இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் பாசம் மற்றும் வெறுப்பும் கலந்த கதை பிரதர்ஸ் படம். ஹாலிவுட்டில் வௌியான வாரியர்ஸ் படத்தின் ரீ-மேக்காக வௌிவந்திருக்கும் பிரதர்ஸ் படத்தை, கரண் மல்கோத்ரா இயக்கியிருக்கிறார். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கேரி பெர்ணான்டஸ் எனும் ஜாக்கி ஷெரப் குற்றசெயல் ஒன்றுக்காக சிறை சென்று திரும்பிய இடத்தில் கதை ஆரம்பமாகிறது. ஜாக்கி ஷெரப்பிற்கு டேவிட்-அக்ஷ்ய் குமார், மான்டி பெர்ணான்டஸ் - சித்தார்த் மல்கோத்ரா என்ற இரண்டு மகன்கள். இரண்டு பேரும் எப்போதும் எதிரும் புதிராக இருப்பவர்கள். குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம், தந்தை ஜாக்கி ஷெரப் தான் கோபப்பட்டு அவரை விட்டு விலகுகிறார் அக்ஷ்ய். அதேசமயம் சித்தார்த், தன் தந்தையுடன் பயணிக்கிறார்.
அக்ஷ்ய்க்கு, ஜெனி - ஜாக்குலின் பெர்ணான்டஸ் எனும் மனைவியும், 6 வயதில் மரியா - நயிஷா கண்ணா என்ற மகளும் உள்ளனர். நயிஷா கிட்னி பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். அவரை குணப்படுத்த பணம் தேவைப்படுகிறது. தனது மகளை காப்பாற்ற வேறு வழியின்றி, தனது ஆசிரியர் ஒருவரின் அறிவுரையின் பேரில், பாஷா-அஸ்தாஸ் ராணாவின் உதவியுடன், ஆர்2எப் எனும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க களமிறங்குகிறார் அக்ஷ்ய். அதேசமயம் அக்ஷ்ய்யின் சகோதரரான சித்தார்த் மல்கோத்ராவும் அதேப்போட்டியில் களமிறங்குகிறார். அதன்பின் என்ன நடக்கிறது, யார் ஜெயித்தார்கள் என்பதற்கு விறுவிறுப்பாக விடை சொல்கிறது பிரதர்ஸ் படத்தின் மீதிக்கதை.
பிரதர்ஸ் படத்தின் ஹீரோக்களாக அக்ஷய், சித்தார்த் மல்கோத்ரா இருந்தாலும் இவர்கள் இருவரைக்காட்டியும், இவர்களது அப்பாவாக நடித்த ஜாக்கி ஷெரப் தான் அனைவரையும் கவருகிறார். வயதான தோற்றத்தில் என்ன ஒரு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு. வாவ் சொல்ல வைக்கிறார் ஜாக்கி.
அக்ஷ்ய் குமார் - டேவிட்டாக வந்து அசத்துகிறார். குடும்பத்தில் அவர் காட்டும் அன்பாகட்டும், சண்டையின் போது அவர் காட்டும் கோபமாட்டும் சூப்பர்.
சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
அக்னிபத் படத்திற்கு பிறகு பிரதர்ஸ் படம் மூலம் வந்திருக்கிறார் கரண் மல்கோத்ரா. ஹாலிவுட் படமான வாரியர்ஸ் படத்தின் ரீ-மேக் என்றாலும் அதை நமது ரசிகர்களுக்கு ஏற்றபடி சற்று மாறுதல் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல்பாதி மிகவும் மெதுவாக நகருகிறது. அதேசமயம் இடைவேளைக்கு பின்னர் படத்தில் அப்படி ஒரு விறுவிறுப்பு. இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் கரண்.
ஹேமந்த் சவுத்ரியின் ஔிப்பதிவு, அவிக் அலியின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு ப்ளஸ். அஜய் அதுலின் இசை பெரிதாக கவரவில்லை. குறிப்பாக கரீனா கபூர் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களிடம் எடுபடவில்லை.
நல்ல கதை, நல்ல முயற்சி... ஆனாலும் திரைக்கதையில் சற்றே விறுவிறுப்பு குறைந்திருப்பது பிரதர்ஸ் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. சில காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது அதற்காக பிரதர்ஸ் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில், பிரதர்ஸ் - கொஞ்சம் பாசம்... கொஞ்ம் வெறுப்பு...!