தினமலர் விமர்சனம் » மம்பட்டியான்
தினமலர் விமர்சனம்
பணக்காரர்கள், பண்ணை முதலாளிகளிடமிருந்து கொள்ளையடித்து, ஏழை எளியோர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் ஒரு கொள்ளைக்காரனை பற்றிய கதை! பல வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெளிவந்த மலையூர் மம்பட்டியான், அவரது மகன் பிரஷாந்த் நடிக்க, அப்பா தியாகராஜனின் இயக்கத்தில் மம்பட்டியானாக மறு அவதாரம் எடுத்திருக்கிறது!
பண்ணையார் கோட்டா சீனிவாசராவிடம், பண்ணை ஆளாக வேலை பார்க்கும் மம்பட்டியான் பிரஷாந்தின் அப்பாவினுடைய கைகளில் ஒரு நாள் தங்க புதையல் கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் பொருள், புதையல் அரசாங்கத்திற்குதான் சொந்தம், என அதனை அரசாங்கத்திற்கு கொடுக்க ஆயத்தமாகும் மம்பட்டியானின் அப்பாவையும், அம்மாவையும் போட்டு தள்ளிவிட்டு, புதையலை கைப்பற்றும் பண்ணை கோட்டா சீனிவாசராவ், அதனை தட்டிக் கேட்க வரும் மம்பட்டியானையும் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு காலி பண்ணுகிறார். அவர்களிடமிருந்து தப்பும் மம்பட்டியான் பிரஷாந்த், கோவில் திருவிழாவில் பண்ணை கோட்டாவையும், அவரது அடியாட்கள் ஏழெட்டு பேரையும் வெட்டி கொன்று, தன் சகாக்களுடன் அருகில் இருக்கும் காட்டில் தஞ்சம் புகுந்து கொண்டு, அங்கிருந்தபடியே பணக்காரர்களிடமிருந்து கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவி வருகிறார்.
மம்பட்டியானை பிடிக்க போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ், ஒரு பக்கம் தன் போலீஸ் டீமுடன் பகீரத பிராயாத்தனம் செய்தபடி இருக்கிறார். மற்றொருபக்கம் மம்பட்டியான் தலைக்கு பத்து லட்சம் பணமும், பத்து ஏக்கர் நிலமும் விலையாக வைத்து அறிவிப்பும் செய்கிறார். பணத்துக்கும், நிலத்துக்கும் ஆசைப்பட்டு, ஊருக்கு நல்லது செய்யும் மம்பட்டியானை ஊர் மக்கள் யாரும் காட்டிக் கொடுத்தார்களா...? அல்லது போலீஸ்க்கு போக்குகாட்டினார்களா...? என்னும் விறுவிறுப்பான கொள்ளை கதையினூடே, மம்பட்டியான் பிரஷாந்த்க்கும், கிராமத்து பெண்ணான கண்ணாத்தாள் எனும் மீரா ஜாஸ்மினுக்குமிடையில் ஏற்படும் பரபரப்பான, அழகிய மனதைக் கொள்ளும் காதலையும் கலந்து கட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் கம் மாஜி மம்பட்டியான் நடிகர் தியாகராஜன்!
தாடி-மீசை, அடர்ந்த கூந்தல், அஜானுபாகுவான உருவத்தை சுற்றி படர்ந்த கறுப்பு போர்வை சகிதம் மம்பட்டியானாக பிரஷாந்த் பிரமாதம்! ஓப்பனிங் சீனில் பண்ணையார் கோட்டாவை போட்டுத்தள்ள பிரஷாந்த், குதிரை வண்டியில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக ஆக்ரோஷமாக வரும் காட்சி ஒன்று போதும், அப்பா பாய்ந்த எட்டடியை, பிள்ளை பதினாறடி பாய்ந்து கடந்து விட்டார் என்று சொல்வதற்கு... வாயில் மெழுவர்த்தியை ஏந்தி கை கட்டுகளை தகர்த்து தப்பிப்பது, புத்திசாலித்தனமாக போலீஸ் பிரகாஷ்ராஜிடமிருந்து தன் சகாக்களை விடுவித்து மீட்டு செல்வது, காதலி சொல்லிவிட்டாள் எனும் ஒரு காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சாட்டையடி வாங்குவது என மம்பட்டியானாக நெகிழ வைக்கும் பிரஷாந்த், மீரா ஜாஸ்மின் உடனான காதல் காட்சிகளில் மகிழவும் வைக்கிறார்.
கண்ணாத்தாளாக மீரா ஜாஸ்மின், பழைய மம்பட்டியான நாயகி சரிதா இடத்தை எட்டிபிடிக்க முயன்றிருக்கிறார் அவ்வளவே! ஆனாலும் சின்னப் பொண்ணு சேலை... பாடலில் சரிதாவையும் விஞ்சி சபாஷ் வாங்கிவிடுகிறார். பலே! பலே!!
மம்பட்டியானை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ், முமைத்கானை ஒருதலையாக காதலிக்கும் சின்ன பண்ணையாக காமெடி வடிவேலும் இருவரும் படத்தின் பெரும் பலம்! அதேநேரம், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் இவரது பாத்திரம் ஓ.கே.! பங்களிப்பு பலவீனம்!!
மலையூர் மம்பட்டியான் பாடல்களை அப்படியே இசையமைப்பாளர் எஸ்.தமன், ரீ-மேக்கான மம்பட்டியான் படத்தில் பிரமாதமாக ரீ-மிக்ஸ் செய்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்! அதேமாதிரி இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பச்சை பசேலின், சாஜி குமாரின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாகும்!
தியாகராஜனின் பிரமாண்டம் ப்ளஸ், பிரமாதமான தயாரிப்பு மற்றும் எழுத்து, இயக்கத்தால், புதிய "மம்பட்டியான்", பழைய "மலையூர் மம்பட்டியான்" படத்தை விட ஜொலிக்கிறது என்றால் மிகையல்ல!
-------------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
தன் அம்மா - அப்பாவை எரித்துக் கொன்ற பண்ணையார் உள்பட எட்டுப்பேரை போட்டுத் தள்ளிவிட்டு காட்டுக்குள் தலைமறைவாக இருந்து கொண்டே மலைவாழ் மக்களுக்கு உதவி செய்கிறான் மம்பட்டியான்.
பிரசாந்தை இனிமேல் சாக்லேட் பாய் என்று சொல்ல முடியாது. மதயானைபோல உடம்பை முறுக்கேற்றி படம் முழுக்க காட்டுக்குள் அலைந்து திரிகிறார். சண்டையில் தூள் கிளப்புகிறார். போலீஸ் ஐ.ஜி.யாக வரும் பிரகாஷ்ராஜிடம் இரண்டு முறை நேரில் வந்து "உன்னால் என்னைப் பிடிக்க முடியாது. நீ செத்தா உன் குடும்பம் மட்டும்தான் அழும். நான் செத்தா இந்த ஊரே அழும் என பஞ்ச் அடித்துவிட்டு சாமர்த்தியமாக பிரசாந்த தப்பிக்கும்போது தியேட்டரில் விசில் சப்தம். கவர்ச்சிக்கு முமைத்கான். காதலுக்கு மீரா ஜாஸ்மின்.
வழக்கம் போல தனி ஆளாக வந்து முமைத்கானிடம் ஜொள்ளு விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார் வடிவேலு. இடையே டம்மி மம்பட்டியானாக ரியாஸ்கானை கொண்டு வருவது நல்ல திருப்பம். அதே டம்மி மம்பட்டியானை வைத்து பிரசாந்தின் கூட்டாளிகளை போலீஸ் போட்டுத் தள்ளுவதாக காட்டப்படும் காட்சிகளில் டைரக்டர் தியாகராஜன் கைதட்டல் போட வைக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவில் காடுகளின் சந்து, பொந்துகளைக் காட்டி நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.
மம்பட்டியான் - மனதில் நிற்கிறான்.
குமுதம் ரேட்டிங் - ஓகே