Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அட்ரா மச்சான் விசிலு

அட்ரா மச்சான் விசிலு,Adra Machan Visilu
 • அட்ரா மச்சான் விசிலு
 • மிர்ச்சி சிவா
 • நைனா சர்வார்
 • இயக்குனர்: திரைவாணன்
07 ஜூலை, 2016 - 14:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அட்ரா மச்சான் விசிலு

உச்ச நட்சத்திரம் ஒருவரது படம் சமீபத்தில், எதிர்பாராத விதமாக படுதோல்வியடைந்து, பணம் போட்டு வாங்கிய வினியோகஸ்தர்களின் தலையில் துண்டை போட்ட கதையை, அதைத் தொடர்ந்து நடந்த பஞ்சாயத்து, பண பரிவர்த்தனையை... துணிச்சலாக கொஞ்சம் கற்பனை மற்றும் விற்பனை நோக்கம் கலந்து "அட்ரா மச்சான் விசிலு" எனும் படமாக்கியிருக்கிறார்கள்.


கதைப்படி, மதுரையை சார்ந்த சிம்மக்கல் சேகர், பழங்காநத்தம் பாபு, கோரிப்பாளையம் ரஹ்மத் மூவரும் உச்ச நடிகர் பவர்ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். இதில் வீட்டு வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தும் தாயின் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போல் வாழும் சிம்மக்கல் சேகருக்கு, தேவி எனும் பெரிய இடத்துப் பெண் காதலியாக கிடைக்கிறார். மற்ற இருவருக்கும் சின்ன, சின்னதாக தொழில் செய்யும் சற்றே வசதியான குடும்பம் இருக்கிறது. காதலி, குடும்ப பின்னணிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பவரைப் பற்றி யாராவது தவறாக சொன்னால் அந்த ஸ்பாட்டிலேயே அடிதடியில் இறங்கி போலீஸ், பஞ்சாயத்து... என அலையும் பவர் வெறியர்களான மூவரும், நட்பும், உறவும் சொல்வது கேட்டு ஒரு கட்டத்தில் கொஞ்சம் முன்னேறி, பவரின் படம் ஒன்றின் மதுரை ஏரியாவை வாங்கி வினியோகம் செய்கின்றனர்.


அதற்கு சிம்மக்கல் சேகருக்கு அவரது காதலி தேவியும், பழங்காநத்தம் பாபுக்கு அவரது பெற்றோரும், கோரிப்பாளையம் ரஹ்மத்க்கு அவரது உடன் பிறந்த அண்ணனும் உதவி செய்ய, அப்படத்தின் வெற்றி தோல்வியில் தான் மூவரது எதிர்காலமும் அடங்கியிருக்கிறது எனும் நிலையில், பவர்ஸ்டாரின் அந்தப் படம் எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியைத் தழுவுகிறது. சாதாரண குடும்பத்தை சார்ந்த இவர்களது பணம் பறிபோகிறது. ஆனாலும் தாங்கள் பகவானாக பாவிக்கும் பவர் ஸ்டார், தங்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்... கைவிட மாட்டார்... எனக் கருதி சென்னைக்கு வரும் மூவரும் பவராலும், பவரின் மேனேஜர் துரையாலும் துரத்திடியடிக்கப்பட, மூவரும் பவருக்கும், மேனேஜருக்கும் எப்படி? பாடம் புகட்டி தங்கள் பணத்தை திரும்ப பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகின்றனர்? என்பது தான் "அட்ரா மச்சான் விசிலு படத்தின் மொத்தக்கதையும்.


சிம்மக்கல் சேகராக சிவா, வழக்கம் போலவே கலாய்ப்பும் கலகலப்புமாக பக்காவாக பர்பாமென்ஸ் செய்திருக்கிறார். பவரின் தீவிர ரசிகராக அவரது கட் அவுட்டுக்கு கற்பூரம் காட்டி பாலாபிஷேகம் செய்வதில் தொடங்கி, ஒரு கட்டத்தில் அவருக்கே பாடம் புகட்டுவது வரை... ஒவ்வொரு காட்சியிலும், தனக்கே உரிய பாணியில் சதாய்த்திருக்கிறார். சபாஷ் சிவா. எப்போதும் தருவியே., அதைத்தா.. என காதலியிடம் சிவா கேட்பதும் அதற்கு பப்ளிக் பிளேஸில் எப்படி? எனத் தயங்கும் காதலியிடம், நான் கேட்டது கிஸ் இல்லம்மா கேஷ்... என்பது உள்ளிட்ட சிவாவின் சில்மிஷ பன்ச் கள் படக்காட்சிகளில் மட்டுமின்றி பாடல் காட்சிகளிலும் நிறைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்கிறது.


பவர் ஸ்டாராகவே வரும் பவர் ஸ்டார், பவராக, டூப் காளையை அடக்கும் காட்சி, செம சிரிப்பு. கூடவே ஹீரோக்களை கடவுளாக பார்க்கும் ரசிகர்களை சிந்திக்கவும் வைக்கும் ஆப்பு! நான் கடிச்சதா, நாய் கடிச்ச மாதிரி இருக்கு?, பார்த்தா நா காமெடி பாஞ்சா சரவெடி... எனத்தன்னை தானே போட்டுத் தாக்கி கொள்வதில் தொடங்கி, சூப்பர் ஸ்டாருக்கு இணை தான், தான் என சொல்லி பந்தா ஸ்டாராக வலம் வருவது வரை எல்லாமே செயற்கையாக இருப்பது பலவீனம். பவர் சார் இனியாவது, பல்லைக் காட்டியபடியே வருவதை நிறுத்தி நடிப்பை காட்டுங்கள் சார்.


சிவாவைக் காதலிக்கும் தேவியாக புதுமுகம் நைநா சர்வர், கவர்ச்சியாக கிளாமர் சர்வ் செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு சர்வ் மட்டும் ஏனோ சரியாக வரவில்லை.


சிவாவின் நண்பர்களாக வரும் பழங்காநத்தம் பாபு - சென்ராயனும், கோரிப்பாளையம் ரஹ்மத்தாக வரும் அருண் பாலாஜி, இருவரில்சென்ராயனின் நடிப்பு ஓவர். புதியவர் அருண் பாலாஜியிடம நடிப்பு நெவர்.


பவரின் மேனேஜர் துரையாக வரும் சிங்கமுத்து தன் பாணி டபுள் மீனிங் காம நெடி காமெடியில் கலக்க முயற்சித்து கடுப்பேற்றுகிறார். உலகத்துலயே என்ன மாதிரி நல்ல மாப்பிள்ளை இல்லைன்னா, அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்தான் உங்கப்பன்?" எனும் காமெடி பன்ச் மட்டும் தான் சிங்கமுத்துவின் காமெடியில் ஒரளவு சுரை சேருகிறது. அவரது ஜோடி மதுமிதா புருஷன், ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் போது கள்ளக்காதலனை கூட்டி வந்து அடிக்கும் கூத்துகள் நாடகத்தன்மையுடன் கூடிய நா ரசம்!


தான் இயக்கிய படத்தில் 64 சீன்ல ஒரு சீன் கூட தன் சீன் வைக்க விடாது படத்தை தோல்வி படமாக்கிய கடுப்பில் பவரையே, டேய் முனியாண்டி... என அவரது, சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு கடுப்பேற்றும் இயக்குனராக வேல்முருகன், பேராசை டாக்டர் - மன்சூர், அட்வைஸ் போலீஸ் - ராஜ்கபூர், நாயகியின் மதுரை ஏரியா பெரிய மனித அப்பாவாக செல்வபாரதி, நாயகரின் அம்மா பசங்க சுஜாதா உள்ளிட்ட எல்லோரும் கொடுத்த காசுக்கு கூடுதலாகவே நடித்திருப்பது சற்றே போர்.


அசோக் ராஜாவின் நடனம், சுஜீத்தின் படத்தொகுப்பு, சில இடங்களில் பாடாவதி தொகுப்பு, சில இடங்களில் பலே தொகுப்பு. காசி விஷ்வாவின் ஒளிப்பதிவு, ரசிகனின் கண்களை உறுத்தாத ஓவியப்பதிவு வித்தியாசம்.


ரகுநந்தனின் இசையில் கண்ணாமூச்சி கண்ணா... மூச்சி கலங்கிடாத மாமா..., யாரு இவ அடடா.. யாரு இவ..., நெஞ்சில் யாரது நெஞ்சில் யாரது .... ஊஞ்சல் போட்டது நீதானே ... உள்ளிட்ட பாடல்களும் அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் ஹாசம், வாசம். அதிலும், பாம்பு சாந்தி சிவா அண்ட் கோவினருடன் ஆடிப்பாடும் அந்த தத்துவக் குத்து... கண்ணாமூச்சி கண்ணா மூச்சி கலங்கிடாத மாமா... பாடல் பிரமாதம்.


திரை வண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில், படத்தில் ஸ்ட்ராகவே வரும் பவர் ஸ்டார் படத்திற்கு பாகுபலியும் பாயும்புலியும் என்பது உள்ளிட்ட இன்னும் பல டைட்டில்கள் சூட்டிடும் ரசனைக்காகவும், ஓட நினைப்பவன் தான் கீழே விழுந்தாக் கூட எழுந்து ஒடி ஜெயிக்க முயற்சிப்பான்..., இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்கிற வரை யாருமே அனாதையல்ல.." எனும் கருத்தாழமிக்க டயலாக்குகளுக்காகவும், சினிமா உலகின் சீரியஸான நிஜ முகத்தை சிரிக்க, சிரிக்க தோலுரித்து காட்டியிருப்பதற்காகவும், "அட்ரா மச்சான் விசிலு" படத்தை ரசிகர்கள் விசிலடித்துப் பார்க்கலாம்.


மொத்தத்தில், சில, பல இடங்களில் கொஞ்சம் முன்னே, பின்னே இருந்தாலும், "அட்ரா மச்சான் விசிலு-க்கு, ஒரு மாதிரி, மனதை தேற்றிக் கொண்டு அடிக்கலாம் விசிலு!"வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in