Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

நய்யாண்டி

நய்யாண்டி,Naiyaandi
18 அக், 2013 - 15:47 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நய்யாண்டி

 

தினமலர் விமர்சனம்


‘களவாணி’, ‘வாகைசூட வா’ திரைப்படங்களின் வாயிலாக அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிய இயக்குநர் சற்குணத்தின் மூன்றாவது படைப்பு தான் ‘நய்யாண்டி’, எனும் எதிர்பார்ப்பை விட, இந்தப்படத்தில் ஒரு டூயட் பாடலுக்கான லீட் காட்சியில், எனது தொப்புளுக்கு பதில் வேறு ஒரு டூப்ளிக்கேட் தொப்புளை இயக்குநர் சற்குணம் காண்பித்து விட்டார்... என கமிஷ்னர் ஆபிஸ் வரை நாயகி நஸ்ரியா நஸீம் போர்கொடி தூக்கி நாடகம் நடத்தியதும், அதன்பின் அப்படி ஒரு தொப்புள் காட்சியே படத்தில் இல்லை... என அம்மணி படத்தை பார்க்காமலே பார்த்ததாக சொல்லி புகாரை வாபஸ் வாங்கியதும் ‘நய்யாண்டி’ படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாய் கூட்டிவிட்டது.

இனி ‘நய்யாண்டி’ கதையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்... கதைப்படி, கும்பகோணம் அருகே குத்துவிளக்கும், காண்டாமணி உள்ளிட்ட பித்தளை பொருட்களை பெரியளவில்‌ செய்து விற்பனை செய்யும் பிரமிட் நடராஜன் - மீரா கிருஷ்ணன் தம்பதியின் மூன்றாவது வாரிசு சின்னவண்டு எனும் தனுஷ். நாற்பது சொச்சம், 35 மிச்சம் வயதுடைய இரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகாத நிலையில், சின்னவண்டு-தனுஷ், பல்டாக்டர்-வனரோஜா எனும் நஸ்ரியா நஸீமை காதலித்து இக்கட்டான ஒரு சூழலில் அவசரகதியில் தாலியும் கட்டுகிறார். இத்தனையும் நடப்பது கும்பகோணம் ஏரியாவில் அல்ல... சின்னவண்டு தனுஷின் சின்ன வயசு, சைஸ்... மாமா பரோட்டா சூரி ஊரில்!

அந்த ஊரில் தான் சின்ன வண்டு, சின்னவயசு முதல் வளர்கிறார் வாழ்கிறார். அந்த ஊருக்கு பாட்டி வீட்டிற்கு வந்த நாயகி வனரோஜா நஸ்ரியா மீது சின்ன வண்டு தனுஷூக்கு காதல்! ஒரு கட்டத்தில் சின்ன வண்டின் நற்குணங்களைக் கண்டு தனுஷ் மீது நஸ்ரியாவுக்கும் காதல்! அந்த காதல் பூத்து காய்த்து கசிந்துருக ஆரம்பிக்கும் வேளையில் தன் பிறந்தநாளுக்காக தனது சொந்த ஊருக்கு போகும் நஸ்ரியாவுக்கு தடபுடலாக கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த தருணத்தில் அங்கு வரும் தனுஷ், அடாவடி மாப்பிள்ளையின் அடியாட்களை அடித்து போட்டுவிட்டு நஸ்ரியாவுக்கு அவசரத் தாலி கட்டுகிறார். அப்புறம்? அப்புறமென்ன?

நஸ்ரியாவை அழைத்து கொண்டு அந்த ஊரை விட்டு ஓடி வரும் தனுஷ், ஒரு இடத்தில் தன் மாமா சூரியை வரவழைத்து அவர் கையில் நஸ்ரியாவை ஒப்படைத்து தன் கும்பகோணம் குத்துவிளக்கு பேக்டரியில் அநாதை என சொல்லி அடைக்கலம் ஏற்படுத்த சொல்லிவிட்டு, சில நாட்கள் கழித்து அங்கு வருகிறார். அங்கு திருமணம் ஆகாமல் தவிக்கும் தனுஷின் அண்ணன்கள் இருவரும் நஸ்ரியாவுக்காக நான்- நீ என போட்டி போட்டு அடித்து கொள்கின்றனர். மற்றொரு பக்கம் நஸ்ரியாவுக்கு நிட்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வில்லனின் ஆட்கள் நஸ்ரியாவைத்தேடி கும்பகோணம் வருகின்றனர். தனுஷ், அண்ணன்களிடமிருந்தும், வில்லனிடமிருந்தும் நஸ்ரியாவை காபந்து செய்து, தன் அவசரத்தாலி மேட்டரை வீட்டிற்கு தெரியப்படுத்தினாரா? அல்லது அண்ணன்களாலும், வில்லனாலும் அல்லல்களுக்கு ஆட்பட்டாரா? என்பது ‘நய்யாண்டி’ படத்தின் காமெடி கலந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

சின்னவண்டு - தனுஷ் வழக்கம் போலவே பெரிய அளவில் ரொம்பவும் அடித்து கிணற்றை தாண்டுவது, மரத்திற்கு மரம் தாவுவது என தன் பாத்திரமறிந்து ‘பளிச்’ சென்று நடித்திருக்கிறார்.

பல் டாக்டர் வனரோஜாவாக வரும் நஸ்ரியா நஸீம் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பல் டாக்டராக வந்து, அப்பா அனுப்பி வைத்த செட்-அப் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அப்பா நரேனிடம் செல்ல கோபம் காண்பிப்பதோடு சரி... அதன்பிறகு இழுத்து போர்த்திக் கொண்டும், கவர்ச்சி காண்பித்தபடி தனுஷையும், நம்மை இன்பவதை செய்கிறார் பேஷ், பேஷ்!

தனுஷின் மாமா சூரி, அண்ணன்கள் ஸ்ரீமன், சத்யன், அம்மா மீரா கிருஷ்ணன், அப்பா பிரமிட் நடராஜன், வில்லன் வம்சி கிருஷ்ணா, இமான் அண்ணாச்சி, சதீஷ், அஸ்வின், நஸ்ரியாவின் அப்பா நரேன், பாட்டி சச்சு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறது! அதிலும் நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் வயிறை எக்கிக்கொண்டு ஸ்ரீமன்னும், வாலிப வயோதிகராக சத்யனும் அடிக்கும் லூட்டிகள் தான் செம காமெடி!

எம்.ஜிப்ரானின் இசை ஒரு புது தினுசு! வேல்ராஜின் ஒளிப்பதிவு அள்ளுது மனசு! ஏ.சற்குணத்தின் எழுத்து-இயக்கத்தில் அவரது முந்தைய படங்கள் அளவுக்கு ‘நய்யாண்டி’ இல்லாவிட்டாலும், ‘நய்யாண்டி’ பண்ணும் அளவிற்கு இல்லை என்பது ஆறுதல்!

ஆகமொத்தத்தில் ‘நய்யாண்டி’ - தனுஷ் ரசிகர்களுக்கு நல் மேளம் தான் - தாளம் தான்! இயக்குநர் சற்குணத்தின் நற்பட விரும்பிகளுக்கு...?!



-----------------------------------------------------------



 நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



ஒரு ஊர்ல ஒரு குடும்பம் , அந்த குடும்பத்துல 40, 38, 25 வயசுல 3 பசங்க . 3 பேருக்கும் மேரேஜே ஆகலை .3 வது பையன் தான் நம்ம ஹீரோ . அவர் ஊர்த்திருவிழாவுல ஒரு பொண்ணைப்பார்த்து தமிழ் சினிமா வழக்கப்படி பார்த்ததும் காதல் ல விழுந்துடறாரு. ஆரம்பத்துல பிகு பண்ணினாலும் பின் ஓக்கே சொல்லிடுது, அண்ணன்க 2 பேருக்கும் மேரேஜ் ஆகாம எப்படி தம்பிக்கு மேரேஜ் ஆகும்? அதனால தாலியை கட்டி தன் வீட்டுக்கே கூட்டிட்டுப்போய் கணக்குபிள்ளையா சேர்த்து விட்டுடறாரு ஹீரோ.
 
அண்ணன்கள் இருவரும்  தம்பி மனைவின்னு தெரியாம காதல், ஜொள்ளுன்னு இருக்கும்போது, அவங்க கிட்டே மாட்டியும், மாட்டாமயும் ஹீரோயின் எப்படி அவஸ்தைப்படறார்? என்பதை காமெடி(ன்னு நினைச்சு)ப்படமாக்கி இருக்காங்க . உஷ் அப்பா முடியல .

மேலப்பரம்பில் யான் வீடு என்ற ஜெயராம் - ஷோபனா நடிச்ச மலையாளப்படத்தை உல்டா பண்ணி ஆல்ரெடி ஆர் பாண்டிய ராஜன் சத்தமே இல்லாம தாய்க்குலமே தாய்க்குலமே என ஒரு டப்பாப்படம் கொடுத்தாரு , பின் கிட்டத்தட்ட இதே சாயலில் தென் காசிப்பட்டணம் வந்தது . இப்போ இது . டைட்டில் ல யே அண்ணன் சற்குணம் சரண்டர் ஆகிடறார். இது ஒரு ரீ மேக் ஸ்டோரின்னு .. இருந்தாலும் களவாணி, வாகை சூடவா போன்ற பிரமாதமான படம் கொடுத்தவர்ட்ட இப்படி ஒரு லோ கிளாஸ் படத்தை எதிர்பார்க்கலை . யூ டூ சார்

தனுஷ்தான் ஹீரோ . கமலுக்கு இணையான நடிகர் என்று இணையத்திலே பாராட்டுப்பெறும் ஹீரோ . தன் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டும் பட்டாசுக்கிளப்பும் இவர் ஆடுகளம் தேசிய விருது வாங்கிய பின் செலக்டிவ்வாக படங்களை ஒத்துக்கொள்பவர், ஏனோ இம்முறை சறுக்கி விட்டார் . இவர் நடிப்புக்கு ஸ்கோப் எங்குமே இல்லை, படம் நெடுக நாயகியைச்சுற்றியே கதை நகர்கிறது.

நஸ்ரியா தான் நாயகி. துறு துறு நடிப்பு, அழகிய முகம் என மனதைக்கொள்ளை கொள்ளும் பர்சனாலிட்டி . இவரிடம் ஒரு வியக்கத்தக்க குணம் பானுமதி, நதியா, ரேவதி, சுஹாசினி வரிசையில் தன் உடல் அழகு வெளிப்படுவதை விரும்பாத அபூர்வ நடிகை . பெரும்பாலான காட்சிகளில் முழுக்க மூடிய சுடிதார் , சேலை கட்டிய காட்சிகள் 6 லும் இழுத்துப்போர்த்திய பாங்கு அபாரம் . ஆனால் நெருக்கமாக நடிக்கிறார், என்ன கொள்கையோ?
 
சிங்கம்புலி, புரோட்டா சூரி, ஸ்ரீ மன், சத்யன் என காமெடிப்பட்டாளங்கள் உண்டு .மனதில் பெரிதாக ஒட்டவில்லை.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

*  அய்யய்யோ போச்சு என நஸ்ரியாவை அலற விட்டு பப்ளிசிட்டி செய்தது . இது 10 பைசா செலவில்லாமல் கிட்டத்தட்ட கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன விளம்பரம் கிடைக்குமோ அதைப்பெற்றது , வெரி குட் ஐடியா

*  இது குடும்பப்படம், காமெடிப்படம் என்றெல்லாம் தனுஷ் , நஸ்ரியாவை நம்ப வைத்து ஒரு லோ கிளாஸ் மலையாள கில்மாப்படத்தில் நடிக்க வைத்தது.

*  சர்ச்சைக்குள்ளான “இனிக்க இனிக்க “ ரொமாண்டிக் பாட்டு செம கிக் . இதில் துளி கூட சீன் இல்லை, ஆனால் செம கிக் உண்டு . நெருக்கமான காட்சிகள், உரசல்கள் உண்டு.

*  ஸ்ரீ மன் - சத்யன் இருவரின் காம்பினேஷன் காமெடி காட்சிகள்

*  அந்த ராப் சாங்க் மாதிரி வரும் “குமரிப்பொண்ணுங்க பார்த்தா” செம டான்ஸ். ஆர்ட் டைரக்‌ஷனும், நடன இயக்குநரும் செம உழைப்பு , சபாஷ்


மனம் கவர்ந்த வசனங்கள்

*  பொண்ணுங்களுக்கு எப்பவும் " வீரம்" தான் பிடிக்கும்

*  நாங்க எல்லாம் கரண்ட் கம்பிலயே கபடி விளையாடுவோம்

*  நாம போய் பொண்ணுங்க முன்னால நிக்கறதை விட நம்மைப்பத்தின நியூஸ் தான் முதல்ல போய் நிக்கனும்

*  ஏன் ஓல்டு லேடி, எங்க தாத்தா வீரியம் மேட்டர் உனக்கு எப்படித்தெரியும் ? அப்பவே வில்லங்கமா விளையாடி இருக்கே?

*  புறா உனக்கு, பொண்ணு எனக்கு

*  நீ என்ன பிளான் பண்னாலும் என்னை மாட்டி விடாம பிளான் பண்ண மாட்டே போல

*  மணி இருக்கு , அடிக்குமா?

*  என்ன பண்றே? கணக்கு பண்றேன்
அதை என் கிட்டே கேளு
உனக்குத்தான் கணக்கு வராதே ?

*  பொண்ணுக்கு மை வெச்சா கரெக்ட் ஆகிடும்னு மலையாள ஜோசியர் சொன்னார், ஆனா கர்ப்பம் ஆகிடும்னு சொல்லலையே?

சி பி கமெண்ட் -நய்யாண்டி - சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கான லோ கிளாஸ் (சீன் இல்லாத)கில்மா காமெடிப்படம்



----------------------------------------------




குமுதம் விமர்சனம்



களவாணி, வாகை சூடவா - சற்குணத்தை நினைத்துக் கொண்டோ, ஆடுகளம், பொல்லாதவன் - தனுஷை நினைத்துக் கொண்டோ இந்தப் படத்திற்குச் சென்றால் உங்களை நீங்களே நையாண்டி செய்துகொள்ள வேண்டியதுதான்!

மலையாளத்தில் 20 வருஷம் முன்பு வந்த ‘மேலப்பரம்பில் ஆண் வீடு’ படத்தைத் தழுவி பாண்டியராஜன் உட்பட சிலர் ஏற்கெனவே மேய்ந்துவிட்டது தெரிந்தோ தெரியாமலோ மீண்டும் தூசி தட்டியிருக்கிறார்கள்.

வீட்டில் ஸ்ரீமன், சத்யன் என்று நாற்பது வயது அண்ணன்கள் எல்லாம் கல்யாணம் ஆகாமல் மொட்டைப் பையன்களாய் சுற்றிக் கொண்டிருக்க கடைக்குட்டிப் பையன் தனுஷ், நஸ்ரியாவை காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு, வீட்டுக்கு ஓர் அனாதைபோல் ரகசியமாக அழைத்து வருகிறார். அண்ணன்கள் எல்லாம் நஸ்ரியாவைக் கல்யாணம் செய்துகொள்ள முயற்சிக்க, அப்புறம் என்ன? 2 சண்டை, 4 பாட்டோடு படத்தை ஏறக்கட்டுகிறார்கள்.

தனுஷுக்கு என்ன ஆச்சு? கிணற்றைத் தாண்டுகிறார். மரத்துக்கு மரம் தாவுகிறார். ஏதோ பள்ளிக்கூடப் பையன் பாடம் ஒப்பிப்பதைப்ப‌ோல சொன்னதைச் செய்திருக்கிறார். தனுஷின் காதல் என்றால் ஒரு ஜில் இருக்குமே? அதெல்லாம் இதில் மிஸ்ஸிங்.

டைட்டிலில் நஸ்ரியா பேர் போடும்போதே கைதட்டுகிறார்கள். எல்லாம் அந்த புகார் பரபரப்புதான் பாஸ்! நஸ்ரியாவின் தொப்... ஸாரி கண்கள் எம்மாம் பெரிசு. அன்பு,காதல், எதிர்ப்பு, கோபம் எல்லாவற்றையும் அந்தக் கண்களே காட்டிவிடுகின்றன. படம் பூராவும் ஆடை விலகாமல் போர்த்திப் போர்த்தி நடித்தாலும் பாடல் காட்சிகளில் செமை மூவ்மெண்ட்ஸ்.

ஸ்ரீமன்னுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனை. நஸ்ரியாவின் பெயரைக் கேட்டால்கூட தன்‌ தொப்பையை உள்‌ளிழுத்துக்கொண்டு யூத் போல் காட்ட அவர் முயற்சி செய்ய, ஜட்டி கூட போடாமல் துண்டை கட்டிக்கொண்டு ஸ்ரீமன் நிற்கும்போது நஸ்ரியா பெயரை தனுஷ் சொல்ல, வயிற்றை இழுத்து துண்டு அவிழும் அந்த பப்பிஷேம் காட்சியில் தியேட்டர் கலகலக்கிறது. அதேபோல் நஸ்ரியா கழுத்தில் தாலியைப் பார்த்துவிட்டு அதிரும் அவர், அது ‘பிரமை’ என்று சந்தோஷப்படுவதும் நல்ல காட்சி.

சத்யன் ஓகே.

டெடி பியர் சாங் செமை கெட்டி!

சூரி, இமான் அண்ணாச்சி எல்லாம் சிரிப்பு மூட்ட கடும் முயற்சி செய்கிறார்கள்.

பச்சைக்குழந்தை மாதிரி இருந்த தனுஷ்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று கடைசியில் தெரியும்போது பழைய பாசப்பாடல்ஒலிக்க, ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திரையில் ஓடுவது கலகலப்பின் உச்சம்!

நய்யாண்டி - ‘நய்நய்’ யாண்டி!

குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நய்யாண்டி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in