தினமலர் விமர்சனம்
மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்க, ஜி.தனஞ்ஜெயனின் புளுஒசியன் எண்டர்டெயின்மெண்ட்டும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்து வெளியிட, ஷிவ்மோஹா எழுத்து, இயக்கத்தில், அஸ்வின் - ஷிவ்தா ஜோடியுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெடி சக்ரவர்த்தியும் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் ஜீரோ.
கதைப்படி, கர்ப்ப காலத்தில் மன நோய் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் தாய்க்கு பிறந்த மகளுக்கு, கர்ப்பபையில் பிரச்சினை. ஹீரோவுடன் காதலில் விழும் நாயகிக்கு கல்யாணம் ஆனவுடன் கர்ப்ப காலத்திற்கு முன்பு தாய்க்கு வந்த அதேமாதிரி மனநோய் பிரச்சினை. கூடவே, மாமனாருடனும் சின்ன சின்ன மன வருத்தங்கள். இவற்றில் இருந்து ஹீரோ, ஹீரோயினை அவர் வழியிலேயே சென்று மீட்டெடுத்தாரா? இல்லையா..? என்பது தான் ஜீரோ" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் .
இந்தக் கதையை எத்தனைக்கு எத்தனை திகிலாகவும், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்சாகவும் தரமுடியுமோ அத்தனைக்கு அத்தனை அசத்தலாக தந்திருக்கிறார் ஜீரோவின் எழுத்து, இயக்த்திற்கு சொந்தக்காரரான ஷிவ்மோகா. அது, ஒரு கட்டத்தில் அசத்து, அசத்தென்று அசத்தி மன நோய் ப்ரியாவுக்கா?, பாலா - அஸ்வினுக்கா படம் பார்க்கும் நமக்கா..? என்று குழப்புவது தான்.. அபத்தம்!
ப்ரியாவாக நெடுஞ்சாலை, ஷிவ்தா நன்றாகாவே நடித்து பயமுறுத்தியிருக்கிறார். அதிலும் இடைவேளைக்கு அப்புறம் மருத்துவமனை சீலிங்கில் எரியும் பிங்க் கலர் பல்பை சீலிங்கில் ஏறி கையில் பிடிக்கும் காட்சியில் மிரட்டியிருக்கிறார் அம்மணி.
பாலாவாக, அஸ்வின் அழகாக மிரண்டு, மிரட்டியிருக்கிறார்.
சீனிவாஸ சித்தப்பாவாக ஹீரோவின் கண்களுக்குத் தெரியும் ஜெடி சக்ரவர்த்தி காற்றை நோக்கி கை கால்களை அசைத்து அறிமுகமான படி, நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் தென்பட்டிருக்கிறார்.
ஹீரோவின் அப்பா ராகவேந்தர், ஹீரோயினின் தத்து அம்மா துளசி, மனநோய் மருத்துவராக வரும் டாக்டர் ஷர்மிளி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.
நாயகர் பாலா - அஸ்வின், நாயகி ப்ரியா - ஷிவ்தாவை முதன் முதலாக பார்த்த கதையை சொல்லும் இடம் ரம்மியமாக, ரசனையாக இருக்கிறது.
நிவாஸ்கே பிரசன்னாவின் இசையில் பிரமாதமாக ஹம்மிங் செய்யத் தோன்றும் டைட்டில் மெலடிபாடல் அழகு. பின்னணி இசை ...என்ன தான் திகில் படமென்றாலும் காதை புண்ணாக்கும் மிரட்டல்.
ஆர்.சுதர்ஸனின் கத்தரி ஒரு காட்சியில் நாயகி ஷிவ்தா காதை குத்த எடுத்து சென்று குத்தாமல் விடுவது மாதிரி நிறைய இடங்களை படத்தில் கத்தரிக்காமல் தொங்கலில் விட்டிருக்கிறது ரசிகனை.. பாவம் .
பாபு குமார்.ஐ.ஈ.யின் ஒளிப்பதிவும், பூர்ணிமா இராமசாமியின் காஸ்ட்டீயூமும் இப்படத்திற்கு பெரிய பலம்!
ஆரம்பத்தில் வரும், ஆதாம், எவாளால் உலகம் உருவான கதை... வெள்ளை பாம்பு... ஆகிய புதுமைகளுக்காக ஜீரோவை பார்க்கலாம். மற்றபடி, ஷிவ்மோஹா எழுத்து, இயக்கத்தில், எது நிஜம்? எது பொய்..? ன்னு தெரியாமல்.... நாயகி படத்தில் அடிக்கடி தவிப்பது மாதிரி ரசிகனும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் தியேட்டரை விட்டு வெளியேறுகிறான்... பாவம்!
ஆக மொத்தத்தில், ஜீரோ - ஜீரோவே !
-------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பாம்பு ஒன்றும் பேய் ஒன்றும் கூட்டணி அமைத்து மக்களைச் சந்திப்பதுதான் கதை. அரசியல் படம் என்று அவரசப்பட்டு விடாதீர்கள். அக்மார்க் பேய்ப் படம்ங்ணா!
வித்தியாசமான கதை, அபாரமான ஒலிப்பதிவு, மனப்பிறழ்வின் அற்புதச் சித்தரிப்பு இவற்றுக்காக முதலில் பாராட்டிவிடுவோம்.
படத்தின் கதையைக் குழப்பம் இல்லாமல் - தெளிவாக - புரியும்படி சொல்ல முயற்சிக்கிறேன். அதிலேயே விமர்சனமும் அடங்கினாலும் அடங்கிவிடும். யார் கண்டது!
ஆரம்பத்திலும், இடையிலும் ஆதாம் ஏவாள் கதையைச் சொல்லி ஒரு குரல் மிரட்டுகிறது. பிங்க் கலரில் எந்தப் பொருளைக் கண்டாலும் லவட்டிவிடுவார் சற்றே முற்றலான முகத்தோற்றம் கொண்ட கதாநாயகி. அந்த கிளப்டோ மேனியாக், பிடிபட்டு விட்டால் கண்டுபிடித்தவரின் தாயின் ஒழுக்கத்தைச் சந்தேகிக்கும் (பீப்) வார்த்தையால் திட்டுவார். ஒரு கட்டத்தில் மனநல ஆலோசகரே பார்த்து வாரிசுருட்டி ஓடுமளவுக்கு செங்குத்தான சுவரில் பல்லி போல ஏறி, பிங்க் நிற பல்பை முறித்து, நமக்கு பல்ப் தருவார். திடீரென்று வௌ்ளை நிறப் பாம்பு ஒன்று வந்து அவ்வப்போது பேசிவிட்டுப் போகும்.
கதாநாயகிக்கு இல்யூஷன், ஹாலுசினேஷன் பிரச்னையா என முதலில் சம்சயத்தை ஏற்படுத்தி, அட்டகாசமான பின்னணி இசை மூலம் திகிலூட்டுகிறார்கள். கொஞ்சம் அசந்த நேரத்தில் கருப்புக் கண்ணாடி ணிந்த ஒருவர், மற்றவரின் ரகசியங்களை எல்லாம் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார். ஆண்ட்ரினா என்ற அவரது மனைவியுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த ஆண்ட்ரினா ஒரு பேய். ஆனால் சாதுவான பேய்.
ஆச்சா! கதாநாயகியுடைய அம்மா அவ்வப்போது வந்து கதாநாயகியை விசித்திரமான இடம் ஒன்றுக்குக் கூட்டிப் போவார். அதிலென்ன விசேஷம்? அங்கே தான் இருக்கு சூட்சுமம். அம்மாவும் ஒரு பேய். அது ஒரு மனநலம் பிறழ்ந்த பேய் என்பது கூடுதல் தகவல்.
சில பல வெளிநாட்டுப் பேய்கள் தங்கள் பாட்டுக்கு வௌ்ளை விழிகளுடன் சாதுவாக இங்கும் அங்கும் வனம் ஒன்றில் நடந்து கொண்டிருக்கின்றன.
சரி! கதாநாயகிப் பேய், 'உலகுக்கே பாடம் புகட்டுகிறேன் பார்' என்று ஒரு கட்டட உச்சியில் ஏறிக் கையை முறுக்கிக் கொள்கிறது. அடேயப்பா! சூரியனே பிங்க் கலராகி, ஜனங்கள் ல்லாரும் கலந்துகட்டியாகக் கழம்பிவிடுகிறார்கள். நல்ல வேளையாக சூரியன் நார்மலாகி விடுகிறது.
திடீரென்று முதலில் சொன்ன கூலிங்கிளாஸ் ஆசாமி, வெளிநாட்டு டீம் ஒன்றை வரவழைத்துப் பேயோட்ட முயற்சிக்கிறார். யாரு கிட்ட? நம்ம ஆதாம் ஏவாள் காலத்துப் பேய்கிட்டயா? பேயோட்ட வந்தவர்கள் பணாலாகிவிடுகிறார்கள். இதற்கிடையில் ஆறு மாதம் கழித்து, 15 நிமிடம் கழித்து என்றெல்லாம் சப்டைட்டில் ஒரு பக்கம் தாறுமாறாக ஓடிமிரட்டுகிறது.
வினோதமான விசித்திரமான காட்சிகளும் சம்பவங்களும் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. நகைச்சுவைகளைக் காட்சிகளே கிடையாது. ஆனாலும் ரசிகர்கள் அவ்வப்போது கேலிப் புன்னகை புரிகிறார்கள். கட்டக் கடைசியில், தாய்மை அடைய இயலாத குறையுள்ள கதாநாயகியின் வயிற்றில் ஆகாசத்தில் இருந்து ஓர் ஒளி புகுந்து கர்ப்பம் தரிப்பதோடு படம் (ஒருவழியாக) முடிகிறது. ஓரளவு கதையைத் தெளிவாகச் சொல்லிவிட்ட நிம்மதி எனக்கு.
தியேட்டரில் வேலூர் ஜெயந்தியின் கருத்து: என்னமோ சொல்ல வர்றாங்க. என்னன்னுதான் புரியவே இல்லை.
ஜீரோ - குறியீடான தலைப்பாய் இருக்குமோ?