனாவுடனான தன் காதல் கைகூட கதையின் நாயகர் முருகாவும், தன் நெருடல் இல்லாத நிம்மதியான கல்யாண வாழ்க்கைக்காக காமெடி நாயகர் சர்க்கரையும் காத்திருக்கின்றனர். ஜாக்கெட் ஜானகி சுயநினைவுக்கு திரும்பினாரா? அல்லது மேற்படியாளர்களின் வாழ்வில் எல்லாம் சூன்யமே குடிகொண்டதா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும்விடை சொல்கிறது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.


கதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். அயம் வெயிட்டிங் என அலட்டுவதில் தொடங்கி, இந்த முருகன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என க்ளைமாக்ஸில் டைட்டில் பில் - டப் கொடுப்பது வரை, சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். எம்.எல்.ஏ., ஜாக்கெட் ஜானகியின் அமைச்சர் தலைமையிலான 25 இலவச கல்யாணத்திற்கு அவசரகதியில் ஜோடி தேடும் ஆரம்ப காட்சியில் விஷ்ணு துறு துறு.. என வளைய வருகிறார் என்றால், அர்ச்சனா - நிக்கியின் அப்பாவிடம் போலீஸ் வேலைக்கு பத்து லட்சம் வாங்கி கொடுத்து விட்டு நிக்கியிடம் மாட்டிக் கொண்டு திருதிரு என விழிப்பதிலும் அழகாய் ஸ்கோர் செய்திருக்கிறார். வாவ்!


லஞ்சம் கொடுக்க விரும்பாது மெரிட்டில் போலீஸ் வேலைக்கு ஆசைப்படும் கதையின் நாயகி அர்ச்சனாவாக நிக்கி கல்ராணி, செம தூள் ராணி.... எனுமளவிற்கு படம் முழுக்க துடுக்கு பெண்ணாகவும் மிடுக்கு போலீஸ் அதிகாரியாகவும், மிரட்டியிருக்கிறார் மிரட்டி. பாடல் காட்சிகளில் ரசிகனை வசியப்படுத்தும் கிளாமருடனும், போலீஸ் உடுப்பில் டிப்-டாப்புமாக அம்மணியின் நடை, உடை, பாவனை எல்லாம் செம பாந்தம்.


சர்க்கரை, சர்க்கரைன்னு கூப்பிட்டு சாக்கடையில தள்ளி புட்டியேடா... என புலம்பும் புஷ்பா புருஷனாக சூரி, படம் முழுக்க காமெடி அதகளம் செய்திருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு-விற்கு அப்புறம் விஷ்ணு - சூரியின் காமெடி இதில் சரவெடி!


சூரி மட்டுமல்ல, சூரியின் இன்ஸ்டண்ட் மனைவி புஷ்பாவைத் தேடி வெற்றிலையில் மைக்கு பதில் மையமாய் ஓட்டை போட்டு பார்க்கும் போலி சாமியார் யோகி தேவராஜில் தொடங்கி, கோமா ஸ்டேஜில் இருந்து பத்து வயது மனநிலைக்கு வரும் ஜாக்கெட் ஜானகிராமன் எம்எல்ஏ - ரோபோ சங்கர், சக எரிச்சல் எம்எல்ஏ - நரேன், அமைச்சரின் அடாவடி மைத்துனர் பூதம் - ரவி மரியா, பேய் பங்களாவில் ஒத்தப் பாட்டுக்கு செம காமெடி குத்து போடும் மொட்டை ராஜேந்திரன்-ரிஷா ஜோடி, நாயகியின் அப்பா ஞானவேல், வையாபுரி, அஸ்வின், பாவா லட்சுமணன், கதா.க.திருமாவளவன்.... உள்ளிட்ட சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு ரசிகனை, பளீரென படம் முழுக்க சிரிக்க விட்டிருக்கின்றனர்.


ஆரவள்ளி சூரவள்ளி.., அய்யோ பாவம் ஆம்பளை ... , குத்தீட்டி கண்ணாலே... உள்ளிட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் சி.சத்யாவின் இசையில் தாளம் போட வைக்கும் ராகம். பின்னணி இசையும் பிரமாதம்.


இசை மற்றும் பாடல்கள் மாதிரியே, செல்லாவின் நம்மூர் அரசியலை காமெடியாக பிரதிபலிக்கும்மூலக் கதை எழிச்சூர் அரவிந்தனின் நறுக்குத் தெறி"க்கும் காமெடி வசனங்கள், ஆனந்த லிங்க குமாரின் பக்கா படத்தொகுப்பு, சக்தியின் ஓவிய ஒளிப்பதிவு, உள்ளிட்டவை எஸ்.எழிலின் எழுத்து, இயக்கத்திற்கும், இப்படத்திற்கும் பெரும் பலம்.


ஆக மொத்தத்தில், ஒரு சில லாஜிக் குறைகள், டிராமா டிக்மிஸ்டேக்குகள் ஆங்காங்கே தென்பட்டாலும், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் எனும் பாலிசியுடைய தமிழ் சினிமா ரசிகர்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்துக்கு தாராளமாய் குடும்பத்துடன் போய் விட்டு வரலாம்!


ஆகவே, "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - கவலைன்னு மறந்து சிரிச்சுட்டு வரலாம்".



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in