Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)

டார்விண்டே பரிணாமம் (மலையாளம்),darvinte parinamam
  • டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)
  • பிருத்விராஜ்
  • மிருத்திகா
  • இயக்குனர்: ஜிஜோ ஆண்டனி
21 மார், 2016 - 17:36 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், சாந்தினி (மிருத்திகா), செம்பான் வினோத், சௌபின் சாஹிர், ஷம்மி திலகன்

ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமனுஜம்

இசை : சங்கர் ஷர்மா

டைரக்சன் : ஜிஜோ ஆண்டனி

தயாரிப்பு : ஆகஸ்ட் சினிமாஸ் (பிருத்விராஜ், ஆர்யா)


படத்தின் தலைப்பை கேட்டதுமே ஏதோ அறிவியல் படமாக இருக்கும் என நினைத்துவிட வேண்டாம்.. பக்கா ஆக்சன் கமர்ஷியல் படமே தான்.


கிராமத்தில் வசிக்கும் பிருத்விராஜை, அவர் வேலை இழந்த காரணத்தால் அவரது அம்மாவே துச்சமாக நினைக்கிறார். இதனால் கர்ப்பிணி மனைவியான சாந்தினியை அழைத்துக்கொண்டு கொச்சி வந்து நண்பர்கள் உதவியுடன் வீடு பிடித்து தங்குகிறார். டிஷ் ஆன்டனா பொருத்தும் வேலையும் கிடைக்க சந்தோஷமாக நகர்கிறது வாழ்க்கை.


இந்த நேரத்தில்தான் மனைவியுடன் நடந்து செல்லும்போது செயின் திருடர்கள் இருவர் சாந்தினியின் செயினை அறுத்துக்கொண்டு, அவரையும் கீழே தள்ளிவிட்டு செல்கின்றனர்.. கீழே தள்ளியதில் சாந்தினியின் கர்ப்பம் கலைகிறது. சில நாட்கள் கழித்து ஏதேச்சையாக அந்த செயின் திருடர்களை கண்டுபிடிக்கும் பிருத்விராஜ் அவர்களை பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைக்கிறார். ஆனால் அவர்கள் சிட்டியில் மிகப்பெரிய ரவுடியான செம்பான் வினோத்தின் ஆட்கள் என்பதால் எஸ்.ஐ அவர்களை விட்டுவிட்டு, பிருத்விராஜை எச்சரித்து அனுப்புகிறார்.


தனது ஆட்களை அழைத்துவர ஸ்டேஷன் வரும் செம்பான் வினோத்தை பிருத்விராஜ் தாக்க, அதனால் அவமானப்படும் செம்பான் அன்றிரவே பிருத்விராஜ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் களவாடி சென்று நூதனமாக பழிவாங்குகிறார். போலீசுக்கு போனாலும் பயனில்லை என்பதால், பிருத்விராஜ் மௌனம் காக்க, அடுத்தநாளே பிருத்விராஜுக்கு அவரது நண்பன் கொடுத்த பைக்கையும் தூக்குகின்றனர்..


இனி பொறுக்க முடியாது என்கிற நிலையில் தன்னை போலவே ரவுடி செம்பான் வினோத்தும் தூக்கமில்லாமல் தவிக்கவேண்டும் என வெகுண்டெழும் பிருத்விராஜ், தனக்கு ஏற்கனவே அறிமுகமான இன்னொரு லோக்கல் ரவுடி ஷம்மி திலகனின் உதவியை நாடுகிறார். ஆனால் அவர்கள் போடும் திட்டங்கள் சொதப்புகின்றன.


இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக செம்பான் வினோத்தின் தம்பி சௌபின் சாஹிர் மூலமாக சர்ச்சில் உள்ள தங்கச்சிலையை செம்பான் வெளிநாட்டுக்கு கடத்த இருப்பது தெரிகிறது. அந்த சிலையை தந்திரமாக கைப்பற்றி தனது வசம் மறைத்து வைக்கும் பிருத்விராஜ், அதைவைத்துக்கொண்டு செம்பான் வினோத்துக்கு கொடுக்கும் வித்தியாசமான தண்டனை தான் மீதிப்படம்.


படத்தின் ஆரம்பத்திலேயே ரவுடியாக செம்பான் வினோத்தின் செயல்பாடுகளை காட்டி நம்மை ஆக்சன் மோடுக்கு தயார் செய்தாலும், பிருத்விராஜின் வேலையில்லா திண்டாட்டம், வீட்டைவிட்டு வெளியேறுதல் என தொடரும் இருபது நிமிட காட்சிகள் விக்ரமன் படத்துக்கு வந்துவிட்டோமோ என்கிற உணர்வையே ஏற்படுத்துகின்றன.. நல்லவேளையாக செயின் பறிப்பு சம்பவத்தை தொடர்ந்து படம் ஆக்சனுக்கு மாறுகிறது.


சாதாரண குடும்பத்தலைவனாக அப்பாவியாக இருக்கும் பிருத்விராஜ், ஆக்ரோஷமாக மாறுவதற்கான காரணம் வலுவாகவே சொல்லப்பட்டுள்ளது.. பிருத்விராஜ் தான் நடிப்பது எந்த கேரக்டர் என்றாலும் நூறு சதவீதம் அதுவாகவே மாறிப்போகிறவர் என்பதால் அவரது நடிப்புக்கு நாம் புதிதாக பாராட்டு பத்திரம் வாசிக்க வேண்டுமா என்ன..? தவிர டார்வின் என்கிற டைட்டில் ரோலை வில்லனுக்கு விட்டுத்தந்ததற்காக தனியாக அவரை பாராட்டியே ஆகவேண்டும்.


யதார்த்தமான, புதிதான திருமணமான பெண்ணாக, கர்ப்பஸ்த்ரீயாக வரும் சாந்தினி (மிருத்திகா)க்கு நடிக்க நல்ல வாய்ப்பு.. செயின் திருடர்களால் தாக்கப்பட்டு வலியில் துடிக்கும்போது நம்மை கண்கலங்க வைக்கிறார். இடைவேளைக்குப்பின் படம் ட்ராக் மாறுவதால் அவருக்கான வேலை அதிகம் இல்லாமல் போய்விடுகிறது..


பிருத்விராஜுக்கு சமமான, சொல்லப்போனால் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் தூள் கிளப்பும் செம்பான் வினோத், தனது பக்குவப்பட்ட நடிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். பிருத்விராஜை பழிவாங்க, அடிதடியில் இறங்காமல் அவரது வீட்டில் உள்ள பொருட்களை அபகரித்து 'அட' என ஆச்சர்யப்பட வைக்கிறார். அதே நேரம் பிருத்விராஜின் கிடுக்கிப்பிடியில் வசமாக சிக்கிக்கொண்டு அவர் சொல்வதை எல்லாம் செய்யும் நிலைக்கு ஆளாவது செம கலாட்டா. அவரது தம்பியாக வரும் சௌபின் சாஹிர், போக்கிரி மகேஷ்பாபு ஸ்டைலில் உல்டா காமெடி பண்ணுவது ரசிக்கும்படி இருக்கிறது.


இடைவேளைவரை ஒரு பக்கா ஆக்சன் திரில்லருக்கு உண்டான எபக்ட்டை கொடுத்துவிட்டு, அதற்குப்பிறகு காமெடியான நடவடிக்கைகளில் மாறிவிடுவதை நம்மால் உடனடியாக ஜீரணிக்க முடியாவிட்டாலும் அப்படி மாறாவிட்டால் இந்தப்படமும் ஆக்சன் படங்களில் பத்தோடு பதினொன்றாக போய்விடும் என்பதை உணர முடிகிறது. நண்பர்களுக்கும் அவர்கள் கொடுத்த பொருட்களுக்கும் பிருத்விராஜ் முக்கியத்துவம் கொடுப்பதும், அதை மீட்பதையே தனது பழிவாங்கலாக மாற்றுவதையும் பார்க்கும்போது இது என்ன அசட்டுத்தனம் என ஆரம்பத்தில் நினைக்க வைத்தாலும், அதனால் செம்பான் வினோத் தவிப்பதை பார்க்கும்போது சபாஷ் இது தான் சரியான பழிவாங்கல் என சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் ஜிஜோ ஆண்டனி.


முன்பாதிக்கதையில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை கொஞ்சம் குறைத்து நீளத்தை மட்டுப்படுத்தி இருந்தால் சுவாரஸ்யம் இன்னும் கூடியிருக்கும்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in