கணவர் ஸ்ரீகாந்த் கதாநாயகராக நடிக்க, தங்களது "கோல்டன் பிரைடே பிலிம்ஸ்" பேனரில் அவரது மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்து வழங்க, புதியவர் கணேஷா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் ஜோடியாக சுனைனா நடித்து வெளிவந்திருக்கும் படமே நம்பியார்.
ராமு எனும் ராமசந்திரனான ஸ்ரீகாந்த், அப்பாவின் ஆசைக்காக ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பும் இளைஞர். என்றும் நாயகரான எம்.ஜி.ஆர் மாதிரி நல்ல மனிதராக தெரியும் அவர் உள்ளும், வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்ட மனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கிறது. அது போடும் சுயநல கெட்ட ஆட்டங்களால், அந்த எம்ஜி.ராமச்சந்திர மூர்த்தி மாதிரியான ராமு அலைஸ் ராமசந்திரனான ஸ்ரீ, எப்படி எப்படி எல்லாம் தலை குனிகிறார்? சமயத்தில் சம்மந்தம், சம்மந்தமில்லாத விஷயங்களில் எல்லாம் தலையை கொடுத்து விட்டு, தலை தப்பினால்.. தம்பிரான் புண்ணியம் ... என தலை தெறிக்க எப்படி, எப்படி எல்லாம் ஒடுகிறார்..? என்பதை, ஸ்ரீயின் மனசாட்சிக்கும் சந்தானம் எனும் உருவம் கொடுத்து வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்று, வித்தியாசத்தில் வெற்றியையும், விறுவிறுப்பில் தோல்வியையும் கண்டிருக்கும் படம் தான் நம்பியார்.
எம்ஜிஆர் மாதிரி நல்ல மனிதராக ஸ்ரீகாந்த்தும், அவரது கெட்ட மனசாட்சி வில்லன் நம்பியாராக சந்தானமும் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறேன்... பேர்வழி... என பேசிக் கொண்டே இருப்பது தான் இதில், பெரும் குறை! மற்றபடி ராமு எனும் ராமசந்திரனாக ஸ்ரீ, தண்ணியை போட்டால் நம்பியாராக பண்ணும் கலாட்டாக்கள், தகராறுகள் செம்ம புதுசான ஐடியா. அதை படமாக்கியிருக்கும் விதம் தான் ரசிகனை, தியேட்டரை விட்டு விடு ஜூட்... எனும் அளவில் இருக்கிறது. பாவம்.
ஸ்ரீ... நாயகி சுனைனாவிடம் தன் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் சொல்லி அவரை விரட்டி, துரத்தி காதலிக்கும் காட்சிகள் ஹாசம். வாசம். அதே நேரம், குடித்துவிட்டு ஒவர் மப்பில், காதலியை அவர் வீடு புகுந்து கற்பழிக்க துரத்துவது, போதையில் வண்டி ஓட்டி வரும் டூவீலர் வாசிகளை பிடித்து பணம் பறிக்கும் போலீசிடம், சரக்கு அடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எனக் கேட்டு, லாங் லக்சர் கொடுத்துவிட்டு, அருகில் டி.ஆர்.கட் அவுட்டை பார்த்ததும் அவர் பாணியில்... வாடா யேன் மச்சி.... எனப் பேசி, யூனிபார்மில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கும் வலுக்கட்டாயமாய் ஊத்தி விட்டு அவர்களை அடித்து துவைப்பது, அதன்பின் உச்சகட்டமாக தன் வீட்டிற்கு சென்று அப்பா, அண்ணன், அண்ணி எல்லோரையும் வரைமுறை இல்லாது பேசி, நடுரோட்டில் இழுத்து போட்டு அடிப்பது... எல்லாம், என்ன தான் புல் மப்பு... என்றாலும் ஓவரோ ஓவர். ஏன் இப்படி ஸ்ரீ..?
ஸ்ரீயின் ரொம்பவும் கெட்ட மனசாட்சியாக, ஸ்ரீக்கு விதவிதமான கெட்ட ஐடியாக்கள் தந்து அவரை தொடர்ந்துசிக்கலில் மாட்டிவிடும் நம்பியாராக சந்தானம், வழக்கம் போல வாயை காது வரை திறந்து பேசிக் கொண்டே இருக்கிறார். ஏட்டு சுரைக்காய் குழம்புக்கு உதவாது... பழமொழியை, "ஏட்டுக் கோழி குருமாவுக்கு உதவாது...." என்று புதுசாக மாற்றி அவர் செய்யும் காமெடி காட்சிகளால் ரசிகனை சிரிக்கவும் சற்றே சிந்திக்கவும் வைக்க முயலுகிறார்... சந்தானம் என்பது ஆறுதல் !
சரோசா எனும் சரோஜா தேவியாக சுனைனா பழைய பெயருடன் வந்தாலும் மார்டன் லுக்கில் ரசிகனை மயக்குகிறார். பேங்க் ஸ்டாப்பான, சுனைனா, ஒரு காட்சியில், காதலன் மீது இருக்கும் கண் மண் தெரியாத கோபத்தில், தன் வங்கிக்கு பணம் போட யூனிபார்மில், வந்த பக்கத்து பில்டிங் செக்யூரிட்டியைப் பார்த்து செக்யூரிட்டிக்கு இங்கென்ன வேலை? வாசலில் தானே நிற்கணும்..? என கேட்டு மொக்கை வாங்குவது கூட ரசனையாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ரசனை ஸ்ரீ - சந்தானம் காட்சிகளில் பெரிதாக இல்லாதது வருத்தம்.
சுனைனாவின் நைனாவாக டெல்லி கணேஷ், போலீஸ் ஏட்டுஜான் விஜய், கான்ஸ்டபிள் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி..., ஸ்ரீயின் அண்ணியாக தேவதர்ஷினி, அண்ணனாக சுப்புபஞ்சு, அப்பாவாக ஜெயப்பிரகாஷ், அம்மாவாக வனிதா, இவர்கள் எல்லோருக்கும் மேல்., ஸ்ரீயின் நட்புக்காக கொஞ்ச நேரமே வரும் ஆர்யா, அவரது ஜோடியாக வரும் புதுமுகம் உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு இன்னும் பக்கா தொகுப்பாக இருந்திருக்கலாம்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு பளிச் என துடைத்து வைத்த வெள்ளிக் குத்துவிளக்கு மாதிரியான பக்கா பள பள பதிவு !
"ஆற அமர..." , "தூங்கும் பெண்ணே தூங்காதே...." உள்ளிட்ட பாடல்கள் விஜய் ஆண்டனியின் இசையில் ரசனை. பின்னணி இசையும்ரகளை.. என்றாலும் ஸ்ரீ, சந்தானத்தின் தொணத்தொண பேச்சு சத்தத்திற்கு முன் பெரிதாக எடுபடாதது பலவீனம்.
கணேஷாவின் எழுத்து - இயக்கத்தில், ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத விதமாக கதை சொல்ல முயன்றிருக்கும் அவரது பாணி., ரசிகனின் கண்களை விரிய செய்கிறது. ஆனால், அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சற்றே கடுப்பேற்றுகிறதென்பது பெருங்குறை. மற்றபடி, நம்பியார் எனும் டைட்டிலும், படம் முழுக்க வரும் அந்த எம்ஜிஆர்., சிலையும், ஆறுதல்!
மொத்தத்தில், "நம்பியார் - ரசிகனின் நம்பிக்கையை தகர்த்தியிருக்கிறார்!"