Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வில் அம்பு

வில் அம்பு,Vil Ambu
  • வில் அம்பு
  • ஸ்ரீ
  • ஹரீஷ்
  • இயக்குனர்: ரமேஷ் சுப்ரமணியம்
26 பிப், 2016 - 13:59 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வில் அம்பு

தினமலர் விமர்சனம்


இளம் நடிகர்கள் ஸ்ரீயும், ஹரீஸ் கல்யாணும் இணைந்து நடிக்க, பிரபல இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் தா எனும் தரமான படம் தந்த இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கி இருக்கும் படமே வில் அம்பு.


கார்த்தி எனும் ஸ்ரீயும், அருள் எனும் ஹரீஸ் கல்யாணும் ஒரே ஏரியாவில் வெவ்வேறு பொருளாதார சூழலில் வளர்ந்து ஆளாகும் இளைஞர்கள். முன்பாதியில் திருட்டு தனம் நிரம்பிய குப்பத்து கார்த்தி எனும் ஸ்ரீயால்., எந்த தப்பும் செய்யாத படித்த இளைஞரான அருள் என்னும் ஹரீஸ் கல்யாண் தொடர் அவதிக்குள்ளாக, பின்பாதியில் அருள் - ஹரீஸால், கார்த்தி - ஸ்ரீ சிக்கலில் சிக்குவதும், அந்த சிக்கல்களில் இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருவரும் மீண்டு., ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமான வாழ்க்கை வாழ்வதும் தான் "வில் அம்பு படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!


இதில் ஒரு அழகிய துரோக அரசியல் துரோகத்தையும், இளமை துள்ளும் இரண்டு காதலையும், ஒரு வலி மிகுதியான காதல் பிரிவையும், அப்பாவின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது எனும் பாடத்தையும், யாரும் இந்த பூமியில் யார் உதவியும், உபத்திரமும் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது... எனும் பிளாசபியையும் கலந்து கட்டி வில் அம்பு படத்தை விறுவிறுப்பாக, வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ்.


கார்த்தியாக பிறந்தது முதல் பெரும் திருட்டு, புரட்டு என திரியும் ஸ்ரீயும், நடுத்தர வர்க்கத்து கனவு இளைஞன் அருளாக ஹரீஸ் கல்யாணும் வாழ்ந்திருக்கிறார்கள் ...!


போக்கிரி தனங்களை தன் பிறவி குணமாக வெளிப்படுத்துவதில் ஸ்ரீ, ஜமாய்த்திருக்கிறார் என்றால், ஸ்ரீயால், தான் செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கும் ஆசாமியாக ஹரீஸ் தூள் பரத்தியிருக்கிறார்.


நித்யா - சிருஷ்டி டாங்கே, கெங்கவள்ளி - சாந்தினி உள்ளிட்ட நாயகியர் இருவரும் அவர்களுடனான நாயகர் ஹரீஸின் காதலும், நாயகர் ஸ்ரீயின் பூங்கொடி - சமஸ்கிருதியுடனான காதலும் ஒவிய, காவிய ரசனை. அதிலும் ஸ்ரீ - சமஸ்கிருதியின் காதல் கவிநயம்! நாயகியருமே நாயகர்கள் மாதிரியே நடிப்பில் பிய்த்து பெடலெடுத்திருப்பது படத்தின் பெரும்பலம்!


ஹரிஸ் உத்தமன், நந்தகுமார், சைவம் கலா, மதன் குமார், நிஷா கிருஷ்ணன், யோகி பாபு, ஹலோ கந்தசாமி, பைவ் ஸ்டார் கல்யாண் உள்ளிட்ட எல்லோரும் நச் - டச் . அதிலும், ஹான்ஸ்ட் - யோகி பாபு நச், நச்... டச்...!


மார்ட்டினின் ஒளிப்பதிவு, நவீனின் இசை மற்றும் பாடல்கள், ரூபனின் பக்கா படத்தொகுப்பு.... உள்ளிட்ட சிறப்புகள் ரமேஷ் சுப்ரமணியத்தின் எழுத்து, இயக்கத்தில் இன்றைய இளைஞர்களைப் பயமுறுத்தும் சவாலான சமூக நிலையை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டியிருப்பதில் வில் அம்பாகவென்றிருக்கிறது!


ஆக மொத்தத்தில், வில் அம்பு" சற்றே நீளமென்றாலும் நற்பண்பு!, காட்டுமா வசூலில் தெம்பு.?!


--------------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்




கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுதான் படத்தின் அடிநாதம். அட! உள்குத்து அரசியல் படமா? என அவசரப்படாதீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு கதாநாயகர்கள் மூன்று கதாநாயகிகளைச் சுற்றி வரும் படம் இது.


ஒளிப்பதிவு இனிய கவிதை! கோயமுத்தூர் குளத்தில் இருக்கும் 'ஆகாவளி' ஆகாயத் தாமரையைக்கூட அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள். மார்டின் ஜோவுக்கு ஒரு ஜே! அந்தக் கால 'கோழி கூவுது' பட நாயகி விஜியின் சாயலில் சிருஷ்டி டாங்கே ஜொலிக்கிறார். கூடுதலாகக் கன்னத்தில் விழும் குழி, கேக் மீதிருக்கும் செர்ரி மாதிரி மினுங்குகிறது. யோகி பாபுவின் அப்பாவி நடிப்பு செம காமெடி.


பழம்பெரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனை, 'ஆணியில் கேமராவைத் தொங்க விட்டுவிட்டு நடிகர்களை நடிக்க வைப்பார்' என்று செல்லமாகக் கிண்டல் செய்வதுண்டு. இந்தப் படத்திலும் கேமிரா அசையாமல் நிற்க, அதற்குமுன் பாத்திரங்கள் வசனம் பேசிச் செல்லும் காட்சிகள் நிறைய உண்டு. பலரும் புதிய நடிகர்கள். கேமிரா கூச்சமும், செயற்கைத் தன்மையும், நாடக பாணியும் தென்படுகின்றன. கூடுதல் ஒத்திகைகள் எடுத்திருக்கலாம். அரசியல்வாதிகள் வரும் காட்சிகள் ஆறிப்போன அவல் உப்புமா!


பெண்ணை வர்ணிக்ம் காட்சியில் ஒரு பாத்திரம், 'புதுசா வாங்கின பிரஷ் போல இருக்கிறாள்' என்று சிலாகிக்கும். தியேட்டரில் சிரிப்பொலி. காரணம் அப்படிச் சொல்பவர் ஒரு பெயின்டர்! யூஏ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தின் ஒரு கதாநாயகியை பள்ளி மாணவியாகக் காட்டியிருக்கிறார்கள்.


வெகுநாட்களுக்குப் பிறகு பாடல்கள், ரிதத்தோடு தாளம் போட வைத்ததற்கு ஒரு சபாஷ்! குறிப்பாகக் 'குறும்படமே' பாடல் சூப்பர். பின்னணிக் குரல்களும் சூழலும் ஒத்திசைந்து ஒலிப்பது ஜோர்!


அறை விழும் சத்தத்தோடு கோவில் மணி ஓசையை சிங்க் செய்வது போன்ற குறும்புத்தனமான காட்சிகள் அநேகம்.


'கவர்மெண்ட் வேலை கிடைப்பது தான் கஷ்டம்; கிடைச்சிட்டா வேலையே செய்ய வேண்டியதில்லை' என்பது போன்ற வாழைப்பழ ஊசி வசனங்கள் ஆங்காங்கே பளிச்! பளிச்! தியேட்டரில் கைதட்டல் பெறுவதற்காக அஜீத் கட் அவுட்களைக் காண்பிக்கும் இடங்கள், இயக்குநரின் தன்னம்பிக்கை மீது அவருக்கே சந்தேகமா என எண்ண வைக்கின்றன.


பெரிய இடத்துப் பெண், பொறுக்கியைக் காதலிப்பதாய் இருக்கும் வீச்சமடிக்கும் கதையைத் தவிர்த்திருக்கலாம். 'நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் கைகளிலும் இருக்கிறது' என்ற வசனம் மிகப் பெரிய உண்மை. அதை லாவகமாகக் கையாண்டிருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.


வில் அம்பு - குறி தவறவில்லை.




தியேட்டரில் படம் பார்த்து வெளிவந்த சீனிவாசன் - வசந்தி தம்பதியின் கருத்து: முன்பாதியில் ரவுடிக்குச் சாதகமாகவும், கதாநாயகனுக்கு எதிராகவுமே எல்லாம் நடப்பது போல் காட்டியிருப்பது விறுவிறுப்பு! 'குழந்தைகள் விரும்பும் துறையிலேயே அவர்களை ஈடுபட வாய்ப்பளிக்கப் பெற்றோர் அனுமதிக்க வேண்டும்' என்ற மெசேஜ் பாராட்டப்பட வேண்டியது! மொத்தத்தில் படம் பிடிச்சிருக்கு.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in