Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மூடர்கூடம்

மூடர்கூடம்,Moodarkoodam
 • மூடர்கூடம்
 • புதுமுகம்
 • ஓவியா
 • இயக்குனர்: நவீன்
23 செப், 2013 - 14:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மூடர்கூடம்

    

தினமலர் விமர்சனம்


‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கும் திரைப்படம்தான் மூடர்கூடம். சிஷ்யருக்காக இந்தப்படத்தை தனது ‘பசங்க’ புரடக்ஷன்ஸ் மூலம் வாங்கி வெளியிட்டும் இருக்கிறார் பாண்டிராஜ் என்பது சிறப்பு!

‘மூடர்கூடம்’ படத்தில் கதை என்று பார்த்தால் பெரிதாக எதுவும் கிடையாது... ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்!’’ என்பது மாதிரியான ‘ஜென்’ குட்டி கதைகள் போன்றதொரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!. ஆனால், இந்த கதையில் ஏகப்பட்ட முன்கதைகள், முழுக்கதைகளை(?) கலந்துகட்டி காமெடியாக கலர்புல்லாக ‘மூடர்கூடம்’  படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி  இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்! ஆமாம் பின்னே, இதுமாதிரி இதுவரை தமிழ் ‌சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்!

கரடு முரடான முகபாவங்கள், உருவ அமைப்புகள், சில்லறை சேட்டைகளைக் கொண்ட வெள்ளை ராஜாஜ், நவீன் என்னும் நவீன், குபேரன் மற்றும் சென்றாயன் நால்வரும் வெவ்வேறு சில்லறை நோய்களுக்காக போலீஸ் ‘லாக்-அப்’பிற்கு போக, அங்கு நண்பர்களாகின்றனர். நால்வரும் சேர்ந்து, வெளியூருக்கு போக இருக்கும் வெள்‌ளையின் பணக்கார மாமா ஜெ.பி.யின் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளே போகின்றனர். தன் பைனான்ஸ் கம்பெனி திவாலாகிவிட்டதாக பொய் கணக்கு காட்டி ‌ஊரைவிட்டு குடும்பத்தோடு ‘எஸ்’ ஆக இருக்கும் ஜெயப்பிரகாஷ், சின்ன டைமிங் மிஸ்டேக்கால், இவர்களிடம் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பப்பா.... அதைத்தான் எத்தனை நகைச்சுவையாக சீன் பை சீன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் மூட் தெரிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக ‘நச்’சென்று ‘டச்’ செய்கிறார். படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு ‌சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதை(!)களும்தான் செம ஜோர்!

நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரமாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்! நவீனின் எழுத்து, இயக்கத்தில் முன்கதை, பின்கதை, முழுக்கதை, கிளைக்கதை என்று ஏகப்பட்ட கதைகள் இடைச்செருகலாக படத்தில் இடம்பெறுவது என்னதான் சுவாரஸ்யம் என்றாலும் படத்தின் நீளத்தை வெகுவாக கூட்டிவிடுவதை மட்டும் இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்து மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். மற்றபடி மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மூடத்தனமாக, முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’------------------------------------------

 


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
படிப்பறிவே இல்லாத 3 இளைஞர்கள், படிச்ச ஒரு ஆள் 4 பேரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட்டுக்களவாணி ஆகறாங்க. அவங்க கூட இருக்கும் ஒருத்தனோட சொந்த மாமா வீட்லயே கன்னம் வைக்க பிளான் . ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வீட்ல இருக்கறவங்களை எல்லாம் ஹால்ல உட்கார வெச்சு பணம் எங்கேன்னு தேடறாங்க. கிடைக்கலை. எல்லா சொத்து பத்துக்களையும் வேய்க்கானமா பதுக்கிட்டு வழக்கை சந்திக்க தயார். ரெய்டுக்கு ரெடின்னு அறிக்கை விடும் அரசியல்வாதி போல் ஆட்டம் காட்டும் மாமா மற்றும் குரூப் , அவங்களைத்தேடி வரும் வெளி ஆட்கள் இதை வெச்சு ரெண்டரை மணி நேரம் சிச்சுவேஷன் காமெடி திரைக்கதை அமைச்சிருக்காங்க. பாராட்டத்தக்க முயற்சி.

டாக்டர் ராஜசேகர் தம்பி செல்வா நடிச்சு சில வருடங்களுக்கு முன் வந்த கோல்மால் படக்கதையை, பட்டி டிங்கரிங்க் பண்ணி கொஞ்சம் ஆங்காங்கே சென்ட்டிமென்ட் டச் வெச்சு காமெடி மெலோ டிராமா ஆக்கி இருக்காங்க. அந்தப்படமே ஒரு ஹிந்திப்படத்தோட ரீமேக் தான்.. கமல் -கிரேசி மோகன் காம்பினேஷன்ல வந்திருந்தா செம கலக்கு கலக்கி இருக்கலாம்.

நவீன் தான் ஹீரோ,  இயக்கம், தயாரிப்பு எல்லாம். படிச்ச கம்ப்யூட்டர் இளைஞன் மாதிரி கன கச்சிதமான தோற்றம் . முக பாவனைகள் கை கொடுக்காட்டியும் திரைக்கதை காப்பாத்திடுது.

நாடோடிகள் படத்துல காதோட அடி வாங்கி அனுதாபத்தை சம்பாதிச்ச பரணிதான் 4 பேரில் கவனம் கவர்பவர் . மனுஷன் கலக்கிட்டார் . நல்ல வாய்ப்பு கிடைச்சா இவர் முன்னணி காமெடி கம் குணச்சித்திர நடிகர் ஆவது உறுதி.

நாயகி ஓவியா. ஷாக் சர்ப்பரைஸ் . அதிக டிரஸ் சேஞ்ச் பண்ணவெல்லாம் வாய்ப்பில்லை . திரைக்கதைப்படி ஒரே ஹாலில் கதை பயணிப்பதால் படம் பூரா ஒரே மாடர்ன் டிரசில் வர வேண்டிய சூழல். தன் பங்குக்கு சிரசாசனம் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்.

ஜெயப்பிரகாஷ் உட்பட படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் கதையின் சிச்சுவேஷன் காமெடித்தன்மையை உணர்ந்து கலக்கி இருக்கிறார்கள் . வெல்டன்.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 

1. படத்தோட ஓப்பனிங்லயே கதைக்கு நேரடியா வந்தது . படத்தில் வரும் 4 இளைஞர்களுக்கும் டக் டக்னு ஒரு பிளாஷ் பேக் கொடுத்து அதை டக்னு சின்ன போர்ஷன்ல முடிச்சது . யாரும் மொக்கை காமெடி என அசால்டா சொல்லிட முடியாத படி ஆங்காங்கே சென்ட்டிமென்ட் டச் பண்ணியது.
2. அந்த பொடிப்பையன் , வாண்டு தங்கச்சி சோ க்யூட் . முட்டாள் பையன்னு அடிக்கடி திட்டும் அப்பாவை சான்ஸ் கிடைச்சதும் மிரட்டும் இடத்தில் பையன் தூள்.
3. பின்னணி இசை எனப்படும் பி ஜி எம் மில் இசை அமைப்பாளர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தின் முதுகெலும்பே பி ஜி எம் தான் , ஆனால் ஆங்காங்கே நாடகத்தன இசை.
4. கட்டிங், ஒட்டிங், எடிட்டிங் ஒர்க் மிக சிரத்தை எடுத்து பண்ணி இருக்காங்க. சாதாரண பெஞ்ச் ரசிகனுக்கும் புரியும் வகையில் குழப்பம் இல்லாத திரைக்கதை , கூடவே அந்த 4 பேருக்குமான பிளாஷ் பேக் .
5. ஜெயபிரகாஷ் ஆபத்தான சூழலில் ஹவுஸ் அரெஸ்ட் ஆனதும் மத்தவங்க ஏமாந்த தருணத்தில் தன் நண்பனுக்கு போன் செய்வதும் அப்போ அந்தக்குழந்தை போனை எடுத்து அம்மா, அப்பா 2 பேரும் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க, தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க என்பது வெடிச்சிரிப்பு.
6. வில்லன் ஒரு ஆளிடம் சின்ன பேட்டை கையில் கொடுத்து பால் அடிச்சுட்டே இரு, பால் மிஸ் ஆச்சுன்னா உன்னை கொன்னுடுவாங்க என்று மிரட்டுவதும் அவன் 2 நாட்களா அப்படியே செய்வதும், அதை காட்டியே வந்தவர்களை மிரட்டி வைப்பதும் செம காமெடி.
7. க்ளைமாக்ஸில் கூட ஒரு வெடிச்சிரிப்பு காமெடி இருக்கு, அருமை.


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஜெயபிரகாஷ் கிட்டே செல்போன் கிடைக்குது. அவர் பிரண்டுக்கு போன் பண்றார். அவர் எடுக்கலை. அவர் ஒருவர் தான் நண்பரா? வேறு யாரையும் ஏன் அவர் ட்ரை பண்ணலை? போன் நெம்பர் நினைவில்லைனு ஒரு சமாளிபிகேஷன் வசனம் வெச்சிருக்காங்க. டைரி, காலண்டர்னு எத்தனை இடத்துல குறிச்சிருப்போம்? அதுல இருந்து ட்ரை பண்ணக்கூடாதா?
2. சரி , போன் தான் பண்ண்லை, அட்லீஸ்ட் நடந்தது என்ன? என எஸ் எம் எஸ் கூட வா பண்ண முடியாது ?
3. ஜெயபிரகாஷின் ஆள் 2 லட்சம் ரூபாயை என்னமோ கோடி ரூபா மாதிரி சூட்கேஸ்ல போட்டு கொண்டு வர்றாரு? 1000 ரூபா நோட்டுல 2 கட்டு எடுத்தா பேண்ட் பாக்கெட்லயே போட்டுக்கொண்டு வரலாமே? எதுக்கு ரிஸ்க்?
4. என்ன தான் காமெடிக்கு என்றாலும் அந்த காமெடி வில்லனுக்கு இங்கிலீஷ் சுத்தமாய்த்தெரியாது என்பது நம்ப முடியாத பூச்சுற்றல் . மொழிதான் தெரியாது . அந்த வார்த்தை தலைகீழ் என்பது கூடவா தெரியாது ? பேப்பரில் எழுதித்தரப்பட்ட ஆங்கில வார்த்தை தலைகீழாக இருக்கு என்பது கூடவா தெரியாது ?

மனம் கவர்ந்த வசனங்கள்

1.தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே இல்ல.இங்கிலீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்கிலீஷ்ல பேசறே?
2. கோடி ரூபாய்க்கு ஒருத்தன் கடன் வாங்கறான்னா அவனுக்கு கோடிக்கு மேல வருமானம் வரப்போகுதுன்னு தான் அர்த்தம்.
3. சீட்டுக்கம்பெனியால யாரும் வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.சீட்டுக்கம்பெனிதான் வாழ்ந்திருக்கு.மக்கள் இல்ல .
4. எவனோ ஒருத்தன் எழுதி வெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப்போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை.
5. ஒருத்தன் எந்த அளவு அதிகமா கடன் வாங்கறானோ அந்த அளவு அதிக பணக்காரனா இருப்பான்.கோடில கடன் வாங்கறவன் கோடீஸ்வரனாதான் இருப்பான்.
6. முதல் இரவுல பொண்டாட்டி கிட்டே சொல்லாத ரகசியத்தைக்கூட முத முத தன் கூட தண்ணி அடிக்கிற அறிமுகம் இல்லாத ஆள் கிட்டே சொல்லிடுவான்.
7. இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பா அமைவதே முக்கியம் - புத்தர் .
8. பொழப்பு கெட்டவன் பொண்டாட்டி தலையை சிரைச்சானாம்.
9. மனுஷன் கண்டு பிடிச்சதுலயே சிறந்தது இந்த போதை வஸ்துதான் .
10 எனக்குன்னு ஒரு ஜாப் எதிக்ஸ் இருக்கு, இந்த பொம்மை எல்லாம் திருட முடியாது
11. காரணங்கள் உணர்வுப்பூர்வமா இருந்தா எவ்ளோ சின்ன வேலையா இருந்தாலும் செய்வேன்.
12. எடுக்கறவன் தான் திருடன்னு இல்லை, எடுக்க விடாம தடுக்கறவனும் திருடன் தான்.
13. திறமை இருக்கறவன் ஜெயிக்கறான் , இல்லாதவன் தோக்கறான், இது சர்வைவல்.
14. இங்கிலீஷ்ல நீங்க திட்டுனா மணக்கும், தமிழ் ல நாங்க திட்டுனா கசக்குமா?
15. தயவு செஞ்சு போலீசுக்கு மட்டும் யாரும் போயிடாதீங்க.
மிரட்டறான், ஆனா அதை நாசூக்கா செய்யறான்.
16. நான் எதையும் திருடலை
ஏதாவது இங்கே இருந்தாத்தானே திருடுவே?
17. நான் திருடன் தான், ஆனா சக தொழிலாளி கிட்டே பொய் சொல்ல மாட்டேன், ஜாப் எதிக்ஸ்
18. சாரி, செல் டெட்.
என்னமோ ரிலேஷன் டெட்ங்கற மாதிரி அசால்ட்டா சொல்றே?
19 கற்பகவல்லி எங்கே?
அவ அவங்கக்கா மேரேஜ்க்கு போய்ட்டா
அவளுக்கு அக்காவே கிடையாதே?
20 சாரி பாஸ், என் செல்போன்ல ஒன்லி இன் கமிங், நோ அவுட் கோயிங், ஜாப் எதிக்ஸ்

சி பி கமெண்ட்

மூடர் கூடம் -
வித்தியாசமான சிச்சுவேஷன் காமெடி பிலிம். பெண்கள், மாணவ மாணவிகள், குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தேசிங்கு ராஜா போன்ற மொக்கை காமெடி பட இயக்குநர்கள் இந்தப்படத்தைப்பார்த்து எப்படி சீனில் காமெடி கொண்டுவருவது என்பதை கத்துக்கலாம்.
-----------------------------------குமுதம் விமர்சனம்


இது வேறுவகை சூது கவ்வும் கதை!

உறவினர் வீட்டில் ஆட்டையைப் போட வருகிறார்கள் நான்கு மூடர்கள். கடைசியில் அந்த வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்க, அதை ஓர் ஏழைப் பெண்ணின் குழந்தையின் சிகிச்சைக்குத் தந்துவிட்டு (சென்டிமென்டாம்!) வேறு இடத்துக்குத் திருடக் கிளம்புகிறார்கள்.

சோப்ளாங்கித்தனமான கதையாக இருந்தாலும் இயக்குநர் நவீன் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் பல இடங்களில் திரைக்கதையை மின்ன வைத்திருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும். பிளாஷ்பேக் காட்சியை அந்தக் காலத்து ஊமைப்படம் போல் காட்டியிருப்பதும், படத்தில் வரும் எல்லோருக்கும் குட்டிக் குட்டியாய் அந்த பிளாஷ்பேக் காட்சிகளை வைத்திருப்பதும் (நாய்க்குட்டி, பொம்மைக்குக்கூட உண்டு) ரசனை!

நான்கு இல்லை... அந்த ஐந்து மூடர்களுமே தங்கள் முட்டாள்தனத்தை நன்றாகப் பறைசாற்றுகிறார்கள். அதிலும் அந்த நாடோடிகள் படத்தில் காது பஞ்சர் ஆகுமே அந்த சென்றாயன், ஓவியா ஒரு முறை அவரை அணைத்துக்கொண்டு விடைபெறும்போது காட்டும் முகபாவம் நாகேஷ்!

ஓவியா பளிச்.அவரது அம்மா அனுபமா பளிச் பளிச்!

வித்தியாசமான படம் எடுத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் படத்தில் எல்லோரும் மூடர்களாக இருப்பதைப் ப‌ோல, காசு கொடுத்துடிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் வரும் ரசிகர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் வருகிறது.

குமுதம் ரேட்டிங் - ஓகே.--------------------------------------------------------கல்கி விமர்சனம்


இயக்குனர் நவீன் என்று சொல்வதற்குப் பதில் இனி ‘காம்ரேட்’ நவீன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு, படம் நெடுகிலும் சிவப்பு வாசம். ‘தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசுவியா? அப்புறம் ஏண்டா இங்கிலீஷ் தெரியாத தமிழன்கிட்ட இங்கிலீஷ்ல பேசறீங்க’ போன்ற அசத்தலான வசனங்களும் இயக்குனர் நவீனின் கைவண்ணமே.

ஹீரோ இமேஜ், பஞ்ச் டயலாக், டாடா சுமோ போன்ற சினிமாவின் பொற்காலம் எல்லாம் மலையேறிவிட்டது. சமீபகாலமாக வெளியாகி வெற்றிபெற்ற ஆச்சர்யமான திரைப்படங்களின் வரிசையில் ‘மூடர்கூடமும்’ சேர்கிறது. இதற்காகவே படத்தை வெளியிட  உதவிய ‘பசங்க’ பாண்டிராஜைப் பாராட்டலாம்.

மிகக் கடினமான வாழ்க்கை மற்றும் சமூக உண்மைகளின் முகத்திரைகளை நகைச்சுவையோடு கிழிப்பதையே ‘பிளாக் ஹியூமர்’ என்பார்கள். இப்படம் அவ்வகையானது. சமுதாயத்தில், விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நான்குபேர் வேறு வேறு பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு ‌போலீசில் பிடிபடுகின்றனர். நண்பர்களாகின்றனர். இவர்கள் வெளியில் வந்தவுடன், அந்த நால்வரில் ஒருவனின் வசதியான சீட்டுக் கம்பெனி நடத்திக்கொண்டு இருக்கும் சொந்த மாமாவின் வீட்டையே கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு வீட்டினுள் நுழைகிறார்கள். அவர்கள் திருடினார்களா? இல்லையா? உள்ளே என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

கதை ஒன்றும் புதிதல்ல என்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு மிகுந்த புத்திசாலித்தனமாக திரைக்கதையைக் கையாண்டிருக்கிறார் நவீன். தத்தமது பாத்திரங்களைக் ‌கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் நடிகர்கள்.

திருடச்சென்ற இடத்தில் ஜெயப்பிரகாஷின் மகனான சிறுவனுக்கும் குபேரனுக்குமான உளவியல் ரீதியான உறவு, ஸ்டாக் ஹோம் சிண்ட்ரோம். ஜெயப்பிரகாஷ் ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் எதிர்முனையில் நிலைமையின் தீவிரம் புரியாமல் ‌போனை எடுக்கும் சிறுமி, மழலையாகப் பேசுகிறாள். போலி நாகரிகத்துக்காக விலை உயர்ந்த நாய் ஒன்றை வாங்கித் தருகிறார். திருடர்களைக் கடிக்கும் என்று எதிர்பார்த்தால் நாய் பயந்து பம்முவது தியேட்டரில் வெடிச் சிரிப்பைக் கிளப்புகிறது.

படம் நெடுகிலும் சமூகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் நம்பி்க்கை தரும்படியான வசனங்கள் வரவேற்கத்தக்கவை. வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான இசை, குறிப்பாக பாரதியின் பாடல்களைக் கையாண்ட விதம் அருமை.

படத்தில் இளம்பெண், நவீன் மேல் காதல் வசப்படுவது நெருடலாக இருக்கிறது. உயர்ந்த சிந்தனைகள் உள்ள இயக்குனர் வடமாநிலத்தவரை வசை பாடாமல் இருந்திருக்கலாம்.

அதேபோல் படம் ரொம்ப நீளம். ஒவ்வொரு கேரக்டரையும் எஸ்டாபிளிஷ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார் நவீன். பெரும்பாலான காட்சிகள் ஓர் அறைக்குள்ளேயே நடப்பதால், எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. புதிய முயற்சி என்ற அளவில், வெல்கம் மூடர்கூடம் டீம்.வாசகர் கருத்து (40)

Nambi - Dubai,இந்தியா
09 அக், 2013 - 00:26 Report Abuse
Nambi நவீன் உழைப்பு வீண் போகவில்லை
Rate this:
Nambi - Dubai,இந்தியா
09 அக், 2013 - 00:24 Report Abuse
Nambi unmai
Rate this:
satathy kuala lumpur - kuala lumpur  ( Posted via: Dinamalar Android App )
01 அக், 2013 - 15:02 Report Abuse
satathy kuala lumpur padam meendum meendum paarka thoondhugirathu...im satisfied with this movie...awesome
Rate this:
THANGAPANDI V - muscat,ஓமன்
27 செப், 2013 - 12:11 Report Abuse
THANGAPANDI V படம் அருமை...
Rate this:
periyar naesan - chennai,இந்தியா
20 செப், 2013 - 22:22 Report Abuse
periyar naesan காசு செலவு பண்ணி, கஷ்டப்பட்டு எடுக்கற படத்தை உடனே பாத்து மொக்கைன்னு விமர்சனம் செய்யும் மொக்கைகள், நல்லா இருக்குன்னு நாலு பேர் சொன்னதுக்கு அப்புறமா படத்தை பாக்கலாமா, வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியதுதானே... அதை விட்டுட்டு...ஏன் சினிமாங்கிற தொழில்ல இருக்குற பல பேர் வயிற்றில் மண்ணை அள்ளி கொட்டணும்?
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மூடர்கூடம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in