Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சுரேஷ் பாலாஜி நேர்முகம்!

20 ஏப், 2012 - 15:48 IST
எழுத்தின் அளவு:

                

பேட்டி : எஸ்.ரஜத்


பிரபல நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியின் திரைப்பட வாழ்க்கை பற்றி?
அப்பா தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஓரு புரொடக்ஷன் மேனேஜரா துவக்கினார். நரசு ஸ்டுடியோவில்தான் முதன் முதல்ல வேலை செய்தார்.கிண்டியில் இருக்கும் நரசு ஸ்டுடியோவிற்கு புரசைவாக்கத்திலிருந்த வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று ஆரம்ப காலத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அதற்கப்புறம்தான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய முதல் படம் ஓளவையார். அதுல முருகராக நடித்திருந்தார். அப்போ அவருக்கு 14 அல்லது 15 வயதிருந்திருக்கும். அந்த ஸ்டில் இன்னும் என்கிட்ட இருக்கு. அப்பா நடிப்பு துறைக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரு ஜெமினி கணேசன் அவர்கள்தான். தயாரிப்பாளரா அப்பா மாறுவதற்கு காரணாமாக இருந்தவரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். அப்பா சிவாஜி அவர்களுடைய மிகப்பெரிய விசிறி.
அப்பா முதன் முதல்ல சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆரம்பித்து தயாரித்த திரைப்படம் "அண்ணாவின் ஆசை". ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த படம் அது. 1966ல் வெளிவந்த படம் அது. அதற்கப்புறம் சிவாஜி சாரை வச்சு இடைவெளியே இல்லாம கிட்டத்தட்ட 13 முதல் 14 படங்கள் பண்ணினாரு. சிவாஜி சாரை வச்சு அதிக படங்கள் தயாரிச்ச தயாரிப்பாளர் அப்படிங்கற பெயர் பெற்றவர் அப்பா.
அதுல மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் கலர்ல "எங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தை சொல்லலாம். சிவாஜி சார் மற்றும் ஜெயலலிதா அம்மா நடிச்சிருந்தாங்க. அது இந்தில எல். வி. பிரசாத் தயாரிப்புல வெளிவந்த கிலோனா அப்படிங்கற திரைப்படம் . அதற்கப்புறம், "ராஜா" , இது "ஜானி மேரா நாம்" அப்படிங்கற இந்திப்படம், தேவ் ஆனந்த் நடிச்சருந்த படம். தொடர்ந்து "நீதி"ங்கற படம். அந்தப்படம் ராஜேஷ் கண்ணா நடித்திருந்த "துஷ்மன்" அப்படிங்கற இந்திப்படம். அப்பா பண்ணின 40 படங்களும் ரீ மேக் படங்கள். அதனாலதான் அப்பாவுக்கு "ரீ மேக் கிங்"குன்னு பெயர்.
@@@
சிவாஜி சாரை வச்சு அப்பா தயாரிச்ச எல்லா படங்களுமே சக்சஸ்தான். அப்பா தயாரிச்சு சிவாஜி சார் நடிப்புல வெளிவந்த நல்லதொரு குடும்பம் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடையாத ஓரு படம். சிவாஜி சாரை பொறுத்தவரைக்கும், அப்பா வந்து ஓரு நண்பர் அதற்கப்புறம்தான் ஓரு தயாரிப்பாளர். அது மட்டுமில்லாமல் அப்பா சிவாஜி சாரோட தீவிரமான விசிறி. ஓரு நடிகரா சிவாஜி சாரை அவர் ரொம்பவும் வியந்து பார்க்க கூடியவர். தங்கை படத்தில ஆரம்பித்து, வருடத்துக்கு இரண்டு படம் அப்பா தயாரிப்புல சிவாஜி சார் நடிப்புல வெளி வருகிற மாதிரி இருந்தது.
@@@
ஜனவரி 26 அப்பாவோட திருமண நாள் மற்றும் அவருக்கு அதிர்ஷ்ட நாளும் கூட. அதனால அப்பா மற்றும் சிவாஜி சார் காம்பினேஷன்ல கண்டிப்பா ஜனவரி 26ம் தேதி ஓரு படம் வெளி வருகிற மாதிரி அப்பா பிளான் பண்ணி அதற்கு ஏத்த மாதிரி படப்படிப்புக்கு போவாரு.
@@@

அப்பாவோட தயாரிப்பால ஓரு ஓழுங்கு இருக்கும். ஏன்னா அவர் எந்த ஓரு விசயத்தையும் சரியாக திட்டமிட்டு செய்யக்கூடியவர். தன்னுடைய வாழ்க்கையை ஓரு புரொடக்ஷன் மேனேஜராக துவக்கினதால அவருக்கு அந்த திட்டமிடுதல் ரொம்ப கை கொடுத்ததுன்னு சொல்லனும். நீங்க சினிமா இண்டஸ்ட்ரியில மிகப்பெரிய வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களான திரு ராமா நாயுடு, திரு பூர்ண சந்திர ராவ் இவங்கள்லாமே முதல்ல புரொடக்ஷன் மேனேஜரா இருந்து அதற்கப்புறமா தயாரிப்பாளரா ஆனவங்க.
@@@

அப்பாவை பொறுத்த வரைக்கும் முதல்ல புரொடக்ஷன் மேனேஜரா இருந்ததால திட்டமிடுதலும், பின்னாளில் அவரே ஓரு நடிகராக வந்ததால் நடிகர்களோட தேவைகள் மற்றும் குணாதிசயங்களை கணிக்ககூடிய திறனும் கை கூடி வந்ததால் அவரால் ஓரு சிறப்பான தயாரிப்பாளரா இருக்க முடிந்ததுன்னு நான் நினைக்கிறேன். அது போக அவரோட திடமான நம்பிக்கை, அதாவது, இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அப்படின்னு அவர் நம்பி இறங்கி வெற்றி கண்டவர்.
@@@ 
அவர் ரீமேக்தான் பண்ணனும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருந்திருக்கிறார். இங்கிருந்து கிளம்பி நேராக பாம்பே போவார். அங்க ஓரு டாக்ஸி ஓன்றை வாடகைக்கு எடுத்துட்டு அந்த டாக்ஸி டிரைவர்கிட்ட அப்ப அங்க பிரபலமா இருக்கிற படம் என்னன்னு கேட்டு அதுக்கு இரண்டு டிக்கெட் வாங்கி படம் பார்ப்பார். ஓரு வேளை படம் பிடித்திருந்தால், மீண்டும் இரவுக்காட்சிக்கு டிக்கெட் வாங்கி இரண்டு காட்சிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை ஓப்பிட்டு பார்த்து. அது சரியாக வரும்னு நினைத்தால், மறுநாள் அந்த படத்தோட தயாரிப்பாளரை சந்தித்து, அந்த படத்தோட உரிமையை வாங்கிட்டு வந்துருவாரு. இங்க வந்ததும் அந்தக்கதையை தமிழுக்கு ஏத்த மாதிரி படமாக்கறதுக்கு தேவையான விசயங்கள் குறித்து அவர் டீமோட பேசுவாரு. அவருக்கு ஏ.எல். நாராயணன் , பில்லா கிருஷ்ணமூர்த்தி போன்ற அற்புதமான மனிதர்களை கொண்ட டீம் இருந்தது. மனோரமா அம்மா வந்து கண்டிப்பா எங்க கம்பெனி படங்கள்ல ஓரு ரோல் பண்ணுவாங்க. அவங்களுக்கான காமெடி ரோலை அந்த திரைக்கதைக்குள்ள கொண்டு வர்றதுல ஏ. எல். நாராயணன் ரொம்ப திறமையானவர். அப்பாவை பொறுத்தவரைக்கும் அவர் சொன்ன சொல் தவறாதவர். யாருக்கும் கெடுதல் பண்ணாதவர் அப்படின்னு சொல்லணும். அது மட்டுமில்லாம இண்டஸ்ட்ரில இன்று வரைக்கும் யாரும் அவரை பத்தி வருத்தப்படும்படியாக எதுவும் சொன்னதில்லை. அதனாலதான் அவரால ஓரு சக்சஸ்ஃபுல் தயாரிப்பாளரா இருக்க முடிந்தது.
@@@
அப்பாவுக்கு ரோல் மாடலாக இருந்தவர் யார்?
நடிகர் என்ற விசயத்தில அப்பாவுக்கு ரோல் மாடல் சிவாஜி சார், திரைப்பட துறையில வழிகாட்டி என்றால் அது ஜெமினி கணேசன், தயாரிப்பு விசயத்துல சின்னப்பா தேவர்தான் அப்பாவுக்கு ரோல்மாடல். சின்னப்பா தேவரை பத்தி என்கிட்ட நிறைய பேசியிருக்காரு. சின்னப்பா தேவர்தான் சிறந்த தயாரிப்பாளர்ன்னும், அவர் கொடுத்த வாக்கை காப்பாத்துவார், சொன்ன சொல் தவற மாட்டார், அவரைத்தான் நான் இன்றளவும் ஃபாலோ பண்றன் அப்படின்னும் அப்பா அடிக்கடி சொல்வார்.
@@@
எங்க அப்பா வந்து எங்களை குழந்தைகளா இருக்கும் போது எந்த விதத்திலயும் சினிமாவுல ஈடுபடுத்தக்கூடாது அப்படிங்கறதுல ரொம்ப கண்டிப்பா இருந்தாரு. படத்தோட பூஜை அன்னிக்கு நான், என்னோட இரண்டு சகோதரிகள் எல்லாரும் ஓரு காரில் போவோம். என் சகோதரி சுஜாதா கேமராவை இயக்கி வைப்பார். இன்னோரு சகோதரி வந்திருக்கும் நபர்களுக்கு மலர் கொத்து வழங்குவார். பூஜை முடிந்ததும் மறுபடியும் காரில் ஏறி வீட்டிற்கு திரும்பி விடுவோம். அதனால சூட்டிங் ஸ்பாட் போயி பார்த்த அனுபவம் என்பது ரொம்ப குறைவு. ஓரு சில சமயம் லீவு நாட்கள்ல அம்மா கூட ஹைதராபாத் மாதிரியான இடங்களுக்கு போய் மூன்று நாட்கள் தங்கி சூட்டிங் பார்த்த அனுபவம்தான் அதிகபட்சம். எங்க படிப்பு கெட்டு போகக்கூடாது என்பதுல எங்க அப்பா ரொம்ப அக்கறையாக இருந்ததே காரணம்.
@@@
நீங்கள் முழுமையாக திரைப்பட தயாரிப்பு ஆரம்பித்தது எப்போது?
நானும் அப்பாவும் சேர்ந்து சுரேஷ் சினி ஆர்ட்ஸ் அப்படின்னு ஓரு கம்பெனி ஆரம்பித்தோம்.அதுல இருந்துதான் என்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்து என்று சொல்ல வேண்டும்.
@@@
அப்பதான் பில்லா படம் ஆரம்பித்தோம். அப்ப தயாரிக்கப்பட்ட படம்தான் வாழ்வே மாயம்.
எங்களுக்கு ஓரு அவுட்டோர் யூனிட் இருந்ததுசுஜாதா சினி ஆர்ட்ஸ்ன்னு. ஆனந்த் சினி சர்வீஸ்க்கு அப்புறம் இரண்டாவது பெரிய அவுட்டோர் யூனிட் எங்களோடதுதான். அதுலதான் நான் பணியாற்றிக்கிட்டு இருந்தேன். அது சினிமா மாதிரி இல்லாம ஓரு பிஸினஸ் மாதிரி இருந்ததால  அதத்தான் 100 சதவீதம் பார்த்துகிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் விடுதலை படம் எடுத்துகிட்டு இருந்தப்ப சூட்டிங்காக லண்டன் போகவேண்டிய இருந்ததால என்னோட இங்கிலீஷ் உதவியாக இருக்கும் அப்படிங்கறதால என்னையும் அந்த யூனிட்ல சேர்த்துகிட்டார். அதுல இருந்தே நான் முழுக்க முழுக்க சினிமா தயாரிப்புல ஈடுபட ஆரம்பிச்சுட்டேன்.
பில்லாங்கற படம்தான் ரஜினிகாந்தோடு நாங்க இணைந்த முதல் படம். அந்த சமயத்துல டான் அமிதாப் நடிச்ச இந்திப்படம். சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப்படத்தோட ரீமேக்தான்தான் பில்லா. பில்லாவோட வெற்றிதான் ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கான முதல் படியா அமைஞ்சதுன்னு சொல்லலாம்.
பில்லா பேரை ஏன் வச்சாங்க அப்படின்னா, அந்த நேரத்துல பில்லா, ரங்கா அப்படிங்கற இரண்டு கொலைக்குற்றவாளிகள் பற்றி அடிக்கடி பேசப்பட்டுகிட்டு இருந்ததாலயும், இந்த படத்துல ரஜினியோட கேரக்டர் ஓருவித நெகட்டிவ் கேரக்டர் அப்படிங்கறதாலயும் அந்தப்பேரை வச்சாங்க. அந்தப்படத்தை தமிழ்ல மட்டும்தான் நாங்க பண்ணினோம். மற்றபடி தெலுங்குலயும், மலையாளத்துலயும் பண்ணாங்க. ஆனா தமிழ்ல கிடைத்த அந்த வெற்றி மற்ற மொழிகள்ல கிடைக்கல. தமிழ்ல கிடைத்த வெற்றிக்கு ரஜினி சாரோட கிரேட்நெஸ்தான் காரணம்னு சொல்லனும்.
@@@
விடுதலை படத்தில இருந்துதான் நான் ஆன் ஃபீல்டுல தயாரிப்பு விசயங்களை கவனிக்க ஆரம்பிச்சேன். லண்டன்ல கிட்டத்தட்ட ரொம்ப பெரிய ஷெட்யூல்னு சொல்லனும். ரஜினி சார். விஷ்னுவர்த்தன் சார், விஜயகுமார் சார்,மாதவி மேடம், சிவாஜி சார்தான் அம்ஜத்கான் பண்ண ரோலை தமிழ்ல பண்ணார், அப்புறம் இப்ப அஜீத் சாரோட மனைவி சாலினி பேபி ஆர்டிஸ்ட்டா அதுல நடிச்சிருந்தாங்க. அந்தப்படத்துல இருந்து எங்க நிறுவனம் தயாரிச்ச எல்லா படத்துலயும் நான் பணியாற்ற ஆரம்பித்தேன்.
கமல் சாரை வச்சு 4 படங்கள் பண்ணினோம். அதுல சூப்பர் டூப்பர் ஹிட் அப்படின்னா வாழ்வே மாயம் படத்தை சொல்லனும். தெலுங்குல நாகேஸ்வரராவ் நடித்த படத்தோட ரீமேக்தான் வாழ்வே மாயம். கமல் சார், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடிச்சருந்தாங்க. மியூசிக்கலி அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட். கங்கை அமரன் சார் மியூசிக். அதுதான் கமல் சாரோட நாங்க பண்ண முதல் படம். அதுக்கப்புறம் சவால் அப்படின்னு ஓரு படம் பண்ணோம். அதுவும் ஹிந்தி ரீமேக்தான்.அதுக்கு அடுத்து சட்டம் அதுவும் ஹிட்டான படம்தான். கமல் சாரோட சரத்பாபு நடித்திருந்த படம் அது. தோஸ்தானா அப்படிங்கற ஹிந்திப்படத்தோட ரீமேக்தான் அது. அதுக்கப்புறம் பண்ணின படம் மங்கம்மா சபதம். அது மிகப்பெரிய வெற்றி பெறலை.
ரஜினி சார்னு பார்த்தாக்க, பில்லா படத்தோட ஆரம்பித்தோம். அதுக்கப்புறம் தீ அப்படின்னு ஓரு படம் பண்ணினோம். அந்தப்படத்துல நான் வேலை செஞ்சேன் . அந்த டைம்ல ஸ்ரீலங்காவில சூட் பண்ணியிருந்தோம். அதற்கப்புறம் பண்ணின படம் விடுதலை.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நீங்களும் இணைந்து மலையாளப் படம் தயாரித்தது பற்றி...!
மோகன்லால் எனது தங்கையை திருமணம் செய்த பிறகுதான் நான் எனது மலையாள படத்தயாரிப்பை ஆரம்பித்தேன்னு சொல்லணும். 1988 ல அவங்க கல்யாணம் நடந்தது. அதற்கப்புறம் என்னோட மகள் பெயரில் நான் ஓரு கம்பெனி ஆரம்பிச்சேன், சித்தாரா கம்பைன்ஸ் அப்படின்னு. உள்ளடக்கம் அப்படின்கறது என்னோட முதல் மலையாளப்படம். அதைத்தொடர்ந்து 3 படங்கள் மோகன்லாலோடயும், ஓரு படம் மம்மூட்டியோடயும் பண்ணினேன். இந்த நாலு படமும் என்னோட சொந்த பேனர் சித்தாரா கம்பைன்ஸ்ல பண்ணின படங்கள். அதற்கப்புறம், 7 படங்கள் மோகன்லால் பேனரான பிரணவம் ஆர்ட்ஸ் தயாரித்தது. அந்தப்படங்களோட அத்தனை தயாரிப்பு வேலைகளையும் நான் தான் பார்த்துகிட்டேன்.
அதுல மிகப்பெரிய படம் தமிழ்ல சிறைச்சாலைன்னு வந்த படம் . மலையாளத்துல அதன் பெயர் காலா பாணி. நடிகர்கள்லன்னு பார்த்தா மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ்புரி போன்று இந்தியாவின் பல மாநிலங்கள்ல இருந்தும் நடிகர்கள் பங்களித்த படம் அது. மேலும், அந்தமான் சிறையில் எல்லாம் போயி சூட் பண்ணினோம். சில காட்சிகள்ல அதை செட் போட்டு எடுத்தோம். அது போல அந்தக்கால கார், அந்தக்கால உடைகள் அப்படின்னு பார்த்து பார்த்து உருவாக்கின மிகப்பெரிய படம் அது. அது சாபு சிரில், சந்தோஷ் சிவன் இரண்டு பேருக்கு மட்டுமில்லாம மொத்தம் ஆறு தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்ற மிகப்பெரிய திரைப்படம் அது. அது மோகன்லாலோட பிரணவம் ஆர்ட்ஸ் மற்றும் குட் நைட் மோகன் அப்படிங்கறவரோட இணைந்து தயாரிக்கப்பட்ட படம். படத்தோட முழு தயாரிப்பு வேலைகளையும் நான்தான் பார்த்துகிட்டேன்.
@@@

திரு.கே.பாலாஜி, நடித்து தயாரித்த திரைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?

அப்பா நடித்த படங்கள்ல அவருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் அப்படின்னு சொன்னா, எனக்கு தெரிஞ்சு, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, போலீஸ் காரண் மகள் இவைதான். அவர் திரும்ப திரும்ப போட்டு பார்த்த படங்கள் இவை. அது போக அந்த படங்கள் டி வி யில் வந்தா கூட சுவாரசியத்தோட பார்த்த படங்கள் அவை.

அவர் தயாரித்த படங்கள் அனைத்தும் ரீமேக் படங்களா இருந்தாலும் கூட எல்லா படத்தையும் புதிய படம் பண்ற ஈடுபாட்டோடதான் அவர் பண்ணினார். அதனால அனைத்து படங்களுமே அவருக்கு ஸ்பெஷல்தான்.

அவர் தயாரித்த படங்கள்ல எனக்கு பிடித்த படங்கள் அப்படின்னு சொன்னா, ராஜா, அந்தப்படம் ரொம்பவும் எண்டர்டெயினிங் படமா அந்தக்காலத்துல எனக்கு தோணுச்சு. நான் நிறைய முறை பார்த்த படம் அது. அதற்கப்புறம், பில்லா, வாழ்வே மாயம் மற்றும் விதி. இந்தப்படங்கள் எனக்கு மிகவும் படித்த படங்கள்.
@@@

அப்பா நடிக்கும் போது அவரோட கேரக்டர் அப்படின்னு பார்த்தா முதல்ல செகண்ட் ஹீரோவா பண்ணினாரு, அப்புறம் ஓரு சில படங்கள்ல ஹீரோவாகவும் நடிச்சாரு. ஆனா, அவர் வில்லனா பண்ண ஆரம்பித்த பிறகுதான் அவருக்கு நிறைய நிறைவான கேரக்டர்கள் வந்ததா அவர் சொல்லி கேட்டிருக்கேன். குறிப்பா வசந்த மாளிகை, அப்புறம் எங்கிருந்தோ வந்தாள். இந்த திரைப்படங்கள்ல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினா கூட ப்ரிவ்யூ பார்த்துட்டு வரும்போது எல்லாரும் ஓரு வெறுப்போட பார்ப்பாங்களாம். அப்பதான் அப்பாவுக்கு ஓரு நிறைவு வருமாம். நாம வில்லனா சரியா பண்ணியிருக்கோம், அது இவங்க மத்தியில தாக்கத்த ஏற்படுத்தியிருக்கு அப்படின்னு.

அவருக்கு போலீஸ் வேடங்கள் நன்றாக இருந்தது. குறிப்பாக சொல்லணும்னா, பில்லால அவர் பண்ண  வேடம் அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்தது. அப்புறம் படங்கள் தயாரிக்கிறதுல முழுசா ஈடுபடும் போது ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி அப்படி சும்மா வந்துட்டு போற மாதிரி யான சின்ன சின்ன ரோல்கள் பண்ணினாரு.
@@@

அப்பா வந்து ரொம்ப விரும்பி ஆங்கில படங்கள் பார்ப்பார்னு சொல்ல முடியாது. ஓரு சில ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பார். ஆனா ஓரு படம் நாங்க இம்போர்ட் பண்ணோம். அப்பா எங்கயோ ஓரு வெளிநாட்டுக்கு போயிருந்த போது பார்த்த படம். படத்தோட பேரு த காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி. அந்தப்படம் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போயி அந்தப்படத்தோட ரைட்ஸை பிரான்ஸ் போயி வாங்கிட்டு வந்து இங்க ரிலீஸ் பண்ணினோம். அது ரொம்ப நல்ல சக்சஸ் அது. ஓரு ஆப்பிரிக்கன் டெஸர்ட்டில் நடக்கும் கதை.
@@@

அப்பாவோட காலத்துல திருலோகச்சந்தர், சி.வி. ராஜேந்தரன் போன்ற இயக்குநர்களோட பணியாற்றியிருக்காரு. அவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் அப்படின்னு பார்த்தாக்க பில்லா கிருஷ்ணமூர்த்தி, அப்புறம் விஜயன் சாரோட மகன் சுந்தர் கே விஜயன் இவங்களை சொல்லலாம்.
@@@

உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர்கள் பற்றி?
நானும் பல பேரோட பணியாற்றி இருந்தாலும், நான் அறிமுகப்படுத்தியது கீரிடம் அப்படிங்கற படத்துல ஏ எல் விஜய் யை அறிமுகம் பண்ணினேன். அந்தப்படத்துக்கு அப்புறம்தான் பொய் சொல்லப் போறோம் அப்படின்னு ஓரு படம் பண்ணினாரு. அடுத்து மதராச பட்டிணம் பண்ணினாரு. அப்புறம் விக்ரமை வச்சு தெய்வத்திருமகள் பண்ணினாரு. இன்றைக்கு மிகப்பெரிய இயக்குநரா வளர்ந்து இருக்கிற விஜய் கூட ஓரு படம் பண்றதுக்கு பேசிக்கிட்டு இருக்கோம்.

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் வேலை பற்றி.....
நான் ஓரு மூன்று வருடம் படத்தயாரிப்பு வேலைகளை நிறுத்தி வச்சிருந்தேன்.  அப்ப என்னோட நண்பர் சுரேஷ் மேனன் ஹிந்தி படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பெரிய கம்பெனிகளான யு டிவி போன்ற கம்பெனிகளுக்கு தயாரித்து தரும் தனக்கு உதவி செய்ய இன்னுமொரு எங்கள் நண்பரான ஜார்ஜ் அப்படிங்கறவரையும், என்னையும் கேட்டார். அப்ப அவர் பிரியதர்ஷன் டைரக்ஷன்ல ஓரு படம் பண்ணிக்கிட்டு இருந்தாரு.
ரேவதி டைரக்ஷன்ல ஃபிர் மிலேங்கே அப்படிங்கற படம் பண்ணோம், அபிஷேக் பச்சன், சல்மான்கான் நடித்த படம் அது. பிரியதர்ஷன் கூட பண்ணின படம் மாலா மால் வீக்லி, சுப் சுப்கே. கரினா கபூர்,ஷாகித் கபூர் நடித்த திரைப்படம் அது.
@@@


அதற்கப்புறம்தான், நானும், ஜார்ஜீம், ஏன் தமிழ்ல இந்த மாதிரியான எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன். லைன் புரொடக்ஷன், அப்படிங்கற விசயத்துக்காக நாம ஓரு கம்பெனி ஆரம்பிக்க கூடாதுன்னு பிளான் பண்ணி வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் அப்படிங்கற பேர்ல, ஆரம்பித்தோம். நாங்க பண்ணின முதல் படம் யாவரும் நலம். அதற்கப்புறம் சின்ன ஓரு படம் பண்ணினோம் மதுரை சம்பவம் அப்படின்னு, என்.டி,டிவிக்காக. இப்போ இந்துஜா குரூப்ஸீக்காக பில்லா 2 வை எக்ஸிக்யூட்டிவ் புரொடக்ஷன் பண்றோம். அது எல்லா வேலையும் முடிஞ்சு இந்த சம்மர்ல ரிலீஸ் ஆகலாம்.

இந்த வேலையை பல விதமான அக்ரிமெண்ட் அடிப்படையில் பண்ணலாம். ரிஸ்க் ஃப்ரீயாகவும் பண்ணலாம். ரிஸ்க் எடுத்தும் பண்ணலாம்.

உங்கள் தந்தை கே.பாலாஜி உங்களுக்கு கொடுத்த சிறந்த அட்வைஸ்...
அப்பா எனக்கு சொன்ன அறிவுரை அப்படின்னு கேட்டா, நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கணும். யாருக்கு என்ன வார்த்தை கொடுத்தாலும், அதை காப்பாத்தணும். இவைதான். அப்பாவோட ஆசிர்வாதத்தால நான் அவரோட பாதையிலயே நல்லா இருக்கேன்.

அப்பாவை பொறுத்த வரைக்கும் அவருக்குன்னு விநியோகஸ்தர்கள் இருந்தாங்க. அதனால அவர் பெரிய ரிஸ்க் அப்படின்னு எதுவும் எடுக்கலை. சரியா பிளான் பண்ணி எல்லா படங்களையும் பண்ணதால அவர் தோல்வி அப்படிங்களதை பார்க்கலை.

அப்பாவுக்கு இண்டஸ்ட்ரில நண்பர் அப்படின்னு சொன்னா சிவாஜி சார்தான், என்னை பொறுத்த வரைக்கும் அஜித் சார் கூட இரண்டாவது படம் பண்ணிகிட்டு இருக்கேன். எனக்கு அவர் ஓரு அற்புதமான மனிதர்.

பில்லா-2 படம் இப்ப பண்ணிகிட்டு இருக்கோம். பில்லா-2 அப்படிங்கறது பில்லாவுக்கு முன்னால மாதிரி யோசிச்சு பண்ணிக்கிட்டிருக்கோம். இத பல லொகேஷன்ல சூட் பண்ணியிருக்கோம். முதல்ல ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில செட் போட்டு பண்ணினோம். அதற்கப்புறம் விசாகப்பட்டினத்தில  சூட் பண்ணினோம். அடுத்து கோவாவில் சூட் பண்ணினோம், அப்புறம் வெளிநாடு போறதுன்னு முடிவு பண்ணி, ஜார்ஜியா அப்படிங்கற நாட்டோட தலைநகரம் திப்லிசி அப்படிங்கற ஊர்ல 20 நாட்கள் வரைக்கும் சூட் பண்ணோம். கதையில கேரக்டர் வெளிநாடு போற மாதிரியான அம்சம் இருக்கறதாலயும், ஜார்ஜியா கவர்மெண்ட்ல இருந்து எங்களுக்கு நல்ல ஓத்துழைப்பு கிடைச்சதாலயும் அங்க சூட் பண்ணினோம். அப்ப குளிர்காலம், அதுவும் -3 டிகிரியெல்லாம் சில நாள் குளிர் இருந்தது. ஓரு அற்புதமான அனுபவம் அது.

அஜித் சாரை பொறுத்த வரைக்கும் அவரை வச்சு முதல்ல நான் கிரீடம் பண்றதக்கு அவரை பார்க்க போன போது அவர் முதல்ல பில்லாவை பண்ணலாம் அப்படின்னுதான் சொன்னார். நானும் அப்பாகிட்ட வந்து சொன்னேன். அப்பா நம்ப ரஜினி சாரை வச்சு சக்சஸ் கொடுத்த படம். அந்தப்படத்தை திரும்ப நாம பண்றது நல்லா இருக்காது. நீ பண்றதா இருந்தா பண்ணிக்கோ, ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்லை அப்படின்னுட்டாரு. அப்புறம் அஜித் சார்கிட்ட போயி சொல்லி அதற்கப்புறம்தான் கிரீடம் படம் பண்ணினேன். கொஞ்ச நாளுக்கப்புறம் அஜித் சார் என்கிட்ட பில்லா வை நான் வேற ஓரு தயாரிப்பாளருக்கு பண்ணலாமா, எல் சுரேஷ் வச்சு பண்ணலாம்னு இருக்கேன், அப்பாகிட் ட கேட்டு சொல்லுங்க அப்படின்னார். அப்பா எல் சுரேஷ் பண்ணட்டும் எனக்கு ஓண்ணும் ஆட்சேபனை இல்லைன்னு சொன்னதும் பில்லா தயாராகி வந்தது. இப்ப அஜீத் சாரை மீட் பண்ணும் போது நாம பில்லா வை மிஸ் பண்ணிட்டோம். அதனால பில்லா-2 அப்படின்னு ஓரு படம் பண்ணலாம் அப்படின்னு சொல்லவும் இந்துஜா பிசினஸ் குரூப்பையும் சேர்த்துகிட்டு இப்ப பண்ணிகிட்டு இருக்கோம். படத்துல கிட்டத்தட்ட 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது.

படம் முழுக்க முழுக்க அஜீத் படம். ரகுமான் இருக்காரு. ஹிந்தியில இருந்து 3 பேரை தமிழுக்கு அறிமுகம் பண்றோம். மனோஜ் கே ஜெயன் நடிச்சிருக்காரு. புருனா அப்துல்லான்னு ஓரு வெளிநாட்டு லேடி நடிச்சிருக்காங்க. அவங்களை பிரேசில் மற்றும் சிரியா கலப்பின மங்கைன்னு சொல்லணும்.
அப்பாவோட நெருங்கிய நண்பர்களான ஏவிஎம் சரவணன் சார், மற்றும் திரு டி ராமா நாயுடு இவங்க ஓருத்தர ஓருத்தர் பாஸ் அப்படின்னு கூப்பிடுவாங்க
நான் வீட்ல அப்பாவை டாடி அப்படின்னுதான் கூப்பிடுவேன், அதே நேரம் ஆபிஸ்ல பாஸ் அப்படின்னுதான் சொல்லுவேன். அந்த பாஸ்ங்கற வார்த்தை ஓரு அடையாளம் மாதிரி ஆகிப்போச்சு.
@@@

TANKER என்ற அமைப்பு நிறுவி கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்து வருகிறீர்கள்..அது பற்றி..
அப்பாவுக்கு முதன் முதல்ல கிட்னி பிராப்ளம் வந்தபோது தான் அதனோட தீவிரம் எனக்கு தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை செலவு ரொம்ப அதிகம். அப்பதான் அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணிகிட்டு இருந்க டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம்தான் இந்த நோயாளிகளுக்கு ஹெல்ப் பண்றதாக்காக ஓரு அமைப்பை துவங்கலாம் அப்படின்னு சொன்னார். அவர் கேட்டுகிட்டதால நான் அதுல பங்கெடுத்துகிட்டேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் டேங்கர் அப்படிங்கற அமைப்பு. இன்றைக்கு நிறைய பேருக்கு உதவி புரியும் அமைப்பா மாறி எல்லா இடத்திலயும் சேவை பண்ணிகிட்டு இருக்கு. நடிகர் சூர்யா இப்ப இந்த அமைப்புக்கு தூதுவராக இருந்து நிதி திரட்டியும், நிதி கொடுத்தும், நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சு கொடுத்தும் உதவி பண்ணிகிட்டு இருக்காரு.
@@@

வண்ணங்கள் பற்றி உங்கள் எண்ணங்கள்
ரெட் அப்படிங்கறது என்னுடைய வாழ்க்கையில ஓரு முக்கியமான கலர். எங்க அப்பாவுக்கும் பிடித்தமான கலர் அது. எங்களுடைய ஸ்கூல் நாட்கள்ல நாங்க வெளியில போறது எல்லாமே ஓரு ரெட் கலர் அம்பாஸிடர்லதான். அதுதான் அப்பாவோட முதல் கார். இன்றைக்கும் அந்தக்காரை நான் ரெடி பண்ணி வச்சிருக்கேன். அவர் புரொடியூஸ் பண்ண எல்லா படத்துலயும் அந்த வண்டி நடிச்சிருக்கு. என்னைப்பொறுத்த வரைக்கும் நான் லைசென்ஸ் வாங்கின உடனே அப்பா எனக்கு கொடுத்தது ஓரு ரெட் கலர் ஸ்போர்ட்ஸ் டாட்ஸன் கார். என் குடும்பத்தில உள்ள ஓவ்வொருத்தருக்கும் பிடித்த கலரும் இதுதான். அதனாலதான் ஏசியன் பெயிண்ட்ஸ்ல இத பெயிண்ட் பண்ண சொன்னோம்.
@@@

இண்டீரியர் டெகரேஷன் பற்றி உங்கள் கருத்து.....
இண்டீரியர் பொறுத்த அளவில எனக்கு நிறைய  இடம் தேவை. இடத்தை அடைக்கறது எனக்கு பிடிக்காது. அதே மாதிரி எனக்கு ஃபர்னிச்சர்களை பொறுத்த வரையில் எப்போதும் ஓரே மாதிரியான மதிப்பை உடைய ஃபர்னிச்சர்கள்தான் என்னுடைய சாய்ஸ். கலர்களை பொறுத்த வரையில் ஹாஃப் ஓயிட் போன்ற நிறங்களும், ஓரு பிரேக் கிடைக்கணுமனா ரெட் போன்ற நிறங்கள்தான் என் சாய்ஸ்.
@@@

உங்கள் மனைவி உஷா சிறந்த மோகினி ஆட்டக்கலைஞர். அவரது நடன ஈடுபாடு பற்றி.....
என்னுடைய மனைவி பெயர் உஷா. அவர் கேரளாவை சேர்ந்தவர். சிறந்த மோகினி ஆட்ட கலைஞர். பள்ளி, கல்லூரி காலங்களில் பல பரிசுகளை அவங்களோட நடனத்திற்கு வாங்கி இருக்காங்க. கேரளாவில் மிக முக்கிய பட்டமான கலா திலகம் பட்டத்தை வாங்கியிருக்காங்க. கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் குழந்தைகளை கவனிக்கறதுல கவனம் செலுத்தியதால் நடனத்தை விட்டுட்டாங்க. இப்ப 23 வருடங்களுக்கு பிறகு உடல் எடையை குறைச்சு, அதற்குரிய உடல் திறனை வளர்த்துக்கொண்டு மீண்டும் கேரளா மற்றும் தமிழகத்தின் மிக முக்கியமான மேடைகளில் நடன நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
@ @@@@@

உங்கள் அப்பா மாதிரி நீங்களும் நடித்திருக்கிறீர்களா?
நான் நடிச்சிருக்கேன். சுஹாசினி இயக்கிய ஓரு தொலைக்காட்சி சீரியல் கணேஷ் வசந்த்ல ஓரு நெகட்டிவ் கேரக்டர் பண்ண சொன்னாங்க.முதல்ல மறுத்தேன் அப்புறம் என்னை ஒத்துக்க வச்சுட்டாங்க. அது மட்டும்தான் நான் நடித்தது. அதற்கப்புறம் நான் நடிப்பு பக்கம் போகலை.

தமிழ் சினிமாவுல நிறைய திறமைசாலிகள் வர்றாங்க. நான் இயக்குநர் விஜய் கூட வேலை செய்ததால அவரை சொல்ல முடியும். அப்புறம், விக்ரம் , யாவரும் நலம் இயக்குநர். நான் பார்த்ததில் மிகச்சிறந்த கதை சொல்லி அவர்.இன்னும் நிறைய நல்ல படங்கள் வருது அங்காடி தெரு மாதிரியான படங்களை உதாரணமாக சொல்லலாம்.
@@@

திரைப்படத்துறை தவிர உங்கள் விருப்பம்...!
எனக்கு போட்போகிராபிதான் பிடித்தமான விசயம். ஆனால் கல்லூரி நாட்களுக்கு பிறகுதான் என்னோட சீரியஸ் போட்டோகிராபியை ஆரம்பிச்சேன்.என்னோட முதல் கேமரா லைகா கேமரா. அதுல நிறைய படங்கள்
நல்ல படங்கள் எடுத்திருக்கேன். அதையெல்லாம் நான் இன்னும் தொகுக்கலை. சினிமா பார்க்கும்போது கூட போட்டோகிராபிதான் நான் கவனிக்கற விசயமா இருக்கும். பாலு மகேந்திரா போன்ற மிகத்திறமையான கேமராமேன்களோட ஓளிப்பதிவை பார்த்து பிரம்மிச்சு போயிருக்கேன். அதே போல நான் உடன் பணியாற்றிய கேமரா மேன்கள் சந்தோஷ் சிவன், ரவி கே சந்திரன் இவங்களோட  ஓர்க்கும் எனக்கு பிடிக்கும்.

என்னுடைய வீட்லயே நான் எடுத்த சில கருப்பு வெள்ளை படங்களை பிரேம் பண்ணி வச்சிருக்கேன். மணிரத்னம் இருவர் அப்படிங்கற படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால, என்னை கூப்பிட்டு நீ பிளாக் அண்ட் ஓயிட் படங்கள் நல்லா எடுப்பேன்னு சந்தோஷ் சிவன் சொன்னார். எனக்காக அந்தக்கால கட்டத்தை ஓட்டிய சில போட்டோக்களை எடுத்து தர முடியுமா? அப்படின்னு கேட்டப்ப , எனக்கு ஐஸ்வர்யா ராய், தபு, மோகன்லால் இவங்களை எல்லாம் போட்டோ எடுக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதுல ஓரு டிபரண்டான ஐஸ்வர்யா ராய், முற்றிலும் அந்தக்கால இந்தியப்பெண்ணாக தபு அப்படின்னு நான் எடுத்த புகைப்படங்களை என் வீட்ல நான் மாட்டி வச்சிருக்கேன்.

இப்ப கூட ஆப்பிரிக்க காடுகள்ல போயிக்கிட்டு இருக்கும்போது சிங்கம் ஓன்று காட்டெருமை மாதிரி மிருகத்தை அடிச்சத படம் எடுக்கற வாய்ப்பு கிடைத்தது. அது ஓரு நல்ல அனுபவமாக இருந்தது.@ @@@@@

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தாபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... பாயுமா.... மின்னும்மா...? பாயுமா.... மின்னும்மா...?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sujatha Krishna Reddy - chennai,இந்தியா
28 ஜூன், 2012 - 14:39 Report Abuse
 Sujatha Krishna Reddy Hi Suresh... Nice to read this article about two generations of your family in this industry.....Thanks to you for having shared your experience.... and I wish you all the best to continue in this industry....
Rate this:
chennaisiva - chennai,இந்தியா
27 மே, 2012 - 20:09 Report Abuse
 chennaisiva உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது திரு பாலாஜி அவர்கள் வாழ்க்கை தொகுப்பில் இருந்து மீண்டும் உறுதிபட்டிருக்கிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in