தினமலர் விமர்சனம்
நாய்கள் ஜாக்கிரதை எனும் ஒரே படத்தில் உதவி இயக்குனராக இருந்து விட்டு, ஆத்யன் படத்தின் வாயிலாக, ஜெட்லாக், தாய் பாக்ஸிங் .. உள்ளிட்ட புதுமையான விஷயங்களை தமிழ் சினிமாவுக்கு சொல்லி., அருமையான கரு, கதை களத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, புதுமையாக இயக்கி இருக்கிறார்... புதியவர் ராம் மனோஜ்குமார்.
அபிமன்யூ நல்லமுத்து, நாயகராக அறிமுகமாக சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்க, ஜெய்சந்திரன, ஜெனிஷ் , மகேஷ், அன்பு, ருத்ரு, ஹைடி கார்த்திக், வினிதா, நிஷா ... என ஏகப்பட்ட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்திருக்கும் படமான ஆத்யன்... படக்கதைப்படி, ஜப்பானில் பிறந்து வளர்ந்த தமிழன்... ஆத்யன் எனும் கதாநாயகர் அபிமன்யூ, தன் பூர்வீகமான தமிழகத்தை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பேஸ்புக்கில் நட்பாகும் நாயகி சாக்ஷி அகர்வாலை காதலிக்கிறார்.
ஒரு நாள், முதன்முதலாக தன் காதலியைத் தேடி தமிழகம் வரும் அபிமன்யூவை, தங்களது போலீஸ் நண்பர் உதவியுடன் ஒரு போதை பொருள் கடத்தல் கும்பல், அவரது காதலியை, அவர் சந்திப்பதற்கு முன்பே கடத்துகிறது. அந்த போலீஸும், போதை கும்பலும், இந்தியாவிற்கே புதுசான ஆத்யனை கடத்தக் காரணம், அவரை என்கவுண்ட்டரில் போட்டு தள்ளிவிட்டு போதை பொருள் கூட்ட தலைவன் அவர்தான் ... எனவே, அவரை என்கவுண்ட்டரில் போட்டு தள்ளிவிட்டோம் .... என, அரசாங்கத்தை நம்ப வைக்கும் எண்ணம்தான்.
அந்த கும்பலின் எண்ணம் ஈடேரியதா? அல்லது , தன் பெயருக்கு ஏற்றபடி எல்லாம் அறிந்த ஆத்யன் அந்த கும்பலிடமிருந்து தப்பித்தானா? தன் காதலியை கரம் பிடித்தானா..? என்னும் கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது... ஆத்யன் படத்தின் மொத்தகதையும்!
ஆத்யன் எனும் பெயருக்கேற்றபடி எல்லாம் அறிந்தவன் கேரக்டரில் புதுமுகம் அபிமன்யூ நல்லமுத்து அசால்ட்டாக நடித்திருக்கிறார். ஜெட்லாக் எனும் கண்டம் விட்டு கண்டம் வந்ததால் ஏற்படும் பகல் இரவுநேர மாற்ற தூக்க பிரச்சனையால் அபிமன்யூ நல்லமுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், தாய் பாக்ஸிங்... தற்காப்பு கலையில் நாயகர் அபிமன்யூ, நிஜமாகவே ஹீரோ என்பதும் சஸ்பென்ஸ் மட்டுமல்ல... இப்படத்திற்கான சக்ஸஸ் எலிமெண்ட்ஸும் கூட!
நாயகி சாக்ஷி அகர்வால், அழகு பதுமையாக வந்து போகிறார். பாடல் காட்சிகளில் அபிமன்யூவுடன் பட்டையை கிளப்பி இருக்கும் அம்மணிக்கு.. நடிப்பு , நடை, உடை , பாவனைக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தம்.
ஜெய்சந்திரன், ஜெனிஷ் , மகேஷ் , அன்பு , ருத்ரு , ஹைடி கார்த்திக் நாயகியின் தோழிகள் வினி தா, நிஷா... உள்ளிட்ட புதுமுக நடிகர்களில் கால் டாக்ஸி டிரைவராக வரும் ஜெயச்சந்திரன் , போலீஸ் சப் - இன்ஸ் மகேஸ்வரன் , போதை மருந்து கும்பல் தலைவன் ஜெனிஷ் ஆகிய நண்பர்கள் ... பாத்திரமறிந்து பக்காவாக நடித்துள்ளனர்.
எம்.ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, ஹரி ஜி. ராஜசேகரின் இசை, குமரவேலின் படத்தொகுப்பு , மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சி... ஆகியவை பலமாக, பாலமாக அமைந்து ராம் மனோஜ் குமாரின் எழுத்து, இயக்கத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன. கதையிலும், இயக்கத்திலும் இருக்கும் பலத்தை இயக்குனர் சற்றே திரைக்கதையிலும் காட்டியிருந்தார் என்றால் ஆத்யன் மேலும் அழகாக மிளிர்ந்திருப்பான்!
ஜெட் லாக், தாய் பாக்ஸிங் உள்ளிட்ட சாமான்ய ரசிகர்கள் கேள்விபடாத விஷயங்கள் தான், ராம் மனோஜ் குமாரின் எழுத்து, இயக்கத்தில் ஆத்யன் படத்தின் பலமும், பலவீனமும் எனலாம்.
மொத்தத்தில், ரத்தங் பிக்சர்ஸ் ரஞ்சித் குமாரின் தயாரிப்பில், ராம் மனோஜ் குமாரின் இயக்கத்தில், 'ஆத்யன்... ஆஜானுபாகுவான அசகாய சூரன்!' ஆனால், ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தமிழ் சினிமா ரசிகன்.? !