Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சூது கவ்வும்

சூது கவ்வும்,Soodhu Kavvum
14 மே, 2013 - 17:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சூது கவ்வும்

  

தினமலர் விமர்சனம்


"பீட்ஸா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித்தேடித்தர வெளிவந்திருக்கும் ‌மற்றுமொரு படம்தான் "சூதுகவ்வும்".

அதிகாரத்தில் கை வைத்தல் கூடாது, அடி உதை கூடாது... உள்ளிட்ட ஐந்து விதிமுறைகளுடன் சொற்ப, அற்ப தொகைகளுக்காக ஆள் கடத்தும் பேர்வழி விஜய் சேதுபதி. ஒரு ஓட்டை காருடனும், ஒன்றுக்கும் உதவாத உட்டாலங்கடி ஐடியாக்கள் தரும் கற்பனை காதலியுடனும் (மனப்பிராந்தி.?!) கடத்தல் அசைன்மெண்ட்டுகளில் அடுத்தடுத்து சொதப்பும் விஜய்யுடன் வந்து இணைகின்றனர், நடிகை நயன்தாராவுக்கு கோயில் கட்டியதால் ஊரை விட்டு துரத்தப்படும் சிம்ஹா, தான் வேலைபார்க்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்த ஜாகுவார் காரை ஓட்டிபார்க்கும் ஆசையில் வெளியில் எடுத்து வந்ததால் வேலை இழக்கும் ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கர் டிரைவர் ரமேஷ், இவர்களது சாப்ட்வேர் நண்பர் அசோக் ஆகி‌யோர். ஒரு அசாதாரண சூழலில் இந்த நால்வரும் இணைந்ததும் இவர்கள் வசம் நேர்மையான நிதி அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தும் காஸ்ட்லீ வேலை ஒன்று ஒப்படைக்கப்படுகிறது. அதிகாரத்தில் கை வைக்கக்கூடாது எனும் ஐந்து விதிமுறைகளில் ஒன்றையும் சற்றே ஓரம் வைத்துவிட்டு அமைச்சரின் மகனை கடத்துகின்றனர்.

அமைச்சரின் மகன் இவர்கள் நால்வரையும் காட்டிலும் பெரிய தில்லாலங்கடி. தன் நேர்மை அப்பாவிடம் இல்லாத பணத்தை, அவரது ஆளுங்கட்சி நிதியிலிருந்து மூன்று கோடியாக அவர் கறக்க போடும் கடத்தல் பிளானில் இருந்து விஜய் சேதுபதி அண்ட் கோவினரால் அது இரண்டு கோடியாக குறைந்த வருத்தம். அதில் ஒரு கோடி அந்த நால்வருக்கும் ஷேராக போகப்போகும் வருத்தம் உள்ளிட்டவைகளால் கடுப்பில் இருக்கும் அவர், தன்னை கடத்தும் வாகனத்தை கவிழ்த்து விட்டு அந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இவர்களிடமிருந்து 2 கோடியுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அந்த விபத்தில் தன் கற்பனை காதலியையும் பறி கொடுக்கும் விஜய்யும், அவரது கூட்டாளிகளும் அமைச்சரின் பெருமுயற்சியால் திண்டுக்கல்லில் இருந்து இவர்களுக்காகவே ஸ்பெஷலாக வரும் என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டிடம் சிக்குகின்றனர். நால்வரும் கொல்லப்பட்டனரா? விதியால் வெல்லப்பட்டனரா..? என்பதும், விபத்தில் இறந்த விஜய்யின் கற்பனை காதலி மீண்டும் வந்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வத்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது "சூது கவ்வும்" திரைப்படத்தின் மீதிக்கதை!

ஹாட்ரிக் ஹிட் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை விட, ஹாட்ரிக் ஹிட் ஹீரோ எனும் புதிய அத்தியாயத்தை சமீப காலத்தில் உருவாக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதே பொருந்தும். 50 ப்ளஸ் நாயகர்கள் எல்லாம் 25 இளைஞர்களாக மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், மனிதர் 40 ப்ளஸ்.,  பாத்திரத்தில் நரைமுடியும், எண்ணெய் வழியும் முகமாக விஜய் சேதுபதி‌யா இது என கேட்கும் அளவிற்கு என்னமாய் ஜொலித்திருக்கிறார்? ஆள் கடத்தல் தொழில் அவ்வளவு ரிஸ்க் இல்லை... இந்த 5 விதிமுறைகளை பின்பற்றினால்... என அவர் கடத்தல் கிளாஸ் எடுக்கும் விதமாகட்டும், கடத்தப்பட்டவருக்கு ஒரு சின்ன ஷேர் தருவதிலாகட்டும், கற்பனை காதலி சஞ்சிதா ஷெட்டியுடன் கொஞ்சி குலாவுவதில் ஆகட்டும் வாவ் என வாய் பிளக்க வைக்கிறார் விஜய்!

கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி கற்பனை காதலி என்றாலும் கலக்கல் காஸ்டியூமில் விஜய் பகுதியை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் கற்பனை உலகில் மிதக்க வைப்பது படத்தின் பக்க(கா) பலம்!

அமைச்சரின் வாரிசு அருமை பிரகாசமாக வரும் கருணாகரன், பகலவன் - சிம்ஹா, சேகர்-ரமேஷ், கேசவன்-அசோக் செல்வன், என்கவுண்டர் போலீஸ் அதிகாரி பிரம்மா - யோக ஜெஸ்ஸி, டாக்டர் தாதா - அருள்தாஸ், நிதியமைச்சர் ஞானோதயம் - எம்.எஸ்.பாஸ்கர், முதல்வர் - ராதாரவி, கான்ஸ்டபிள் - வெங்கடேஷ், டி.ஐ.ஜி - பாய்ஸ் ராஜன், நம்பிக்கை கண்ணன், சிவக்குமார் உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும், அதில் பங்கேற்று நடித்திருப்பவர்களும் "சூது கவ்வும்" படத்தின் பெரும் பலம்!

"என்ன பண்ணப்போறோம்னு தெரியாம சென்னைக்கு வர்றவன்தான் சாதிக்கிறான், பிளானோடு வர்றவன் ஊருக்கே போயிடுறான்..." , "நாளைக்கு சண்டே, நாங்க ஒர்க் பண்ண மாட்டோம்... பணத்தை திங்கட்கிழமை கொண்டு வாங்க..." உள்ளிட்ட காமெடி கலர்புல் வசனங்களும், கடத்தப்படுபவரின் பெற்றோர் அல்லது உறவினரின் மாத சம்பளம் எவ்வளவு எனக்‌கேட்டு அந்த சம்பளத் தொகையையே பிணையத் தொகையாக கேட்டு வாங்குவதும், அதில் ஒரு ஷேரை கடத்தப்பட்டவருக்கு டிப்ஸாகத் தருவதும் செம காமெடி என்றால், கற்பனை காதலி, சினிமா எடுக்கும் டாக்டர் ரவுடி, நம்பிக்கை கண்ணன் எனும் பெயர் உடையவரின் நம்பிக்கை மோசடி, சுருள்முடி தாதாவை பிச்சைக்காரன் என நினைத்து விஜய் சேதுபதி சில்லறை இல்லை என்பதும் அதற்கு அவர் தலையை பிய்த்துக் கொண்டு திரிவது உள்ளிட்ட ஓவ்வொரு கேரக்டரும் தியே‌ட்டரே அதிரும் சிரிப்பு வெடிகள்.

கானா பாலாவின் "காசு, பணம் டப்பு, மணி... மணி..." பாடல், சந்தோஷ் நாராயணனின் இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் ர(ரா)கம்! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள் நலன் குமாரசாமியின் எழுத்து இயக்கத்தில் "சூதுகவ்வும்" படத்திற்கு வெற்றி மகுடம் சேர்த்திருக்கின்றன. பலே, பலே!!

மொத்தத்தில், "சூது கவ்வும்" - "வசூல் வெல்லும்!"----------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்லாஜிக், நியாயம் நீதி, 4 பாட்டு, 3 ஃபைட், தங்கச்சி அல்லது அம்மா சென்ட்டிமெண்ட், கிளைமாக்ஸில் வில்லன் கைது அல்ல காலி, கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்று தமிழ் சினிமாவின் அத்தனை ஃபார்முலா டிரௌஸர்களையும் கதறக் கதற கழற்றி எறிந்து விட்டு புதிதாய் ஃப்ரெஷ்ஷாய் ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள்.

ஆள் கடத்தல் என்றாலே ரத்தம், துப்பாக்கி சத்தம், கற்பழிப்பு, கண்ணீர் என்று பார்த்துப் பழகிப் போன நமக்கு படம் முழுக்க ஜாலி கடத்தலை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
கதை? அந்தப் புண்ணாக்கெல்லாம் எதுவும் கிடையாது!

ஒரு கொள்கையுடன் யாரையும் காயப்படுத்தாது, கடத்தி, சம்பந்தப்பட்டவர்களால் முடிந்த நியாயமான தொகையைப் பெற்றுக் கொண்டு ரிலீஸ் செய்வதுதான் சேதுபதி அண்ட் கோவின் வேலை. பத்துப் பதினைந்து கடத்தல்களுக்குப் பின் நேர்மையான அமைச்சரின் மகனைக் கடத்தி அவர்கள் படும் பாடு இருக்கிறதே, அய்யோய்யய்யோ!

பட்டையைக் கிளப்புகிறார் விஜய் சேதுபதி. கூடவே சில வெட்டி நண்பர்கள். போதாதற்கு நடுவில் ஒரு தளதள மாயக் காதலி வேறு. சொல்லவா வேண்டும்? இந்த சிரிப்புத் திருடர்களைப் பார்த்து பாப்கார்ன்கள் வாயிலிருந்து சிதற எல்லோரும் சிரிக்கிறார்கள். பத்து விநாடிக்கு ஒரு முறை! விஜய் சேதுபதிக்கு ஏன் வயது முதிர்ந்த பாத்திரம்? அது தேவையே இல்லை. தவிர அவரத எல்லாப் படங்களிலும் அவரோ அல்லது அவர் கூட வருபவர்களோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதிலும் அப்படித்தான்.

ராதாரவியும், பட்டாபி பாஸ்கரும் மனதில் நிற்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலம் குருட்டுத்தனமான முட்டாள்தனமும் புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் சரிவிகிதமாகக் கலந்த வசனம்! இயக்கம், நலன் குமாரசாமி.

சந்தோஷ் நாராயணின் இசையில் காசும், கம்னா கம்மும் களைகட்டுகிறது.

கெட்டவர்கள் எல்லாம் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்லியிருபபது வேடிக்கைக்கு ஓகே என்றாலும் பொறுப்பில்லாத தனம் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

சூது கவ்வும் - கோடையில் இடி மழை!

குமுதம் ரேட்டிங் - நன்று----------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்


ஒரு அமெச்சூர் கடத்தல்காரன் அதுவும் மனநிலை பாதிப்புள்ளவன் ஆள் கடத்துவதை எவ்வளவு காமெடியாகச் சொல்லமுடியுமோ அவ்வளவு காமெடியாகச் சொல்கிற படம் சூது கவ்வும். ப்ளாக் ஹியூமர் வித் த்ரிலர் காம்பினேஷனில் கதையை மட்டுமே முன்னிருத்தி இருக்கும் படம்.

இத்தனைக்கும் ஸ்டார் காமெடியன்ஸ் எவரும் கிடையாது. ஓட்டை கார், புதுமுக நடிகர்கள் அளவுக்கே பரிச்சயமான மூன்று (புது)முகங்கள், இருக்காரா இல்லையா என்று தெரியாத கற்பனை ஹீரோயின் (சஞ்சிதா ஷெட்டி) இவர்களை வைத்துக்கொண்டு காமெடியில் பார்வையாளர்கள் இதயங்களைக் கடத்திக் கொண்டு போகிறார் இயக்குனர் நலன்குமரசாமி. விஜய்சேதுபதி நாற்பது வயது ஹலூசினேஷன் பாதிப்புள்ள மனிதனாக, கடத்தல்காரனாக... தன் நடிப்பின் பக்கங்களை மெருகேற்றி இருப்பது க்ளாஸ். கடத்தலுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய ஐந்து ரூல்ஸ் என அவர் நடத்தும் கடத்தல் பாடங்கள் சுவாரஸ்ய சிப்ஸ். கடத்தப் படுபவர்களின் பெற்றோர்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று பதைபதைப்பதும், பெற்றோர்களிடம் அடித்த பணத்தில் கடத்தப்பட்டவர்களை விடுவிக்கும்போது ஷாப்பிங்க்கு வெச்சுக்கோ என டிப்ஸ் தருவதுமென காட்சிக்கு காட்சி விஜய் சேதுபதியின் காமெடி லூட்டி. பணத்தை எங்க வைக்கறதுன்னு திங்கட்கிழமை சொல்றோம் ஏன்னா ஞாயிற்றுக்கிழமை நாங்க ஒர்க் பண்றதில்லைன்னு விஜய் சேதுபதி சீரியஸாகச் சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ் மழை. விஜய் சேதுபதியின் கூட நடிக்கும் மூவரும் ஏறக்குறைய புது முகங்கள் என்றாலும் அவர்களிடம் அதற்கான எந்தப் பதற்றமும் இல்லாத இயல்பான நடிப்பு.

அமைச்சர் அருமைநாயகத்தின் மகனாக நடித்திருக்கும் கருணா சரியான கல்லுளிமங்கன். தன்னைக் கடத்தச் சொல்லி ஐடியா கொடுப்பதும், எப்படி தன் அப்பாவிடமிருந்து பணம் பறிக்கணும் என்பதை டெமோ செய்து காண்பிப்பதும் அசத்தல் ரகம். உட்கார்ந்த இடத்திலே உட்கார்ந்துகொண்டு காமெடி பண்ணுவதில் ராதாரவியின் அனுபவம் மிளிர்கிறது. படத்தைத் தூக்கி நிறுத்துவது வசனங்கள்தான். வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு வெடிகள். “நீ சாப்பிடறது இட்லின்னு சொன்னா சட்னிகூட நம்பாதுடா’ என்ன பண்றதுன்னு தெரியாம சென்னைக்கு வந்தவந்தாண்டா சாதிச்சிருக்கான், நல்ல மாமாவுக்கு ஒரு சூடு, ஏன் பாஸ் மனுஷனா பொறந்தா கண்டிப்பா வேலைக்கு போய்த்தான் ஆகணுமா என ஆடியன்ஸைக் கிச்சுக்கிச்சு மூட்டும் வசனங்கள் ஏராளம். தினேஷின் ஒளிப்பதிவு, லியோவின் எடிட்டிங், சந்தோஷ் நாராயணன் இசை... முறையே உறுத்தல், துருத்தல், இரைச்சல் இல்லா ரகங்கள்.

முதல் பாதியில் இருக்கும் காட்சிகளின் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் போலீஸ் துரத்தல் காட்சிகளால் மிஸ்ஸிங். அவ்ளோ டெரராகக் காண்பிக்கப்பட்ட பிரம்மா இன்ஸ்பெக்டர் பின்னால் சுட்டுப்பட்டு பெட்டில் கிடப்பதும், ஃப்ராடு பண்ணும் கருணா அமைச்சர் ஆவதும் நகைக்க முரண். இதே நகைப்போடு படம் கலகலப்பாக முடிவது எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். ஹீரோ கத்தியைத் தூக்காத, அடிதடி இல்லாத, வெஞ்சினம் கொள்ளாத படம் பார்த்தும் சிரித்தும் வெகு நாளாயிற்று தமிழ் ரசிகனுக்கு. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் படம்.

சூது கவ்வும் - மனத்தைக் கவ்வுகிறதுவாசகர் கருத்து (25)

MuthuMani - Madurai (Melur),இந்தியா
07 ஜூன், 2013 - 07:48 Report Abuse
MuthuMani யதார்த்தமான நடிப்பில் கலக்கும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
G Anbu Anbu - thondi,இந்தியா
06 ஜூன், 2013 - 11:02 Report Abuse
G Anbu Anbu நல்ல வரணும்
Rate this:
Mathan Ram - Atlanta,யூ.எஸ்.ஏ
04 ஜூன், 2013 - 20:42 Report Abuse
Mathan Ram மிகவும் நன்றாக உள்ளது. இந்த மாதிரி படங்கள் தான் தமிழ் படங்களை தனிதுவமாக்கும் பெருமை சேர்க்கும் விஜய் சேதுபதி இந்த மாதிரி படங்களையே தொடர்ந்து தேர்ந்து எடுத்து நடிக்க வேண்டும்.
Rate this:
vinoth - pudukkottai,இந்தியா
29 மே, 2013 - 15:59 Report Abuse
vinoth விஜய் சேதுபதி வருங்காலத்தில் NO 1 HERO ஆக வாய்ப்பு இருக்குனு சொல்றதல்லாம் ரொம்ப ஓவர்.பரவாஇல்லை ஓகே.
Rate this:
Ganesh - chennai,இந்தியா
26 மே, 2013 - 01:30 Report Abuse
Ganesh super படம் பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோ இல்லாமல் மெகா ஹிட் தமிழ் சினிமா kindly follow ஆல் ஹீரோ
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சூது கவ்வும் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in