Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

விஜய் கூட ஒர்க் பண்ணணும்னு ஆசை! - நடன மாஸ்டர் பாபி பேட்டி

16 ஜன, 2015 - 11:38 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்த், விஜய்யில் இருந்து பரத் வரைக்கும் எல்லா ஹீரோக்களுக்குமே என்னோட ஒர்க் தெரியும். அதனால் என்னோட ஒர்க் தெரிஞ்ச விஜய் சாரே கூப்பிடுவாருன்னு நினைக்கிறேன். அவரோட படத்துல ஒர்க் பண்ணனுங்கிற ஆசை எனக்கு ரொம்பவே இருக்கு என்கிறார் நடன மாஸ்டர் பாபி. தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...


* உங்கள் என்ட்ரி பற்றி?


எங்க பேமிலியே சினிமா பேமிலிதான். எங்க அம்மா சில மாஸ்டர்களிடம் உதவியாளராக இருந்தவர். எங்க மாமா மகாலிங்கம் பைட் மாஸ்டராக இருந்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் நிறைய படங்களுக்கு சண்டை பயிற்சி கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆரை பெரிய வாத்தியார் என்றும், எங்க மாமாவை சின்ன வாத்தியார் என்றும் அப்போது அழைப்பார்களாம். எனக்கு பத்தாவது படித்தபோதே இந்த பீல்டுக்குள் வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் சின்னி பிரகாஷ் மாஸ்டரிடம் சேர்ந்தேன். அப்புறம் ராஜூசுந்தரம், பிரபுதேவா, பிருந்தா என பல முன்னணி நடன மாஸ்டர்களிடம் உதவியாளராக வேலை செய்தேன்.ஆக 10 வருடங்களாக உதவியாளராக வேலை செய்த பிறகே இப்போது நான் மாஸ்டராகியிருக்கிறேன்.


* உதவியாளராக இருந்தபோதே பாடல்களில் நடனமாடியிருக்கிறீர்களா?


ஆரம்பத்தில் நான் குரூப் டான்சராக ஆடியிருக்கிறேன். அதன்பிறகுதான் அசிஸ்டன்ட் ஆனேன். அதையடுத்தே மாஸ்டராகியிருக்கிறேன். சில பாடல்களில் ஷோலோவாக நடனமாட வாய்ப்பு கிடைத்தும் எனக்கு அப்போது அதில் ஆர்வம் இல்லாததால் ஆடவில்லை. ஆனால் ரஜினி தொடங்கி புதிதாக வந்துள்ள ஹீரோக்கள் வரைக்கும் பாபி மாஸ்டர் என்றால் நன்றாக தெரியும். என் திறமை தெரிந்த பலரும் என்னை எப்போது மாஸ்டராகப்போகிறீர்கள் என்று பல ஆண்டுகளாகவே கேட்டு வந்தனர். ஆனால் நாம் என்ட்ரியாவது நல்ல படமாக இருக்க வேண்டும். ஓரளவு தெரிந்த ஹீரோ படமாகவும் இருக்க வேண்டும் என்று சரியான தருணம் பார்த்து வந்தேன். அப்போதுதான் பரத் நடித்த கண்டேன் காதலை பட வாய்ப்பு முதன்முதலாக கிடைத்தது.


* மாஸ்டராகவும் வாய்ப்பு தேடி வந்தா? இல்லை முயற்சிக்கு பிறகு வந்ததா?


சேட்டை படத்தை இயக்கிய ஆர் கண்ணன் சில படங்களில் நான் உதவியாளராக பணியாற்றியபோது எனது நடனத்தைப்பார்த்து விட்டு நீங்களே மாஸ்டராகலாம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். உங்க திறமையை ஏன் வீணடிக்கிறீர்கள் எனறும் சொல்வார். அந்த நேரத்தில் பிருந்தா மாஸ்டரும் நீ மாஸ்டராக ஒர்க் பண்ணலாமே. போ ஒரு பாட்டு பண்ணிட்டு வா என்று என்னை அனுப்பினர்ர். அதோடு, உங்கிட்ட திறமை இருக்கு. உன்னால முடியும் என்று என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினார் பிருந்தா மாஸ்டர். அதன்பிறகுதான் கண்டேன் காதலை படத்தில் 2 பாடல்களுக்கு நடனம் அமைத்தேன். நான் மாஸ்டராகி நான்கு வருடமாகி விட்டது. சமீபத்தில் வெளியான வன்மம், காவியத்தலைவன் படங்களிலும் நான் நடனம் அமைத்திருக்கிறேன்.


மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 50 படங்களில் நடன மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கிறேன். குறுகிய காலத்தில் 5 மொழிகளில் நடனம் அமைத்திருப்பதோடு, சூர்யா, சித்தார்த், கார்த்தி, விஜயசேதுபதி, மோகன்லால், மம்மூட்டி, பாலகிருஷ்ணா, சஞ்சயதத் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன் என்பது பெருமையான விசயம்.


* நடனத்தில் மொழிவாரியாக வித்தியாசம் ஏதேனும் உள்ளதா?


அப்படியெல்லாம் இல்லை. கதைக்கு தகுந்த மாதிரிதான் நாங்கள் நடனம் அமைப்போம். நேட்டி விட்டி கதை என்றால் அந்த ஊர் பாணியில் இயல்பாக நடனம் அமைப்பேன். சமீபத்தில்கூட கொம்பன் படத்திற்காக கிராமத்து சூழலில் நடக்கும் விசயங்களை மனதில் கொண்டு நடனம் அமைத்தேன். இது மாதிரி கதைகளும், பாடல்களின் சூழலும்தான் நடனத்தை தீர்மானிக்கும். மற்றபடி மொழிவாரியாக நடனத்தில் எந்தவித மாற்றமும் செய்வதில்லை. மேலும், வெளிநாட்டில் பாடல் படமாக்கப்பட்டால், ஹிப்பாப், லாக்கிஸ் என்று ஸ்டைலிசாக நடனம் அமைப்பேன். நம்முடைய கலாச்சார நடனங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு அயல்நாட்டு நடனங்களை கலந்து மூவ்மெண்ட் கொடுப்பேன்.


* எந்த மாதிரியான வேகம் கொண்ட பாடல்களுக்கு நடனம் அமைப்பது கடினம்?


எங்களைப்பொறுத்தவரை வேகமான பீட் கொண்ட பாடல்களுக்கு எளிதாக நடனமாடி விடுவோம். ஆனால், ஸ்லோவான பாடல்களுக்கு நடனம் அமைப்பதுதான் சற்று கடினமான வேலை. காரணம், அதில் வெளிப்படுத்தும் நடனங்களை மக்கள் மனதில் நிற்கும்படியாக நாசுக்காக நடனத்தில் சொல்ல வேண்டும். மேலும், எந்த படலாக இருந்தாலும் முதலிலேயே பாடல் கேசட்டை வாங்கி அதில் எந்த மாதிரி நடனத்தை கொடுக்கலாம் என்பதை ரிகர்சல் பார்த்துவிட்டுத்தான் ஸ்பாட்டுக்கு செல்வோம்.


* இப்போதெல்லாம் ஒரே நாளில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க சொல்கிறார்களாமே?


சில கம்பெனிகளில் ஒரு நாளில் முடிக்க சொல்வார்கள். சிலர் 2 நாள் தருவார்கள். இன்னும் சிலர் ஒரேயொரு பாட்டுக்காக 10 நாட்களைகூட தருவார்கள். அதனால் பட்ஜெட்டைப் பொறுத்து வேலையை முடித்துக்கொடுப்போம். வன்மம் படத்தில் விஜயசேதுபதி- கிருஷ்ணா இணைந்து நடனமாடும் ஓப்பனிங் பாடலை நாகர்கோயிலில் கொட்டும் மழையில் படமாக்கினோம். பாடலை இரண்டே நாளில் பாடலை முடித்து தருமாறு சொன்னார். அதனால் அந்த மழையிலும் கஷ்டப்பட்டு முடித்தோம். அதனால் ஒவ்வொரு பாடலையும் எனது முதல் பாடல் என்கிற மனநிலையுடனேயே ஒர்க் பண்ணி வருகிறேன்.


* பெரிய அளவில் நடனத்தில் தேர்ச்சி இல்லாத விஜயசேதுபதியை ஆட வைத்த அனுபவம் எப்படியிருந்தது?


பெரிய அளவில் தேர்சசி இல்லாத விஜயசேதுபதி போன்ற நடிகர்களுக்கு முன்கூட்டியே ரிகர்சல் கொடுத்து விடுவோம். அப்படி அவருக்கு ஏற்கனவே ரிகர்சல் கொடுத்துவிட்டு ஸ்பாட்டுக்கு சென்றதால் அதிக நேரம் எடுக்கவில்லை.


* நீங்கள் கொடுக்கிற மூவ்மெண்டில் ஆட முடியாமல் ஹீரோக்கள் தடுமாறினால் என்ன செய்வீர்கள்?


அந்த மாதிரி சில ஹீரோக்கள் தடுமாறுவார்கள் அப்போது நான் அவர்களுக்கு எந்த மாதிரியான மூவ்மெண்ட் எளிதாக வருமோ அந்த மாதிரி மூவ்மெண்ட் கொடுத்து ஆட வைப்பேன். வன்மம் படத்தில் ஆடும்போதுகூட, நான் மிகப்பெரிய ஆட்டக்காரன் கிடையாது. எனக்கு ஏன் மேடம் இவ்வளவு கஷ்டமான மூவ்மெண்டெல்லாம் கொடுக்கிறீர்கள் என்று விஜயசேதுபதியே சொன்னார். அதனால் அவருக்கு டார்ச்சர் கொடுக்காத வகையில் முவ்மெண்டுகளை கொடுத்தேன்.


காரணம், அவர்களை ஓவராக வருத்தினால் ஸ்கிரீனில் அவர்களின் முகம் வாடிப்போய் விடும். திரும்பத்திரும்ப ஆடி ஆடி அவர்களின் முகத்தில் களைப்பும் தெரிந்து விடும். அதனால் நடிகர்களுக்கேற்பவும் இதுமாதிரி பல சமயங்களில் நான் அவர்களுக்கேற்ற நடனத்தை ரெடி பண்ணி ஆட வைத்திருக்கிறேன். மேலும், வன்மம் படத்தில் விஜயசேதுபதி ஆடிய அந்த பாடலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. ஒரு முழு ஓப்பனிங் பாடலுக்கு அவர் நடனமாடியது அதுதான் முதல்தடவை என்று நினைக்கிறேன்.


அந்த பாடலில் விஜயசேதுபதியா இப்படி ஆடியிருக்கிறார் என்று பீல்டே அவரை பேசியது. அந்த அளவுக்கு ஸ்டைலிஷாகவும் ஆடியிருநதார். அதையடுத்து ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க மேடம் என்ற விஜயசேதுபதி என்னிடம் நன்றி சொன்னார்.


* தமிழ் சினிமாவில் எந்த மூவ்மெண்ட் கொடுத்தாலும் நன்றாக ஆடக்கூடிய நடிகர் யார்?


ஏன் சார் வம்புல மாட்டி விடுறீங்க. நான் யாராவது ஒருத்தர் பேரை சொன்னா, இன்னொருத்தர் ஏன் மேடம் அப்படின்னா நாங்கள்லாம் நல்லா ஆடமாட்டோமா என்று என்னிடம் கேட்பார். அதனால் எல்லாருமே நல்லா ஆடக்கூடியவங்கதான் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.


* மாற்றான் படத்தில் சூர்யாவுடன் ஒர்க் பண்ணியது பற்றி?


அதற்கு முன்பே அவருடன் காக்க காக்க, கஜினி, சில்லுன்னு ஒரு காதல் என பல படங்களில் ஒர்க் பண்ணியிருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவரைப்பற்றியும் எனக்கு தெரியும் என்பதால், அவருக்கேற்றபடி கம்போஸ் பண்ணியிருந்தேன. அதனால் எளிதாக ஆடிவிட்டார். ஆரம்ப காலத்தில் சூர்யாவுக்கு நடனமாடும்போது வேர்த்து வேர்த்து கொட்டும். அப்போது நானும் அவருடன் குரூப்பில் ஆடியிருக்கிறேன். இப்ப அவருக்கு வேர்த்துக் கொட்டல, டான்ஸ் மாஸ்டர்களக்கு வேர்த்து கொட்டுது. அவரை எந்த மாதிரி லாக் பண்றதுன்னு யோசிக்கிறாங்க. அந்த அளவுக்கு டாப்புல வந்துட்டாரு சூர்யா.


சினிமாவுல சாதிக்கனும்னு நெனக்கிறவங்க என்றைக்குமே பின் வாங்க மாட்டாங்க. அந்த மாதிரி எதிர்நீச்சல் போட்டு, தன்னோட முயற்சி, உழைப்பால இன்றைக்கு எந்த மாதிரியான நடனம் என்றாலும் அசராமல் ஆடக்கூடிய நடிகராக வளர்ந்து நிற்கிறார் சூர்யா.


* நீங்கள் ஒர்க் பண்ண ஆசைப்படும் ஹீரோ யார்?


எனக்கு விஜய்கூட ஒர்க் பண்ணணும்னு ஆசை, நான் அசிஸ்டன்டா இருந்தப்ப அவரோட ஒர்க் பண்ணியிருக்கேன். அதேசமயம், இதுவரை நானா போய் யாருகிட்டயும் சான்ஸ் கேட்டது கிடையாது. முதல்லே நான் சொன்ன மாதிரி ரஜினிகாந்துல இருந்து பரத் வரைக்கும் எல்லா ஹீரோக்களுக்குமே என்னோட ஒர்க் தெரியும். அதனால் என்னோட ஒர்க் தெரிஞ்ச விஜய் சாரே கூப்பிடுவாருன்னு நெனக்கிறேன். அவரோட படத்துல ஒர்க் பண்ணனுங்கிற ஆசை எனக்கு நிறையவே இருக்கு.


மேலும், விஜய்யைப் பொறுத்தவரை உட்கார்ந்த இடத்துல இருந்தே அசிஸ்டன்ட்டு ஆடுறத வாட்ச் பண்ணுவாரு. அதையடுத்து ஒரே டேக்குல ஆடி முடிச்சிட்டு சைலன்டா போயிடுவாரு. அந்த அளவுக்கு திறமையான நடிகர் விஜய். இந்த 2015ம் வருடத்துல கட்டாயம் அவர் படத்துல நான் டான்ஸ் மாஸ்டராக ஒர்க் பண்ணுவேன்னு நெனைக்கிறேன்.


* விஜய் நடனமாடியதில் நீங்கள் ரசித்த பாடல் எது?


நான் எல்லா பாடல்களையுமே ரசிப்பேன். ஏன்னா பிரபுதேவா, ராஜூசுந்தரம், பிருந்தா என எந்த மாஸ்டர் என்றாலும் அவர்களின் பாடிலாங்குவேஜக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஆடக்கூடியவர் விஜய். சிவசங்கர் மாஸ்டருடன் ஒர்க் பண்ணினாலும் அவருக்கேற்ப மாறி விடுவார்.எனக்கு விஜய் சாரிடம் பிடித்த விசயமே எந்த கோரியோ கிராபராக இருந்தாலும் அவர்கள் ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்வார். அவர் ஆடும் ஸ்டைலை வைத்தே அந்த பாடலுக்கு யார் நடனம் அமைத்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


* நடனத்தின் வெற்றி எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?


நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நடனம் அமைத்தாலும் அந்த படமும், பாடல்களும் ஹிட்டாகும்போதுதான் எங்கள் நடனமும் மக்களின் கவனத்துக்கு செல்கிறது. உதாரணத்துக்கு காசு பணம் துட்டு மணி மணி - என்ற பாடலில் பெரிய அளவில் டான்ஸ் மூவ்மெண்ட் இருக்காது. ஆனா அந்த டியூன் திரும்பத்திரும்ப காதில் விழுந்துகொண்டேயிருந்ததால் அந்த பாடல் ரீச்சாகி விட்டது. ஆக, ஹிட்தான் எங்களின் வெற்றியை முடிவு செய்யும்.


இதற்கெல்லாம் மேலாக டயம் என்ற ஒன்று இருக்கிறது. அது ரொம்ப ரொம்ப முக்கியம். அது நல்லா இருந்தால் யாரு எப்படி இருக்காங்கன்னு சொல்ல முடியாது. அதனால் என்னோட டயமும் 2015 ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்க. அதோடு இப்பத்தான் என்னை எல்லோரும் நோட்டீஸ் பண்றாங்க. பாடல்களுக்கு நான் கொடுத்திருக்கும் நடன அசைவுகளைப்பற்றி பேசுறாங்க. ஆக இப்பத்தான் நான் கவனத்துக்கு வந்திருக்கேன். அதனால் இந்த வருடத்துல எப்படியாவது ஒரு விருது வாங்கிடுவேன்னு நினைக்கிறேன். அது மாநில விருதோ, தேசிய விருதோ அல்லது பிலிம்பேர் விருதாகவோ கூட இருக்கலாம்.


* நடனம் தவிர, நடிப்பு, டைரக்ஷனில் ஆர்வம் உள்ளதா?


நடிக்க நிறையபேர் கேட்கிறாங்க. அதனால் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். ஹீரோயின் எல்லாம் டூ மச்சா இருக்கு. அதனால் கேரக்டர்கள் நடிப்பேன். மேலும், முன்பெல்லாம் ஷோலோ டான்ஸ் ஆட சொன்னால் வெட்கப்படுவேன். ஆனால் இப்போது வளர வளர அதெல்லாம் போயிடுச்சு. அதனால் ஷோலோவாக ஆட சான்ஸ் கிடைத்தாலும் ஆடுவேன். இப்படி மற்றவங்களே என்னை நடிக்குமாறு, ஆடுமாறு சொல்வதால் நம்மிடம் ஏதோ இருக்கிறது என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் இனிமேல் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என்கிறார் டான்ஸ் மாஸ்டர் பாபி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)