விமர்சனம்
-------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
அதிதி என்றால் விருந்தினர் என்று அர்த்தம். ஹீரோவின் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் அதி பயங்கரம்தான் படம். மகளைக் காணவில்லை, மனைவியையும், கணவனையும் வில்லன் கடத்துகிறான், வாழ்நாள் வருமானம் பூராவும் தீக்கு இரையாகிறது. கணவனின் அலுவலக ரகசியத்தை, மனைவியே போட்டிக் கம்பெனிக்குக் கொடுக்கிறாள். மனைவி மேல் வில்லன் கை வைக்கிறான். ஏன்? என்ன ஆச்சு? என்பதுதான் அதிதி.
ஆங்கிலத்தில் பட்டர்ப்ளை ஆன் ஏ வீல், மலையாளத்தில் காக்டெய்ல் என்று சக்கைப்போடு போட்ட ஆக்ஷன் த்ரில்லரை விறுவிறுப்பு குறையாமல் தமிழில் தந்ததற்காக இயக்குநர் பரதனைப் பாராட்டலாம்.
நந்தா, அன்பு, கண்டிப்பு, கோபம், இயலாமை என்று செமை ஸ்கோர் அடிக்கிறார். (ஏன் இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை?)
அனன்யா க்யூட். தவிப்பு தானாக வருகிறது.
வெறித்த பார்வை, வெடுக்கென்ற வார்த்தை என்று அந்த தாடிக்கார வில்லன் நிகேஷ்ராம் டெர்ரர்!
தம்பி ராமைய்யா, கொஞ்சம் புலம்பல். கொஞ்சம் அலம்பல்!
அஷ்வதி வர்ஷா, ஹம்மாடி வர்ஷா!
உன் பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அடுத்தவன் பொண்டாட்டி எல்லாம்... (மியூட்!) இருக்கணுமா? படத்தின் அடி நாதமே இதுதான். க்ளைமாக்ஸ் வசனம் முகத்தில் அறைகிறது!
எல்லாம் சரிதான். தப்புப் பண்ணும் ஆண் மட்டும் எந்த தண்டனையும் பெறாமல் ஜாலியாய் சுற்ற, பெண்ணுக்கு மட்டும் கோமா தண்டனை எந்த விதத்தில் நியாயம்?
அதிதி - கள்ளக் காதலுக்கு எச்சரிக்கை!
குமுதம் ரேட்டிங் - ஓ.கே
--------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
சர்வசாதாரணமாக மனைவியை ஏமாற்றி பிற பெண்களுடன் கூத்தடித்தும் தவறு செய்யும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும்வண்ணம் அதிதி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. மலையாளத்தில் காக்டெயில் என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழுக்கும் முற்றிலும் புதிய பாணி. அதிதி என்றால் விருந்தாளி என்று அர்த்தம். அந்த எதிர்பாராத விருந்தாளி நடத்தும் களேபரம்தான் கதை.
அழகான கணவன், மனைவி நந்தா - அனன்யா. அருமையானத் தேர்வு. இயல்பான நடிப்பில் இருவரும் ஜொலிக்கிறார்கள்.
இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியில் விழி பிதுங்கும் நந்தா, மனைவியிடம் பாசம், மகளிடம் அன்பு - வில்லன் நிகேஷ்ராம் உடன் மோதல் என தன் பங்கை நன்றாகச் செய்துள்ளார்.
பல மாடிக் கட்டடத்தின் உச்சியில் நிகேஷ்ராம் உட்கார்ந்து கொண்டு அறிமுகமாகும் முதல் காட்சியும் சரி, படத்தின் முடிவில் செயலற்று கோமா ஸ்டேஜில் இருக்கும் தம் மனைவி எப்போது எழுவார் எனக் காத்திருக்கும் காட்சியிலும் சரி, நந்தாவை அலைக்கழித்து, ஆட்டிவிக்கும் ராஜதந்திரத்திலும் சரி, அனன்யாவை தொட்டுப் பார்த்து முகர்ந்து பார்க்கும் அந்த வில்லத்தனத்திலும் சரிநிகேஷ்ராம் நடிப்பு உச்சிக்கே செல்கிறது. படத்தின் தயாரிப்பாளரும் அவரேதான். தன் பங்கை உணர்ந்து நடித்துள்ளார். அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் கூட கச்சிதமாய் பொருந்தி உள்ளார்.
படத்தில் டுவிஸ்ட்டுக்கு மேல் டுவிஸ்ட் வைத்து இயக்குனர் நம்மை பல காட்சிகளில் பதற்றப்பட வைக்கிறார். நிகேஷ்ராம் நந்தா தரும் தண்ணீர் பாட்டிலை அருந்துவதும், ரோட்டோர பெண்ணை அனன்யா முன்னாலேயே ரேட் பேசி அழைத்து வரச் சொல்வதும், அனன்யாவை ரூமுக்குள் வைத்து நந்தாவை வெளியே போ என தள்ளி, காமம் பேசுவதும் என இயக்குனர் பதற்றப்பட வைக்கிறார். அனன்யா அழகான அம்மா - கணவனைத் திருத்த அவர் போடும் நாடகம் பலே. தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்.
தம்பி ராமைய்யா வரும் காட்சிகள் எல்லாம் கலகல, அவர் சென்னை வந்து அலைந்து விட்டு மீண்டும் உடுமலைப் பேட்டை செல்லும்போது அவர் பேசுவது மெசேஜ். சென்னைக்கு வர்றவங்க, அத்தை மகள் இருக்காள், பொண்டாட்டி தம்பி இருக்கான்னு வந்துடாதீங்க என்று சொல்லும் இடம் சிந்திக்க வைக்கிறது. இசை பரத்வாஜ். பாட்டு மட்டுமல்ல, பின்னணி இசையும் கதைக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.
ஜெய்யின் ஒளிப்பதிவு மிரட்டலான அழகு. மொத்தத்தில் அதிதி ஒரு அருமையான குடும்பப் படம். சமூகத்துக்கு ஒரு சவுக்கடி கொடுக்கும் படம். நிகேஷ்ராம் மூலம் சமூகத்தைச் சாடி, வசனம் எழுதி இயக்கி இருக்கும் பரதனுக்கு சபாஷ் போடலாம்.
படம் முழுக்க பதற்றப்பட வைத்து முடிவில் இதயத்தைத் தொட்டு ஈரம் கசிய வைத்து விடுகிறார். எதிர்பாராமல் வந்த விருந்தாளி அதிர்ச்சி தந்து ஆனந்தப்படுத்துகிறார். அதுசரி, நிகேஷ்ராம். மற்றும் அனன்யா சேர்ந்து நடத்தும் நாடகம் மீது நந்தாவுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வரவில்லையா என்பது மட்டும் கேள்வியாய் தொக்கி நிற்கிறது.
அதிதி - கோலிவுட்டுக்கு நல்ல விருந்தாளி























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!