பஹத் பாசில், ராதிகா ஆப்தே, ரெஞ்சி பணிக்கர், ஸ்ரீகுமார்,
ஒளிப்பதிவு : சதீஷ் குறூப்பு
இசை : தைக்குடம் பிரிட்ஜ் மற்றும் கோவிந்த மேனன்
படத்தொகுப்பு, கதை & இயக்கம் : வினோத் சுகுமாரன்
இன்றைய மாடர்ன் உலகத்தில் ஒருவர் மேல் காதல் வருவதற்கும், ஒருவரை விவாகரத்து செய்வதற்கும் ஒரு சிறு காரணம் கூட போதும் என்கிற ஒன்லைனை வைத்து இழு இழு என இரண்டுமணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள ஒரு பி.பி.ஓவில் வேலை பார்ப்பவர்கள் பஹத் பாசிலும் ராதிகா ஆப்தேவும். ராதிகாவின் காதல் முறிந்துபோன நிலையில் அவரிடம் ஆதரவு காட்டுகிறார் பஹத் பாசில். பின்னர் நாளடைவில் அதுவே காதலாக மாற, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. அடிக்கடி பார்ட்டிகளில் பங்கெடுப்பதை விரும்பும் ராதிகாவிடம், ஒரு பார்ட்டியின்போது அவரது நண்பர்கள் நெருக்கம் காட்ட, அது பஹத்தின் மனதில் கோபத்தீயை மூட்டுகிறது.
கோபத்தில் ராதிகாவின் பாஸுடன் தகராறு செய்கிறார் பஹத். பின்னர் அதுகுறித்து கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் நடக்கும்போது பேச்சுவாக்கில் ராதிகாவின் முதல் காதல் பற்றி பஹத் பேசிவிட, ராதிகா தான் தனியாகப்போவதாக கிளம்பி, தொடர்ந்து விவாகரத்து நோட்டீசும் அனுப்புகிறார். வெறுத்துப்போன பஹத் கேரளாவுக்கே திரும்ப, அங்கே எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு கொலை அவரின் போக்கையே திசை திருப்பிவிடுகிறது.. ஒருகட்டத்தில் ராதிகா தனது தவறை உணர்ந்து திரும்பிவர, பஹத் என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்..
பஹத் நடிப்பில் குறை சொல்ல முடியாது என்றாலும், இனிமேல் இதுபோன்ற ஸ்டீரியோ டைப் கேரக்டர்களை தவிர்ப்பது நலம்.. மிகையில்லாத எதார்த்தமான நடிப்பு ராதிகா ஆப்தேவினுடையது.. அந்த ரேடியோ ஜாக்கியாக வரும் பெண் நன்றாக நடித்திருந்தாலும் 'பெங்களூர் டேய்ஸ்' பார்வதியை ஞாபகப்படுத்துகிறார்.
படத்தின் இயக்குனர் வினோத் சுகுமாரன் நம் ஊர் எஸ்.ஜே.சூர்யா போல, ரொமான்ஸ் காட்சிகளுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை கதைக்கு தரவில்லை.. பஹத், ராதிகா ஆப்தே ரொமான்ஸ் காட்சிகள் நேரத்தை கடத்த மட்டுமே உதவுகின்றன. அற்ப காரணத்துக்காக ராதிகா விவாகரத்து கேட்கும்போது அவர்களது காதலின் பேஸ்மென்ட்டே ஆட்டம் கண்டுவிடுகிறது. கதைக்கும் தான். மெதுவாக செல்லும் கதையில், க்ளைமாக்ஸில் பஹத் தனது புரட்சிகரமான சோஷலிச சிந்தனைக்கு மாறுவது மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டுகிறது.
கடந்த மாதம் வெளியான 'மரியம் முக்கு'வை தொடர்ந்து இந்த வருடத்தின் இரண்டாவதாக வீசப்பட்ட பந்திலும் ரன் எடுக்க தவறிவிட்டார் பஹத் பாசில்.. ஓகே பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் பஹத்.. வி ஆர் வெய்ட்டிங்..