Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மான் கராத்தே

மான் கராத்தே,Maan Karate
30 ஏப், 2014 - 12:42 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மான் கராத்தே

தினமலர் விமர்சனம்


கிட்டத்தட்ட 50 கோடிக்கு பிஸினஸ் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸின் கதை, அனிருத்தின் இசை, சிவகார்த்திக்கு ஹன்சிகா மோத்வானி ஜோடியான படம்,பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடன், ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான் மான் கராத்தே! இத்தனை பில்-டப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் இப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா? எனக் கேட்டால்., சண்டை போடாமல் சண்டையில் இருந்து தப்பிக்கும் உத்திதான் மான் கராத்தே எனும் பெயர் காரணம் என இப்படக்குழு சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. கதையே இல்லாமல் அதை படமாகவும், எடுக்காமல், படம் எடுத்தது மாதிரி பாவ்லா பண்ணியிருக்கிறார்கள்... மான்கராத்தே குழுவினர் என்பது தான் இப்படத்தின் பலம்(?) பலவீனம்(!) இரண்டும்!!


ஒரு ஷாப்பிங் மாலில் நாயகி ஹன்சிகா மோத்வானி, இரண்டு கையிலும் ஆசை ஆசையாய் கோன் ஐஸை வாங்கிக் கொண்டு, ஷூ லேஸ் கழண்றதால் அதை எதிர்படும் சிவகார்த்தியிடம் கொடுத்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டு லேஸை கட்டுகிறார். அதற்குள் சிவகார்த்தி ஒரு கோனை சற்றே நக்கி சுவைக்க, அதில் கடுப்பாகும் ஹன்சிகா, இரண்டு கோன்களையும் புதிதாக வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிக்கிறார். சிவகார்த்தி, இருபது ரூபாய் காசில்லாததால் வாங்கித்தர மறுக்கிறார். இதில் சிவகார்த்தி மீது செம கடுப்பாகி கிளம்பி போகிறார் ஹன்சிகா. இவர்களது அடுத்த சந்திப்பும் அதே மாதிரி ஒரு மாலில் உள்ள லிப்டில், யாரோ ஒரு தடியன் போட்டுச் சென்ற கார்பன்-டை-ஆக்சைடு வெடிகுண்டினை, சிவகார்த்தி தான் ரிலீஸ் செய்ததாக கருதி, அவர் மீது ஹன்சிகா கடுப்பாகும் காட்சியில் தொடர்கிறது. இந்த இரண்டு சந்திப்புகளுக்கு பின் சிவகார்த்திக்கு, ஹன்சிகா மீது காதலோ காதல் அப்படி ஒரு காதல்!


கையில் இருபது ரூபாய் கூட இல்லாமல் அடுத்தவர் ஐஸ்கிரீமை நக்கும் ரகமான ராயபுரம் பீட்டர் எனும் சிவகார்த்தி மீது, அவர் வழக்கமான ஹீரோக்கள் செய்வது மாதிரி செய்யும் நாயகியின் வண்டி பஞ்சர் ஆன போது செய்யும் ஹெல்ப் உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி விஷயங்களுக்காக ஹன்சிகாவுக்கும், சிவகார்த்தி மீது காதல் வருகிறது.

வேலைவெட்டி இல்லாத சிவகார்த்தி, ஹன்சிகாவுக்காக நிறைய மாறுகிறார். கூடவே பெரிய குத்துச் சண்டை வீரராகவும் உருமாறுகிறார். அது எப்படி? ஏன்? எதற்கு.? என்பது தான் மான் கராத்தேயின் காமெடியும், காதில் பூச்சுற்றலுமான மீதிக்கதை!


சென்னை, ராயபுரம் பீட்டராக சிவகார்த்தி, இன்னும் நிறைய பீட்டர் விட்டு, ஹன்சிகாவை கவுத்தி இருக்கலாம். அதை விடுத்து பாக்ஸர், அதுவும் மான் கராத்தே பாக்ஸர், அடி, உதை என ஆக்ஷ்னில் இறங்காமல் இறங்கி ரசிகர்களை கொல்லாமல் கொல்வது சற்றே உறுத்தல். பாக்ஸிங்கே தெரியாமல் பைனல் போட்டி வரை சிவகார்த்தி வந்துவிட்டு, பைனலில் கில்லர் பீட்டருடன் மோத பயப்பட்டு காதலிக்காக இந்த போட்டியில் விட்டுத்தர சொல்லி கெஞ்சுவதும், அவர், இவரது ஹன்சிகாவை விட்டுத்தரச் சொல்லி மிஞ்சுவதும் கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர்!


சிவகார்த்தியை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக கில்லர்-பீட்டர் வம்சியை கெட்டவனாக காட்டியிருப்பது கொடுமை! ஆக்ஷ்ன் காட்சிகளில் சிவகார்த்தி அப்படி இப்படி இருந்தாலும் பிரண்ட்ஸ் சென்டிமெண்ட், ஹன்சிகாவுடனான ரொமான்ஸ் உள்ளிட்ட விஷயங்களிலும், டான்ஸிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். அதேநேரம் 40 பவுண்சர்களை (என்னதான் புரடியூசர் செலவு என்றாலும்...) விழா வேத்திகளுக்கு அழைத்து வருவதை விடுத்து சிவகார்த்தி, நல்லதாய் 4-5 கதை கேட்பாளர்களை தன் கூட வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது!


ஹன்சிகா வழக்கம் போலவே செமக்யூட், அவருக்கு சிவகார்த்தி மீது காதல் வருவதற்கான காரணங்கள் தான் புரியாத புதிர். காமெடி சதீஷ் அண்ட் கோவினர் சத்யம் கம்ப்யூட்டரில் வேலைபார்த்து கம்பெனி திவாலானாதும், ஒரு சித்தரின் ஜோசியம், ஹோசியத்தை நம்பி சிவகார்த்தியை பாக்ஸர் ஆக்க முயற்சிப்பதும், பின் பேக் அடிப்பதும் நம்பமுடியாத காமெடி!


மான் கராத்தேயின் பெரிய பலம் அனிருத்தின் இசையும், அழகிய பாடல்களும்தான். அதேமாதிரி எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் பெரும்பலம். இவை இரண்டுக்காவும் மான் கராத்தேவை பார்க்கலாம், ரசிக்கலாம்!


ஏ.ஆர்.முருகதாஸின் கதை எனப் போட்டுவிட்டு எந்த கதையும், எள் அளவும் இல்லாமல் இருப்பது, கே.திருக்குமரனின் திரைக்கதை, இயக்கத்தில் த்ரிலிங்காக எதுவும் இல்லாமல் இருப்பது உள்ளிட் மைனஸ் பாயிண்ட்டுகளுடன், பத்து திருக்குறள் தெரியாத ஹீரோ, கரியமில வாய்வு காமெடி ரசனை என மான் கராத்தே பெரிதாய் மனதை கவரலை! ஆனாலும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை... என சொன்னதற்காக மான் கராத்தே - மனதை கவருதே!







----------------------------------------------------------------



குமுதம் சினிமா விமர்சனம்





பாக்ஸிங் பற்றிய படத்துக்கு கராத்தே என்று பெயர் வைத்ததில் ஆரம்பித்து, லாஜிக், நீதி எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சும்மா சிரித்துவிட்டுப் போக, "குத்து ஆட்டம் போட்டிருக்கிறார்கள்!


குத்துச் சண்டைக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாத சிவகார்த்திகேயன், அந்தச் சண்டையில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்குவார் என்று ஒரு சித்தர் சொல்லிவிட, அதைச் சம்பாதிக்கலாம் என்று ஒரு இளமை கோஷ்டி. இதற்கிடையில் காதலி ஹன்சிகாவும் சிவாவைக் குத்துச் சண்டை வீரன் என்று நினைக்க, போட்டி ஆரம்பமாக, அப்புறம் என்ன? முடிவைத்தான் சரியாச் சொல்லுவீங்களே பாஸ்! (இயக்கம் திருக்குமரன்)


சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெற்றிகளை மனதில் வைத்தே படம் பண்ணியிருக்கிறார்கள். முந்தைய படங்களை விட ஸ்டைலும் காஸ்டியூமும் கூடியிருக்கிறது. நடனத்தில் அபார முன்னேற்றம். சிரிக்க வைப்பது மட்டுமல்ல, தனக்கு நன்றாக அழவும் வரும் என்று நிரூபித்திருக்கிறார். லிஃப்ட்டில் நடக்கும் காமெடி, மூக்கைப் பொத்திக் கொள்ள வைத்தாலும் சின்னப்பசங்க எம்பி எம்பி சிரிக்கிறார்கள். அதே போல் திருக்குறள் போட்டி என்பது தெரியாமல் சிவா, தன்னுடைய மிமிக்ரி திறமையைக் காட்டுவதும் புன்னகை வரவைக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் ரொம்ப சீரியஸாகப் போய் "எதிர்நீச்சல் அடிக்கிறது!


வெண்ணெயையும் வெனிலா ஐஸ்கிரீமையும் சேர்த்துப் பிசைந்த மாதிரி இருக்கிறார் ஹன்சிகா. பாடல் காட்சிகளில் கர்சீப் மாதிரி டிரெஸ் அணிந்து கொண்டு, முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொள்கிறார்!


அந்த ஐந்து நண்பர்களும் அவர்களது டென்ஷனும் ஓகே. சீதிஷ் கூடுதலாய்க் கவர்கிறார்.


சண்டையின் நடுவராக சூரி பத்து நிமிடமே வந்து, ரத்தக்காயம் வாங்கி புன்னகைக்க வைக்கிறார்.


கதை ஏ.ஆர். முருகதாஸ் என்று போடுகிறார்கள். கஜினி, ஏழாம் அறிவு எடுத்தவரின் கதையா இது? கிள்ளிப் பார்த்தபோது ரொம்ப வலித்தது!


"மாஞ்சா பொண்ணு உட்பட அனிருத்தின் இரண்டு பாடல்கள் கும்மாங்குத்து. சுகுமாரின் ஒளிப்பதிவும் க்யூட்.


வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா செமை உக்ரம். ஹிஹி, அவரது ஜோடியாக வருபவர் யாருங்கோ? அவரிடம் சொல்லி சிவா தனக்குப் போட்டியில் விட்டுக்கொடுக்குமாறு சொல்ல, வம்சி, "அப்படின்னா உன் காதலியை எனக்கு ஒரு நாளைக்கு விட்டுக்கொடு என்று உருமுவது ஓவர்தான் என்றாலும் உச்சம்.


நிஜமாகக் குத்துச்சண்டை தெரிந்தவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கொலைக்காரர்கள் ஆகிவிடுவார்கள்!


மான் கராத்தே - மாஸ்ஸை யூஸ் பண்ணியிருக்கிறார்கள்.


ஆஹா : சிவகார்த்திகேயன்


ஹிஹி: லாஜிக்


குமுதம் ரேட்டில் - ஓகே.






--------------------------------------------------



கல்கி - சினி விமர்சனம்



நான்கு மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரிந்துவிட்டால் எப்படியெல்லாம் மனிதர்கள், செயல்படுவார்கள் என்ற வித்தியாசமான முடிச்சுதான் கதை. காட்டில் திரியும் நான்கு ஐ.டி.துறை நண்பர்களுக்கு ஒரு சித்தர் மூலம் நான்கு மாதங்கள் கழித்து வரவிருக்கும் "தினத்தந்தி பேப்பர் கிடக்கிறது. அதில்பீட்டர் என்ற குத்துச்சண்டை வீரனை இந்த நான்கு நண்பர்களும் ஸ்பான்சர் செய்வதால், இரண்டு கோடி பரிசுப் பணம் பெறுகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. விறுவிறுப்பான ஆரம்பம். அதன்பிறகு பீட்டரைக் கண்டுபிடித்து, குத்துச் சண்டையே தெரியாத பீட்டருக்கு அதில் ஆர்வம் ஏற்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே மீதிக் கதை.


சிவகார்த்திகேயன் பீட்டர். கேரக்கருக்கு நன்றாக செட்டாகிறார். அவரது ஒவ்வொரு லந்து வரியும் சிரிப்புப் பந்து. பல்வேறு குரல்களில் பேசிக் கலக்கும் சீனுக்கு, தியேட்டரில் விசில் பறக்கிறது. குத்துச் சண்டை போடத் தெரியாமல், மேடையில் ஓடி ஓடி குத்துவதே மான் கராத்தேவாம்.


ஹன்சிகா ஜோடி. ஹன்சிகா பெரிய விளையாட்டு விசிறி என்பதால், சிவா குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்கிறார். காதல் சீன்களெல்லாம் ஒடடவே இல்லை. சிரிக்கவும் அழவும் தெரியவில்லை. ஹன்சிகா அழுதால் எரிச்சல் வருகிறது; சிவா அழுதாலோ சிரிப்புதான் வருகிறது!


இடைவேளைக்குப் பிறக கதை சீரியஸ்ஸாகி விடுகிறது. விளையாட்டுத்தனமாக குத்துச்சண்டைப் போட்டிகளில் இறங்கிவிட்டு, உண்மையிலேயே ஒரு வீரனோடு மோதவேண்டிய நிலைமை வரும்போது, ஏற்படும் பதற்றம் அப்பட்டமாகத் தெரிகிறது. காதலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, போட்டியாளன் கால்களில் விழுந்து கெஞ்சி கொஞ்சம் நடிக்க மெனக்கெட்டு இருக்கிறார் சிவா.


டி.வி.யில் சுவாரசியமாகத் தெரியும் பாடல்கள், படத்தில் துண்டாகத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. பாடல்களிலும் நகைச்சுவை வேண்டும் என்று செய்யும் அத்தனை முயற்சிகளிலும் ஒன்று ஆபாசம் மிளிர்கிறது அல்லது அசட்டுத்தனம் சிரிக்கிறது. "புகைபோக்கிகளுக்கு வசதியான பிரேக்குகள் இவை. கேமரா கண்களுக்கு பசுமை.

படத்தை மொத்தமும் தூக்கிச் சுமப்பது சிவ கார்த்திகேயனின் காமெடிதான். அதனால், எந்தவித லாஜிக்குகளும் எடுபடுவதில்லை. இப்படித்தான் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுமா, பயிற்சியில்லாமலேயே ஒருவனால் முதல் ரவுண்டில் கூட தாக்குப் பிடிக்க முடியுமா என்றெல்லாம் நீங்கள் தியேட்டரைவிட்டு வெளியே வந்துதான் யோசிப்பீர்கள். அந்த வகையில் நெருக்கமாகத் திரைக்கதை அமைத்து, குதூகலத்துக்குக் கேரண்டி தருகிறார் இயக்குநர் கே. திருக்குமரன்.




மான் கராத்தே - சிரிப்பு, சிறப்பு.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in