நடிகர்கள் : மோகன்லால், மஞ்சு வாரியர், ரீனு மேத்யூஸ், லேனா, இன்னொசன்ட், ரஞ்சி பணிக்கர், ஜேக்கப் கிரிகெரி
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : நீல் டி குன்ஹா
கதை : ரவீந்திரன் (நடிகர்)
திரைக்கதை - வசனம் : ரஞ்சன் பிரமோத்
இயக்கம் : சத்யன் அந்திக்காடு
வனிதாரத்னம் என்கிற மாத இதழின் சீனியர் ரிப்போர்ட்டராக வேலைபார்க்கும் மோகன்லாலுக்கு வேலையின் மீது இன்ட்ரெஸ்ட் இருந்தாலும், கொஞ்சம் அலட்சியமும் சோம்பேறித்தனமும் கொண்டவர். பத்திரிகையில் புதிதாக பதவியேற்கும் அவரது முதலாளியான ரீனு மேத்யூஸ்க்கு இந்த காரணங்களினாலேயே அவரை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிவிடவேண்டும் என்பதுதான் நோக்கம். தனது அம்மாவின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தவர் என்பதுதான் அவரை கட்டிப்போடுகிறது.
இந்த சூழ்நிலையில் சிட்டியில் திடீரென பாப்புலராகும் அட்வகேட்டான மஞ்சு வாரியரை தங்களது கோல்டன் ஜூப்ளி இதழுக்காக இன்டர்வியூ பண்ணிவிட்டு வர மோகன்லாலுக்கு அசைன்மென்ட் கொடுக்கிறார் ரீனு மேத்யூஸ். ஆனால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு குழந்தையுடன் வாழும் மஞ்சுவோ தனது வக்கீல் பணியில், எந்நேரமும் பிஸியாக இருப்பதால், மோகன்லாலால் அவரை பிடிக்கவே முடியவில்லை. அவர் பின்னாடியே அலையும் மோகன்லால் சின்னச்சின்ன பிரச்சனைகளில் சிக்கி மஞ்சுவின் கோபத்துக்கும் ஆளாகிறார்.
இதனால் பேட்டி தர அவர் மறுக்க, இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ரீனு, குறிப்பிட்ட தேதியை கெடுவாக விதித்து, அதற்குள் மஞ்சுவின் பேட்டி வரவில்லை என்றால் வேலை காலி என மோகன்லாலுக்கு செக் வைக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மோகன்லாலுக்கு மஞ்சு வாரியாரின் இண்டர்வியூ கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.
ஒரு வக்கீலிடம் பேட்டி எடுக்க அலையும் மோகன்லால் என சிம்பிளாக ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய கதை தான் என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதத்தில் தான் சத்யன் அந்திக்காடுவின் அனுபவமும் ஆளுமையும் தெரிகிறது.
சூப்பர்ஸ்டார் என்றால் பறந்து பறந்து சண்டை போட்டு, எதிரிகளை தாக்கி மக்களை காப்பற்றவேண்டும் என்கிற பார்முலாவை எல்லாம் மோகன்லால் எப்போதோ தாண்டி வந்துவிட்டதால், வினீத் என்.பிள்ளை என்கிற இந்த சீனியர் ரிப்போர்ட்டர் கேரக்டர் அவருக்கு மிகச்சரியாக செட் ஆகிறது. பத்திரிகை நிறுவனத்துடன் தனக்குள்ள அன்யோன்யத்தை காட்டும் வகையில் காலையில் அலுவலகத்துக்கு வந்து பல் தேய்த்து, குளிக்கும்போதே மோகன்லாலின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
தன்னை விரட்டுவதிலேயே கண்ணாக இருக்கும் ரீனு மேத்யூஸிடம் ராஜினமாவை உடனே எழுதி நீட்டும் கோபம், மஞ்சு வாரியர் பின்னே அலைந்து, அவரது தோழியால் போலீஸ் ஸ்டேசன் வரை செல்லும்போது ஏற்படும் அமைதி, மஞ்சு வாரியாரின் பிரச்சனைகளுக்குள் ஒரு நாகரிக மனிதனாக நுழைந்து, அவர் கேட்காமலேயே அவரது பிரச்சனைகளை தீர்க்கும் மனிதாபிமானம் என தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு இந்தமுறையும் மரியாதை செய்திருக்கிறார் மோகன்லால்.
மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றாலே அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருப்பது தானே நியதி. ஒரு வக்கீலாக அவர் சந்திக்கும் பிரச்சனைகளும், விவாகரத்தான ஒரு பெண்ணாக அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் அவரது இன்றைய சூழலை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. மோகன்லாலுடன் ஏற்படும் பிணக்கும், பின்னர் அவரது நல்ல உள்ளம் கண்டு படிப்படியாக ஏற்படும் மாற்றமும், இறுதியில் “நீங்க சந்தனப்பொட்டு வைங்க.. எனக்கு பிடிக்கும்” என மோகன்லால் வசம் மெலிதாக ஈர்க்கப்படுவதும் என மஞ்சு வாரியர் நிறைவான நடிப்பு.
பழைய ஆள் என்பதாலேயே ஆரம்பத்தில் அதிரடி முகம் காட்டி மோகன்லாலை வெறுத்தாலும், மோகன்லாலின் இன்னோர் முகம் கண்டு அப்படியே அவர் கேரக்டரின் முன் சரண்டராகும்போது பத்திரிகை முதலாளியாக வரும் ரீனு மேத்யூஸ் ரசிகர்களை குளிர்வித்து விடுகிறார். மஞ்சு வாரியாருக்கு மாரல் சப்போர்ட்டாக வரும் அவரது தோழி லேனா, பக்கத்து வீட்டு இன்னொசன்ட், என இருவரும் நாம் அன்றாடம் தரிசிக்கும் நமது நல்ல நண்பர்களின் மற்றொரு உருவங்களே..
மோகன்லாலின் அசிஸ்டண்டாக வந்து அவரை அவ்வப்போது வம்பில் மாட்டிவிட்டு, அடிக்கடி அவரிடம் வாங்கிக்கட்டி கொள்ளும் ஜேக்கப் கிரிகெரி கலகலப்பை ஏற்படுத்த தவறவில்லை. இதில் குறிப்பாக மூன்று காட்சிகளில் மட்டுமே வந்து, மஞ்சு வாரியரை மிரட்டி உதார் விடும் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் ஓனராக நடித்திருக்கும் ரஞ்சி பணிக்கர், மும்பை டான் ரேஞ்சுக்கு டீல் பண்ணி குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது அதிரடி காமெடி.
மோகன்லாலுக்கென தனியாக, டாம்பீகமாக கதை பின்னாத ரவீந்திரனும், அதற்கு பொருத்தமாக திரைக்கதை எழுதி, கச்சிதமான வசனங்களையும் எழுதியுள்ள ரஞ்சன் பிரமோத்தும் அனைத்தையும் மோகன்லாலின் கோணத்தில் இருந்து நகர்த்தாமல் கதையின் எதார்த்த போக்கிலேயே நகர விட்டிருக்கிறார்கள். வித்யாசாகரின் இசையில் 'புலரிப்பூ பெண்ணே' பாடல் அமர்க்களம்.
சத்யன் அந்திக்காடு இயக்கும் படங்கள் எல்லாமே மேம்பட்ட மனித உறவுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலேயே அமைந்திருக்கும். இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. சரி.. படத்தில் குறைகளே இல்லையா..? சின்னச்சின்னதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கவே செய்கின்றன. ஆனால் அதை பெரிதுபடுத்தமுடியாத அளவு நம்மை திருப்திப்படுத்தி அனுப்புவது தான் சத்யன் அந்திக்காடு நிகழ்த்தயிருக்கும் மாயாஜாலம்.
என்னும் எப்பொழும் - பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு பீல்குட் படம்