Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ராமானுஜன்

ராமானுஜன்,Ramanujan
31 ஜூலை, 2014 - 10:45 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராமானுஜன்

தினமலர் விமர்சனம்


நீங்கள் அடிக்கடி ஏடிஎம்முக்குச் சென்று பணம் எடுப்பவரா, மெயில் இல்லாமல் உங்கள் தினசரி வாழ்க்கையை நகர்த்த முடியவில்லையா...இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்த ஜீனியஸ் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம். கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் என்ற கணித மேதைதான் அதற்குக் காரணம். நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன், இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது இந்தப் படத்தைப் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும்.


எப்படி ஒருவரால் இந்த அளவிற்குப் புத்திசாலியாக இருக்க முடிந்தது என்ற ஆச்சரியம் படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. சிறு வயதிலேயே கேள்வி கேட்டுப் பிரமிக்க வைத்த அந்த ராமானுஜன் 1920ல் இறக்கும் தருவாயில் கூட மார்க் தீட்டா என்ற கணிதத்தை கண்டு பிடித்தார். ஒரே வழியில் அவர் விடை கண்டு பிடித்தது எப்படி என்பதை நாம் கண்டு பிடிக்கவே 82 ஆண்டுகளில் ஆகியுள்ளது. ஆம், 2012ல்தான் ராமானுஜன் கண்டுபிடித்த மார்க் தீட்டா வுக்கு வழி வகைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். ராமானுஜன் கணித முறையான கிரிப்டாலாஜி தான் இன்று பல்வேறு அறிவியில் தொழில்நுட்பங்களில் பயன்பட்டு வருகிறது. ராமானுஜன் கண்டுபிடிக்கவில்லையென்றால் இந்த உலகம் இப்போது இப்படி இயங்கிக் கொண்டிருக்க முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக் குறிதான்.


இப்படிப்பட்ட ஒரு மாமேதையைப் பற்றிய படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று நான்கு இளைஞர்கள் முன் வந்ததும், இதைப் படமாக ஒரு நேர்த்தியான வாழ்வியலாகக் கொடுத்த இயக்குனர் ஞான.ராஜசேகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாரதியார், பெரியார் படங்களுக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்குவதற்கு அவர் காலம் தாழ்த்தினாலும் அது இந்த கணித மேதைக்காகத்தான் என்னும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


தமிழ்த் திரையுலகிலும் நம் தமிழ் மக்களின் பெருமையை இந்த உலகத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நமக்கும் ஒரு பெருமைதான். எத்தனை கமர்ஷியல் படங்கள் எவ்வளவு கோடிகளை சம்பாதித்தாலும் இன்று தங்களை முன்னணி இயக்குனர்கள் என்று சொல்லிக் கொண்டு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒரு சிலர் இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்வார்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இல்லை.


1887 முதல் 1920 வரையிலான வாழ்க்கை முறையை வெளிப்படுத்தக் கூடிய, அந்தக் கால பின்னணியையும், பொருட்களையும், ஆடைகளையும் அப்படியே கண்முன் கொண்டு வருவது சாதாரண விஷயமா. அதற்காக உழைத்த எல்லோரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். மலைக்கு பெயின்ட் அடிப்பதையும், மனிதர்களுக்கு பெயின்ட் அடிப்பதையும், ரயிலுக்கு பெயின்ட் அடிப்பதையும், ஆயிரம் நடனக் கலைஞர்களை ஆட வைப்பதையுமே சாதனை என வாய் கிழியப் பேசி வருபவர்கள் இப்படிப்பட்ட முயற்சியை எடுத்து ஒரு உன்னதமான படைப்பைக் கொடுப்பார்களா ?


கும்பகோணத்தில் ஏழை பிராமணக் குடும்பத்தில் ஸ்ரீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் ராமானுஜன். சிறு வயதிலேயே கணிதத்தின் மீது தீராத காதல் கொண்டவர். மற்ற பாடங்களில் பெரிதாக மதிப்பெண் வாங்கவில்லையென்றாலும் கணிதத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் திறமை கொண்டவர். அதுவே அவருடைய அப்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மகன் ராமானுஜன் ஒரு டிகிரி கூட வாங்காமல் இருக்கிறானே என அப்பா கோபப்படுகிறார். அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே செல்கிறான் ராமானுஜன். பின்ன திரும்பி வரும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் எப்படியோ சிபாரிசால் சென்னை துறைமுகத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு அவனது கணிதத் திறமையைப் பார்த்த சேர்மன், அவனை லண்டனுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க முயற்சிக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் ஹார்டி முயற்சியால் ராமானுஜன் அங்கு சென்று மேற்படிப்பு படிக்கிறார். பல கணித வழி வகைகளைப் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார். ஹார்டியின் ஆதரவால் எஃப்ஆர்எஸ் பட்டமும் பெறுகிறார். சரியான உணவு வகை இல்லாமல் அவர் உடல் நலம் குன்றுகிறது.


சிறு வயது முதலே உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுவது வழக்கம். பின்னர் இந்தியாவுக்கே திரும்புகிறார். ஆனாலும், உடல் நிலை மோசமடைந்து 33 வயதிலேயே அகால மரணமடைகிறார். சாஸ்திர வழக்கப்படி சீமைக்குச் செல்லக் கூடாது என்பதையும் மீறி அவர் அங்கு சென்றதாலும், திரும்பி வந்த பின்னும் பிராயச்சித்தம் செய்யவில்லை என்பதாலும் அதனால் தங்களுக்கும் தோஷம் ஏற்பட்டு விடும் என்று கருதி ராமானுஜனின் உறவினர்கள் அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் போய்விடுகிறார்கள். இதுதான் இந்த கணித மேதையின் கண்ணீருடன் முடிந்த வாழ்க்கை வரலாறு.


ஸ்ரீனிவாச ராமானுஜனாக புதுமுகம் அபிநவ் வாடி. எங்கிருந்துதான் இவரைத் தேடிப் பிடித்தார்களோ. இனி, கணித மேதை ராமானுஜன் என்றாலே இவர் முகம்தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் ஆகியோர் எப்படியிருப்பார்கள் என நமக்கு இன்றும் நினைவு படுத்தி வருவது அந்த திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் இனி ராமானுஜன் இடம் பிடிப்பார். அதற்குக் காரணமாக இருக்கப் போவது அபிநவ் வாடியின் அருமையான நடிப்பு.


ராமானுஜன் மனைவியாக பாமா. நிஜ வாழ்க்கையில் ராமானுஜன் சிறு வயதுப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார் என படித்துள்ளோம். அதை அப்படியே கண்முன் காட்டியுள்ளார் பாமா. கணவன் மீது கொண்ட காதலில் ஆகட்டும், மாமியார் மீது கோபப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே வைத்துக் கொள்வதில் ஆகட்டும், பாமாவின் நடிப்பு பாஸ் மார்க்கையும் தாண்டிவிட்டது.


ராமானுஜனின் அம்மாவாக சுகாசினி. மகனின் மீது அதிக பாசம் கொண்ட ஒரு அம்மா. மகனுடைய கணிதத் திறமைக்காக கணவனிடம் சண்டை போடும் அளவிற்கு பாசம் வைத்திருப்பவர். மருமகள் வந்த பிறகும் மகனுக்காக தான் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்மா. கோமளத்தம்மாளாக கோடு என்ன ரோடே போட்டு விட்டார்.


ராமானுஜனின் அப்பாவாக நிழல்கள் ரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் ஹார்டியாக கெவின் மெக்கோவன், சந்திர மஹலனோபிஸ் ஆக அப்பாஸ், சிறு வயது ராமானுஜனாக அன்மோள், லிட்டில் உட்டாக மைக்கேல் லீபர், நெல்லூர் கலெக்டராக சரத் பாபு, சிங்காரவேலு முதலியாராக ராதாரவி, நாராயண ஐயராக ஒய்ஜி.மகேந்திரா, கிருஷ்ண ராவாக மனோபாலா, சத்யப்ரியா ராயராக தலைவாசல் விஜய், சேஷு ஐயராக ராஜா கிருஷ்ணமூர்த்தி, என படத்தில் நடித்துள்ள அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.


ரமேஷ் விநாயகத்தின் இசையும், சன்னி ஜோப்பின் ஒளிப்பதிவும், சகுந்தலா ராஜசேகரனின் ஆடை வடிவமைப்பும், கிருஷ்ணமூர்த்தியின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கின்றன.


ராமானுஜன் - கணக்கு இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை, கணக்கு பிடித்தவர்களும், கணக்கு பிடிக்காதவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







--------------------------------------------------------------



கல்கி விமர்சனம்





கணிதமேதை ராமானுஜனின் கும்பகோணம் டூ கேம்பிரிட்ஜ் பயணத்தின் அழகான தொகுப்பு இந்தப் படம்.


"பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று பள்ளி ஆசிரியரை தமது வயதுக்கு மீறிய கணித ஞானத்தால் திணறிடிக்கிறான் சிறுவயது ராமானுஜன். ஆனாலும் கணிதத்தில் 100/100 வாங்கினால் போதுமா? மற்ற பாடங்களில் பெயிலாகி விட்டால் என்ன பயன் என ஆசிரியர்களால் ஒதுக்கப்படுகிறான்.


மகனின் கணித ஆர்வத்தால் அவன் பட்டப் படிப்பில் தேறுவதே கேள்விக்குறி என்பதால் தந்தை மிகவும் கோபப்படுகிறார். கிணதத்தில் மட்டுமே அதிகம் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ராமானுஜத்துக்கு சொந்த ஊரில் யாரும் வேலை கொடுக்க மறுத்ததால், சென்னைக்குச் செல்கிறார். அங்கு அவரின் கணித அறிவைப் பலரும் போற்றினாலும் சென்னையிலும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் வெறுத்து மீண்டும் சொந்த ஊருக்கே திரும்புபவருக்கு அவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். ராமானுஜத்தின் திறமையை பார்த்து வியந்த பிரிட்டிஷ் பேராசிரியர் ஹார்டி உதவி செய்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று தன் அசாத்திய கணித ஆராய்ச்சியை தொடங்குகிறார்.


இந்நிலையில், ராமானுஜத்தை காசநோய் தாக்குகிறது. மனைவியின் பிரிவும் அவரை வாட்டுகிறார். இந்நிலையில் அவருடைய கணித ஆராய்ச்சி முடிந்ததா? மனைவியுடன் மீண்டும் சேர்ந்தாரா? அவருடைய நோய் குணமானதா என்பதே படத்தின் இரண்டாம் பாதி.


மறைந்த நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசன் - சாவித்ரி பேரன் அபினய் ராமானுஜன் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறார். அனுபவம் உள்ள நடிகரை போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அபினய். மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாமா அழகுடன், நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார். நிழல்கள் ரவி, சுஹாசினியின் அனுபவ நடிப்பு அருமை. சரத்பாபு, அப்பாஸ், ராதாரவி, டி.வி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது.


கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியள்ளது. ஒளிப்பதிவாள் சன்னி ஜோசப் பின்.


ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை பிரமிப்பூட்டுகிறது.


பாரதி, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த இயக்குனர் ஞான ராஜசேகரனின் உன்னத முயற்சி. ராமானுஜனின் வாழ்க்கையில் உள்ள சோகங்களை அழகாக பார்வையாளர்ளுக்கு விளக்கியுள்ளார் இயக்குனர் ஞான ராஜசேகரன். திரையில் விரியும் நம் மண்ணின் முக்கிய ஆளுமையின் வாழ்வை கட்டாயம் நாம் பார்க்க வேண்டும். படிக்கும் மாணவ, மாணவியர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.


ராமானுஜன் - படமல்ல, வாழ்க்கைப் பாடம்!






----------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்




ராமானுஜனின் தேவை இரண்டு வேளை சாப்பாடு. அது கிடைத்தால் கணித உலகையே வெல்லலாம். அதற்காக அந்த கணிமேதை படும் அவமானங்களும் வலிகளுமே திரைப்படமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


கும்பகோணத்துக்கு குழந்தை ராமானுஜனில் ஆரம்பிக்கிறது படம். "எந்த எண்ணையும் அந்த எண்ணால் வகுத்தால் ஈவு ஒன்றுதான் வரும் என்ற ஆசிரியரின் கணித வகுப்பில் "அது எப்படி? பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று வருமா? - என்று கேட்டுத் திக்குமுக்காட வைக்கும் அந்த ஞானப்பழம் ராமானுஜனை கும்பகோணம் ஒதுக்குகிறது. பிற்காலத்தில் லண்டன் கொண்டாடுகிறது.


கணக்குதான் மூச்சு என்று வாழ்ந்த ராமானுஜனை வறுமை விரட்டுகிறது. கணிதத்தால் வேலை கிடைக்கவில்லை. திருமணம் செய்து வைத்தும் அவனால் கணிதத்தை மறக்க முடியவில்லை. அரிசி மண்டியில் வேலை கேட்டு நிற்கு அவலம். அவரது கணிதத்திறன் ஒரு வெள்ளைக்கார அதிகாரியால் கண்டுணரப்பட்டு, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பேராசிரியர் ஹார்டியிடம் அனுப்பப்படுவது திருப்பம்.


அங்கும், மனைவியைப் பிரிந்த ஏக்கம், அசைவம் சாப்பிட மறுக்கும் ஆச்சாரப் பிடிப்பு. சக வெள்ளைக்கார மாணவர்களின் "மன நோயாளி பட்டம், அதனால் உலக அங்கீகாரம் பறிபோவது இதெல்லாம் அவனை டி.பி. நோயில் தள்ளுவது பரிதாபம். ஹார்டியால் உலக அங்கீகாரம் கிடைத்ததா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.


ராமானுஜனாக வரும் அபினவ் கனகச்சிதம் (ஜெமினி-சாவித்திரி பேரனாமே!). அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஹார்டி பாத்திரம் நம்மைக் கவர்கிறது.




குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in