தினமலர் விமர்சனம்
நடிகர்கள் : பஹத் பாசில், சனா அல்தாப், பிரதாப் போத்தன், மனோஜ் கே.ஜெயன், ஜாய் மேத்யூ, அஜு வர்கீஸ் மற்றும் பலர்
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்
இயக்கம் : ஜேம்ஸ் ஆல்பர்ட்
கதை : காதலும் கடவுளும் முரடனை மனிதனாக மாற்றும் விந்தை
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாகும் பஹத் பாசிலை தனது சுயலாபங்களுக்காக முரடனாக வளர்த்து ஆளாக்குகிறார் குழந்தை பாக்கியம் இல்லாத மனோஜ் கே.ஜெயன். கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவனாக வளரும் பஹத் பாசிலை, அவரது சிறுவயது தோழியும் பஹத்தின் சீனியர் கூட்டாளியான ஜாய் மேத்யூவின் மகளுமான சனா தனது காதலால் மாற்ற முயல்கிறார்.
ஒருகட்டத்தில் காதல், பஹத்தை சாதுவாக மாற்றத்தொடங்க, கோபமாகும் மனோஜ் கே.ஜெயன், சனாவுடனான காதலை கைவிடுமாறு பஹத்தை எச்சரிப்பதோடு, சனாவின் தந்தையையும் அடித்து உதைக்கிறார். தங்களது பிரச்னை தீர வேண்டுமானால் கடவுளை வேண்டுவதுதான் வழி என பஹத்திடம் சனா கூற, முன்னொரு சமயம் கோபத்தில் தான் கடலுக்குள் தூக்கி வீசிய மாதா சிலையை தேடி எடுத்து யாருக்கும் தெரியாமல் மீண்டும் மரியம் முக்கில் உள்ள பீடத்தில் வைக்கிறார் பஹத்.
மக்கள் அனைவரும் இதனை மாதா அற்புதம் காட்டியதாக நம்பத்தொடங்க, அதனால் வெளியூர் பக்தர்கள் கூட்டம் மரியம் முக்குவை நோக்கி படையெடுக்கின்றது. அந்த ஊருக்கு புதிதாக வரும் ஆங்கிலோ இந்திய இளைஞனான அஜு வர்கீஸ், ஜாய் மேத்யூவுடன் சேர்ந்துகொண்டு மக்களின் இந்த நம்பிக்கையை சரியாக மார்க்கெட்டிங் செய்து காசாக்குகிறார். வசதி வந்ததும் சனாவை பஹத்திற்கு மனம் செய்து தர மறுக்கிறார் ஜாய் மேத்யூ. இதனால் கோபம் கொள்ளும் பஹத், சனாவை கரம்பிடிப்பதற்காக, இதுவரை நடந்தது அற்புதம் அல்ல, தான் செய்ததுதான் என சொல்லி உண்மையை உடைக்க முடிவெடுக்கிறார்.. உண்மையை உடைத்தாரா, காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்..
முரட்டுத்தனமான இளைஞன் வேடத்திற்கு பஹத் பாசில் சரியாகவே பொருந்தியிருக்கிறார். ஹீரோயிசம் காட்டாமல், ஒவ்வொரு இடத்திலும் சூழ்நிலையுடனே ஒன்றி நடித்திருக்கிறார். ஆனால் நண்பனின் காதலி முன்னால் அவனது லுங்கியை அவிழ்த்து விடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
கதைக்கு ஏற்ற முகமாக அமைதியான அழகுடன் சனா அல்தாப்.. தன்னை மாதா உருவமாக பார்த்து பயந்த பஹத்தை, அதைவைத்தே அடிக்கடி கலாய்ப்பது சரியான கலாட்டா. கடற்புர சண்டியர் மரியானாக நடித்திருக்கும் மனோஜின் குணச்சித்திர வில்லத்தனம் ஓரளவு எடுபடவே செய்கிறது. மக்களின் கடவுள் நம்பிக்கையை வியாபாரமாக்க முயற்சிக்கும் அஜு வர்கீஸ், பணம் வந்ததும் ஆங்கிலோ இந்தியனாகவே மாற நினைக்கும் ஜாய் மேத்யூஸ், பாதராக வரும் பிரதாப் போத்தன் உட்பட பலரும் எதார்த்தமான ஒரு கிறிஸ்துவ மீனவ கிராமத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்கள்..
படத்தின் பாடல்களும் இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறதே என வியந்துகொண்டே, இசையமைப்பாளர் யாரென்று என்ட் கார்டை பார்த்தால் அட நம்ம வித்யாசாகர்.. அதேபோல கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் எதார்த்த கடற்புர கிராமத்தில் நாம் இருப்பது போன்ற பிரமை ஏற்படுவதும் உண்மை.. ஒரு மீனவ கிராமத்து மக்களின் கோபம், பாசம், வஞ்சம், கடவுள் நம்பிக்கை என எல்லாம் கலந்த கலவையாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் ஆல்பர்ட்.. கொஞ்சம் பிசகியிருந்தால் மத பிரச்சாரம் செய்யும் படமாக மாறும் அபாயத்தில் இருந்து மயிரிழையில் தப்பிக்கிறது படம்.
மரியம் முக்கு - சாதாரண கிராமத்து மனிதர்களின், சாதாரண வாழ்க்கையை, சாதாரணமாகவே சொல்லியிருக்கிறது.