Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜில்லா

ஜில்லா,Jilla
23 ஜன, 2014 - 11:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜில்லா

தினமலர் விமர்சனம்


தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரியின் 25 ஆண்டு கால திரைப்பட தயாரிப்புபணியில் 85வதாக தயாராகி வெளிவந்திருக்கும் திரைப்படம், காவலன், நண்பன், துப்பாக்கி ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து தலைவா தோல்விக்குப்பின் வெளிவந்திருக்கும் விஜய்யின் 56வது திரைப்படம், புதியவர் ஆர்.டி. நேசனின் இயக்கத்தில் முதல் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ஜில்லா!


சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் ஜில்லா வின் மீதிக்கதை!

இளைய தளபதி விஜய், தனக்கே உரிய ஸ்டைலில் சக்தியாக சக்தி காட்டியிருக்கிறார். மோகன்லால் - பூர்ணிமா மீதான அப்பா அம்மா பாசத்திலாகட்டும், மகா - நிவேதா, விக்வேஷ் - மகத் மீதான சகோதர பாசத்திலாகட்டும், வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடியிலாகட்டும், காஜல் அகர்வாலுடனான காதலில் ஆகட்டும் அனைத்திலும் ஸோ குட் சக்தி - விஜய்!

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

மோகன்லால் கிட்டத்தட்ட விஜய்யின் காவலன் படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றாலும்.. விஜய் மாதிரியே இந்த சிவன் பக்கத்தில் நின்னு பார்த்திருப்ப.. எதிர்த்து நின்னு பார்க்குறியா.. என்றும், இந்த சிவன் கால் படுற இடம் மட்டுமல்ல, நிழல் படுற இடம் கூட எனக்கே சொந்தமாயிரும் என்றும் அடிக்கிற டயலாக்குகளில் தியேட்டர் அதிர்கிறது. அவர் விஜய்யுடன் போடும் ஆட்டங்களும் சூப்பர்ப்!

காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

கணேஷ் ராஜவேலின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். டி. இமானின் இசையில் பாடல்கள் எட்டு ( கரோக்கி டிராக்குகள் உட்பட) அத்தனையும் குட்டு! ஆர்.டி. நேசனின் எழுத்து, இயக்கத்தில் முன்பாதி சற்றே ஜவ் வாக இழுத்தாலும், பின்பாதி பரபரப்பாக பட்டையை கிளப்பி இருக்கிறது. விஜய் அ.தி.மு.க., பார்டர் போட்ட டி. சர்ட்டுடன் ஒரு பாடலில் ஆடுவது, லாஜிக் இல்லாமல் போலீஸ் ஆவது... உள்ளிட்ட காமெடிகள் இருந்தாலும், ஜில்லா - நல்லாவே இருக்கிறது. ஆனாலும் இயக்குநர் பார்ட் 2 பில்டப்புடன் படத்தை முடித்திருப்பது கொஞ்சம் ஓவர்!

ஜில்லா கட்டும் கல்லா!

-----------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



ஊருக்கே தாதா மோகன் லால். அவரோட டிரைவரோட பையன் தான் விஜய். சின்ன வயசுல நடந்த ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின் உயிருக்கு வந்த ஆபத்தில் இருந்து விஜய், காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு.

காஜல் அகர்வால் போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது, இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான், ஹீரோ, ஹீரோயின், காமெடியன்) ஹீரோயின் போலீஸ்ன்னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார். போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி, கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. மோகன்லாலுக்கு போலீஸ்னாலே ஒரு சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா இருக்கனும்னு. விஜய் அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். ராமர் அவதாரம் எடுத்த ராவணன், சீதையைத் தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும், மோகன் லாலுக்கும் முட்டிக்குது. இடைவேளை. அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா செண்ட்டிமெண்ட், தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு (ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க.

எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது பூஸ்ட் அப் கொடுக்கும் படம் தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு, கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ். பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு. விஜய், மோகன் லால் காம்போ காட்சிகளில் மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு.

விஜய் இந்தப்படத்தில் ரொம்ப இளமையா, அழகா, புதுப்புது மேனரிசத்தோட, வசன உச்சரிப்பில் சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு.

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில் அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து. போலீஸ் யூனிஃபார்மில் கலக்கிட்டார். பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால பரோட்டா பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம்.

காஜல் அகர்வால் படம் முழுக்க 4 ரீல் கூட வரலை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார். மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு. அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து பாதி சம்பளம் கட் பண்ணனும், லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேடுக்கொள்கிறேன்.

பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கு. எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

விஜய் ஒரு பாட்டு பாடி இருக்கார். நல்ல வாய்ஸ். குத்தாட்டத்தை விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு ஒரு ஷொட்டு .

படம் முழுக்க ஆங்காங்கே வரும் ஜில்லா ஜில்லா தீம் இசை ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது

சி.பி.கமெண்ட் - ஜில்லா - முன் பாதி செம ஸ்பீடு, பின் பாதி ஓக்கே. புதுக்கதை. நோ ரீ-மேக். ஹிட் ஆகிடும்!

--------------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்




இளைய தளபதி ரசிகர்களை முழுக்க முழுக்க குறி வைத்திருக்கிறது "ஜில்லா!

மதுரையையே ஆட்டிப் படைக்கிறார்கள் மோகன்லாலும் அவரது வளர்ப்பு மகனான விஜய்யும். இருவருக்குள் பிளவு ஏற்படுத்த கூட இருந்தே ஒருவர் குழி பறிக்க, அப்பாவும் மகனும் பிரிகிறார்கள். சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் ஜில்லா.

விஜய் இன்னும் ஃப்ரெஷ்ஷாக, இன்னும் யூத்தாகி, இன்னும் குறும்பாக மாறியிருக்கிறார். டான்ஸ், ஃபைட் எல்லாம் வழக்கம்போல கிளப்பியிருக்கிறார். கூடுதலாக தோள் பட்டையைத் தூக்கிக் கொண்டு நடப்பது, சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி குரல் ஸ்டைலை மாற்றிக் கொள்வது, காக்கி டிரெஸ் என்றாலே எகிறுவது, அதே காக்கிச் சட்டையை மாட்டிக் கொண்டு ஏறி அடிப்பது என்று முழுக்க முழுக்க எண்டர்டெய்ன் பண்ணுகிறார். ஸ்டைலாக அப்பாவும் மகனும் இடித்துக் கொண்டு நடப்பது க்யூட்.

மோகன்லால் செமை கெத்து! அதுவும் உணர்ச்சி வசப்படும் சமயங்களில் கன்னத்துச் சதை சதிராடுவது கூடுதல் வனப்பு. இருவர் கூட்டணியை செமை பொருத்தமாய்க் கையாண்டிருக்கிறார் இயக்குனர் நேசன்.

காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு? பாடல் காட்சிகளில் பளிச்சென்று இருந்தாலும் மற்ற நேரங்களில் டல்லடிப்பது ஏன்? மேக்கப் மேன் உஷார்.

சூரி அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார். காமெடிக் காட்சி என்றால் தொப்புளுக்கு ஒரு சாண் கீழே அடி வாங்க வேண்டும் என்ற விஷயத்தை தாண்டி வாங்கப்பா!

அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ்! கணவனுக்கும் மகனுக்கும் இடையில் தவிப்பது நேர்த்தி, சரி, விஜய்யின் தங்கையாக வரும் சின்னப் பொண்ணு யாருங்க? கதாநாயகி சான்ஸ் கதவை தட்டுமுங்கோ!

இமான் இசையில் "கண்டாங்கி பாடல் கவிதை "ட்ரீட்டு பாடல் ரிப்பிட்டு!

ஒரு தாதா தன் ரெகமண்டேஷனில் அஸிஸ்டென்ட் கமிஷனர் போஸ்ட் வாங்கி, தன் ஊருக்கே போஸ்டிங் போட்டுக் கொள்வதும் ஒரு பெரிய விபத்தைப் பார்த்ததும் ஹீரோ உடனே மதம் மாறுவதும் ரொம்ப ஓவர் பாஸு! அது போல் யார் குற்றவாளி என்பதை தந்தையிடமோ தம்பியிடமோ சொல்லாமலே இருப்பது ஏனோ?

ஜில்லா - கல்லா!

ஆஹா! - தாதா விஜய், போலீஸ் விஜய், மோகன்லால்

ஹிஹி! - ஏகப்பட்ட கிளைக் கதைகள்

குமுதம் ரேட்டிங் - நன்று


--------------------------------------------------------

கல்கி திரை விமர்சனம்



தாதாவான வளர்ப்பு அப்பா மோகன்லாலை நல்வழிப்படுத்தும் சீரிய பணியில் மகன் விஜய். அதில் எப்படி வெற்றிபெற்றார் என்பதை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முதுகுவலிக்கச் சொல்கிறார் டைரக்டர் நேசன். இளமை துள்ளும் விஜய் ஸ்கிரீனில் தோன்றினாலே உற்சாகம் நிச்சயம். கூடவே பவர்ஃபுல் மோகன்லால், துடுக்கும் மிடுக்கும் போடும் துள்ளாட்டம் படம் நெடுக கொண்டாட்டம்.

தாதாவுக்கு அடியாளாக இருந்துவிட்ட ஒரு கட்டத்தில் நேர்மை காக்கியை அணிந்துகொள்ளும் விஜய். அங்கிருந்து காட்டும் ஸ்பீட் + முதிர்ச்சி அட்டகாசம். ஜோடி, அழகு காஜல். ஒன்லைன் ஜோக்குகளுக்கு சூரி. பாடல்களில் "வெரசா போகையிலே... தான் ஹைலைட். அதை படமாக்கிய விதம் வித்தியாசம்; 2014ன் நிச்சய சூப்பர் ஹிட்.

யாரை வில்லனாக்குவது என்று ரொம்ப நேரம் குழம்பிவிட்டு, கடைசியில் மோகன்லாலோடு கூட இருக்கும் சம்பத்ராஜ்யையே கத்தியைத் தூக்கிவிட்டு விட்டார்கள். குரூப் 1 தேர்வை ரொம்ப சுலபமாக பாஸ் செய்துவிடலாம் என்று காதில் பூ சுற்றுவது, பின் பக்கத்தை அழுத்தும் ஆபாசம், கொட்டாவி விட வைக்கும் இரண்டாம் பாதி என்ற சறுக்கல்கள் இருந்தாலும்,

ஜில்லா - விஜய் ரசிகர்களுக்கு அல்வா!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ஜில்லா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in