Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கொரோனாவால் கலங்கி போன தமிழ் சினிமா - 2021 அரையாண்டு ஓர் பார்வை

01 ஜூலை, 2021 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-2021-Half-yearly-round-up

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆண்டின் துவக்கமே 50 சதவீத இருக்கைகளுடன் ஆரம்பமாகிய வரலாறு இதற்கு முன் நிகழ்ந்திருக்காது. கொரோனா முதல் அலையின் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டது. அந்த அனுமதி 2021ம் ஆண்டிலும் தொடர்ந்தது.

தொடரும் கொரோனா சோகம்

தமிழக அரசு ஜனவரி 10 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது. ஆனால், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் 50 சதவீத இருக்கைகளே தொடர்ந்தது. அதன் பின் பிப்ரவரி 1ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய சுமார் 11 மாத காலத்தில் 8 மாதங்கள் தியேட்டர்களே இல்லாமலும் மூன்று மாத காலங்களில் 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் செயல்பட்டன.




பிப்ரவரி 1 முதல் வழங்கப்பட்ட 100 சதவீத அனுமதியும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டன தியேட்டர்கள். அடுத்து ஏப்ரல் 26 முதல் தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மூடியே உள்ளன.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகின. அந்த நான்கு மாதங்களில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் சில மட்டுமே வெளியாகின.

மக்களை தியேட்டருக்கு வர வைத்த மாஸ்டர்

விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன், சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், விஷால் நடித்த சக்ரா, கார்த்தி நடித்த சுல்தான், தனுஷ் நடித்த கர்ணன் ஆகியவை மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள். இவற்றில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.




அதற்கடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களில், சிபிராஜ் நடித்த கபடதாரி, ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம், எஸ்ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, ராணா டகுபட்டி, விஷால் நடித்த காடன் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

வெளியீட்டிற்கு முன்பு கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறிய படங்கள் என்று சொல்லப்பட்ட “கேர் ஆப் காதல், சங்கத்தலைவன், அன்பிற்கினியாள், தேன்,” ஆகிய படங்களுக்கு விமர்சன ரீதியாக ஒரு வரவேற்பு கிடைத்தாலும் ரசிகர்களிடம் சிறிய அளவில் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

60ல் 3
2021 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவதற்கு முன்பு கடைசியாக, ஏப்ரல் 23ம் தேதி வரை சுமார் 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அந்த படங்களில் வசூல் ரீதியாக ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்த படங்கள் என மூன்றே மூன்று படங்களைத்தான் குறிப்பிட்டார்கள். 50 சதவீத இருக்கைகளிலும் அந்தப் படங்கள் குறிப்பிடும் அளவிற்கான லாபத்தைக் கொடுத்தது பெரிய விஷயம்தான்.

தேர்தலும், கொரோனா பயமும்

கொரானோ தொற்று பயம் ஒரு பக்கம், ஏப்ரல் மாதத் துவக்கத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் ஒரு பக்கம், அதற்காக மார்ச் மாதத்தில் நடந்த பிரச்சாரம், ஓடிடி தளங்களில் சில படங்களின் வெளியீடு என தியேட்டர்களுக்கு மக்கள் வரும் எண்ணிக்கை குறைவான அளவில்தான் இருந்தது.




அதி தீவிர சினிமா பார்க்கும் ரசிகர்கள் மட்டும்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் வந்தார்கள். அதில் கூட விஜய் நடித்த மாஸ்டர் படத்தைப் பார்க்க வந்த அளவிற்கு மற்ற படங்களுக்குக் கூட்டம் வரவில்லை. மாஸ்டர் படத்தையும் படம் தியேட்டர்களில் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அதன் காரணமாகவும் அந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் சில தியேட்டர்களில் ஓடிடி வெளியீட்டிற்குப் பின்பும் படத்தை திரையிட்டார்கள்.

தனுஷ் நடித்த கர்ணன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான இரண்டே வாரங்களில் தியேட்டர்களை முழுவதுமாக மூடியதால் இப்படத்திற்கான வசூல் தொகை குறைந்து போனது.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல வெளிவரும் படங்களைப் போல இந்த அரையாண்டிலும் வந்த சுவடே தெரியாமல் வந்து போன பல படங்கள் இருந்தன. சில படங்களுக்கான டிரைலர்கள், தகவல்கள் ஆகியவற்றை இப்போது வரை கூகுள் செய்தாலும் கிடைக்கவில்லை.

ஓடிடி வெளியீடு

கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஓடிடி நேரடி வெளியீடு புது வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலும் இருந்தது. மாதவன் நடித்த மாறா, ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் ஒரு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. பூமி படம் பற்றி கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்தன.




கவனம் ஈர்த்த டெடி, ஏலே, மண்டேலா
ஆனாலும், ஆர்யா நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி சிறுவர், சிறுமியர்களைக் கொஞ்சம் கவர்ந்தது. டிவியில் நேரடியாக வெளியான சமுத்திரக்கனி நடித்த ஏலே படமும், யோகி பாபு நடித்த மண்டேலா படமும் மாறுபட்ட படங்களாக அமைந்து ரசிக்க வைத்தன. அப்படங்கள் டிவியில் முதலில் வெளியானலும் உடனே ஓடிடி தளங்களிலும் வெளியாகி பலரையும் பார்க்க வைத்தது. அதற்கு அந்தப் படங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம் பெரிதும் உதவியாக இருந்தது.

ஏமாற்றிய ஜகமே தந்திரம்
த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு, ஜிவி பிரகாஷ்குமார் நடித்த வணக்கம்டா மாப்ளே ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அந்த ஏமாற்றத்திற்கு மேலும் பெரிய ஏமாற்றமாக தனுஷ் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் படம் அமைந்தது. தியேட்டர்களில் எதற்கு வெளியாகிறது என்று தெரியாமலேயே வெளியாகும் சில படங்களைப் போலவே ஓடிடி தளங்களிலும் சில படங்களை எதற்கு வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

2020ம் ஆண்டில் கொரோனா தொற்று முதல் அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பாக சுமார் மூன்று மாதங்களில் 50 படங்கள் வரை வெளியாகியிருந்தன. 2021ல் கொரானோ தொற்று இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பாக சுமார் 4 மாதங்களில் 60 படங்கள் வரை வெளியாகியுள்ளன. இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை.




100 ஆண்டில் முதல்முறை
இருப்பினும் 2021 அரையாண்டில் 50 சதவீத இருக்கை, 100 சதவீத இருக்கை, மீண்டும் 50 சதவீத இருக்கை, தியேட்டர்கள் மூடல் என தியேட்டர்களுடைய நிலை வெவ்வேறாக இருந்தது. 100 வருடத்திற்கும் மேலான தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என்பதை முதலிலேயே சொல்லியிருந்தோம்.

மீண்டும் எப்போது
மீண்டும் தியேட்டர்களை எப்போது திறக்க அனுமதி கொடுப்பார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஜுலை 15 முதலோ அல்லது ஆகஸ்ட் 1 முதலோ 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயம் தியேட்டர்களில் வெளியிட தள்ளி வைத்த சில முக்கிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.




வலிமை வர வைக்குமா
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மக்கள் மீண்டும் வரவழைக்க முன்னணி நடிகரின் படங்கள் தான் தேவை. அப்படி ஒரு படமாக அஜித் நடித்துள்ள வலிமை படம் மட்டுமே சீக்கிரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது மக்கள் வருவதற்குக் காரணமாக விஜய்யின் மாஸ்டர் இருந்தது போல, இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டால் வலிமை படம் மக்கள் வருவதற்குக் காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

பொழுதுபோக்கிற்கே மன அழுத்தம்
2021ன் இந்த அரையாண்டு காலத்தில் மிகவும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை பழைய நிலைக்கு நிலை நிறுத்த யார் முன் வரப் போகிறார்கள் என்பது பெரும் கேள்வி ?.

மக்களின் பொழுதுபோக்கிற்கு, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சினிமாவிற்கு முக்கிய இடமுண்டு. ஆனால், இப்போது அந்த பொழுதுபோக்கிற்கே ஒரு மன அழுத்தம் வந்துவிடும் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2021ன் இரண்டு மாதங்கள் : இயல்பு நிலைக்கு திரும்பியதா தமிழ் சினிமா2021ன் இரண்டு மாதங்கள் : இயல்பு ... விறுவிறுப்பாகும் ஓடிடி வெளியீடுகள்... விறுவிறுப்பாகும் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in