தினமலர் விமர்சனம் » தகராறு
தினமலர் விமர்சனம்
வம்சம் , மெளனகுரு படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம், அருள்நிதியின் பெரியப்பா மகன் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் தகராறு. அதுத்தவிர, 4-திருடர்கள் பற்றிய கதை என்பதால் முதலில் இப்படத்திற்கு பகல் கொள்ளை எனப் பெயர் சூட்டினோம்... எங்கள் குடும்பத்தயாரிப்பு என்பதால் அந்த தலைப்பு பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் என்று யோசித்து தகராறு என டைட்டிலை மாற்றினோம்... அதுவும் உங்கள் குடும்பத் தகராறா? என சிலரால் கேள்வியாக்கப்பட, இவர்களுக்கெல்லாம் யோசித்தோமென்றால், படம் பண்ணமுடியாது கதைக்கு ஏற்ற தலைப்பு வைக்க முடியாது... என கருதி தகராறு டைட்டிலையே இறுதியாக்கி உறுதி செய்தோம்... என்றெல்லாம் அருள்நிதி, இப்பட ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்து... அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தகராறு
மதுரை பக்கத்து 4 பீரோ புல்லிங் கொள்ளையர்கள் பற்றிய கதை! ஆனாலும் அருள்நிதியின் காதலும், அதனால் எழும் மோதலும் தான் தகராறு மொத்தப்படமும்! சரவணன் - அருள்நிதி, செந்தில் - பவன்ஜி, பழனி - சுலில் குமார், ஆறுமுகம் - முருகதாஸ் ஆகிய நால்வரும் சின்ன வயது முதல் நண்பர்கள், அநாதைகள். சின்ன வயது முதல் சின்ன சின்ன திருட்டில் ஆரம்பித்து பீரோ புல்லிங் கொள்ளையர்களாக கொடி கட்டிப்பறக்கும் நால்வரும், பக்கெட் எனும் பாவா லட்சுமணனின் குடியிருப்பில் தங்கி, பெரிய பெரிய வீட்டு பீரோவில் எல்லாம் கை வைக்கின்றனர்.
ஒருநாள் கோயில் பரிவட்டத்திற்காக ஏங்கும் ஊர் பெரிய மனிதர் அருள்தாஸ் வீட்டு பீரோவில் கை வைக்கும் நால்வரும் வகையாக மாட்டிக் கொள்கின்றனர். அவர், நால்வருக்கும் ஒரு சிலை திருட்டு வேலையை கொடுக்கிறார். அது அவரது மதிப்பு மரியாதையை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனாலும் அருள்தாஸ்க்கும், அவர்களுக்குமிடையில் பண விவகாரத்தில் ஈகோ தகராறு. என்றைக்கானாலும் உங்களை ஒரு கை பார்க்காது விடமாட்டேன்... என எச்சரித்து அனுப்புகிறார் அருள்தாஸ். மற்றொருபக்கம், மதுரையின் பிரபல கந்துவட்டி தாதா ஜெய்பிரகாஷின் மகள் பூர்ணாவை விபத்தொன்றில் யதார்த்தமாக காபந்து செய்து காதலிக்க தொடங்குகிறார் அருள்நிதி. மொத்தபடத்திலும் பதார்த்தமாக பவனி வரும் பூர்ணாவால் நண்பர்களுக்குள் பஞ்சாயத்து. பூர்ணாவின் தாதா அப்பா ஜெ.பி.யால் இவர்களது உயிருக்கு ஆபத்து. இவை ஒருபக்கமென்றால் மற்றொருபக்கம் அந்த ஏரியாவுக்கு பொறுப்பேற்று வரும் புது இன்ஸ்பெக்டர் பாண்டிரவி வீட்டிலேயே ஆட்டையை போடும் இந்த நால்வரும் அடுத்தடுத்து பண்ணும் கலாட்டாக்களால் அவருடனும் முட்டல், மோதல் தகராறு... இந்நிலையில் நால்வரில் ஒருவரான சுலில்குமார், பவன்ஜி கண் எதிரிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட, அவரைக் கொன்றது யார்? என கண்டுபிடித்து அவர்களை பழிவாங்க களமிறங்குகிறது மூவரணி! அதில் அவர்களுக்கு வெற்றியா? அல்லது வெட்டி சாய்க்கப்பட்டனரா...? என்பது க்ளைமாக்ஸ்!
முந்தைய படங்களைக்காட்டிலும் அருள்நிதி, இதில் வித்தியாசமான முகபாவங்களைக்காட்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. அவரது பீரோ திருட்டு மதிநுட்பம், பூர்ணாவுடனான காதல் கண்ணாமூச்சி, எக்ஸ்கியூஸ்மி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே... என பேசியபடி கலர்கலர் டிரஸ்ஸால் அவர் அடிக்கும் லூட்டி, தனக்கு சின்ன வயதில் அந்த நால்வரணியில் இடம் கொடுத்த நண்பன் சுலில்குமார் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பு... அதனூடே கல்யாணத்திற்கு அவசரப்படும் பூர்ணாவுக்கு பண்ணும் அட்வைஸ் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்து நடித்திருக்கிறார் அருள்நிதி. அதிலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக அரிவாளும், கையுமாக வந்து எதிராளிகளை சிதறடிக்கும் சீன்களில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார்.
பூர்ணா டிப்பிக்கல் மதுரை பெண்ணாக வீரமும், தீரமுமாக வந்தாலும் காதலில் கசிந்து உருகிறார். க்ளைமாக்ஸில் அம்மணியின் வில்லி அவதாரம் முன்கூட்டியே பூகிக்க முடிவதால், கொஞ்சம் பொசுக் கென்றாகி விடுகிறது. ஆனாலும் மதுரையை காபந்து செய்ய அந்த மீனாட்சி, இந்த சரவணனை காக்க இந்த மீனாட்சி என்று சுத்தியலும், கையுமாக எதிராளியை சாய்த்து கேரக்ட்ராகவே மாறிட அவர் பேசும் வீரதீர வசனங்கள், அந்த பொசுக்கை நசுக்கி பொசுக்கி விடுகிறது.
அருள்நிதியின் நண்பர்களாக வரும் பவன்ஜி, சுலில் குமார், முருகதாஸில் தொடங்கி கந்துவட்டி ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், இன்ஸ பாண்டிரவி, செந்தி, டாஸ்மாக் பாரை போதையில் வீட்டுக்கே தள்ளிப்போகும் மயில்சாமி வரை எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
தில்ராஜின் ஒளிப்பதிவு - வெல்டன் ராஜ்! என சொல்ல வைக்கிறது. தரண்குமாரின் பாடல்கள் இசையும், பிரவீன் சத்யாவின் பின்னணி இசையும் தகராறு படத்தை ராயல் தகராறு ஆக்கிவிடுகின்றன!
பொதுவாக திருடர்கள் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள்... இதில், போலீஸையே பொளந்து கட்டுவதும், டீக்கடை, மதுக்கடை என 4 திருடர்களும் சகஜமாக அலைந்து திரிவதும், ஊர் வம்பு வளர்ப்பதும் நம்பும் படியாக இல்லாததும், அரிவாள், சுத்தியள்... என்று இரத்தவாடை படம் முழுக்க வீசுவதும், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் புதியவர் கணேஷ் விநாயக்கின் எழுத்து - இயக்கத்தில்
தகராறு - வெகுஜோரு!