‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
பிறந்தது சேலம் அருகே அவல்பூந்துறை. தந்தை வால்பாறை டீ எஸ்டேட்டில் பணிபுரிந்ததால் எட்டாம் வகுப்பு வரை சென்னை, பொள்ளாச்சி, வால்பாறையில் உறவினர் வீடுகள், ஹாஸ்டலில் தங்கி படித்தேன். அதன் பின் அம்மாவும் நானும் கோவையில் நிரந்தரமாக இருந்தோம்.
கல்லுாரியில் சேர்ந்து விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் விருப்பத்தை பெற்றோர் எதிர்த்ததால் பி.பி.எம்., பயின்றேன். சினிமாவில் உதவி இயக்குனராக சேரப்போகிறோம் என முடிவு செய்திருந்ததால் ஜாலியாக கல்லுாரி படிப்பை முடித்தேன். ஆனால் சினிமா வேண்டாம் என பெற்றோர் தெரிவித்து பணமும் கொடுக்க மறுத்தனர். இதனால் நண்பர்களுடன் தனியார் நிறுவனங்களின் நேர்முகத்தேர்வில் பங்கேற்று மூன்று மாதங்கள் வரை வேலைக்கு செல்வேன். செலவுக்கு பணம் கிடைத்ததும் வேலையை விடுவது தொடர்கதையானது. நண்பர் ஒருவருடன் சேர்ந்து மூன்று கார்களை வாங்கி நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் தொழிலை துவங்கினேன்.
ஓராண்டிற்குள் தொழிலுக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டால் சென்னைக்கு உதவி இயக்குனராக சென்று விடலாம் என நினைத்தேன். வாகனங்களுக்கான வரி, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்ந்ததால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. வாங்கிய கடனை அடைக்க துபாயில் வேலைக்கு சென்றேன்.இந்த நேரத்தில் காதலியை கரம் பிடிக்க நாடு திரும்ப வேண்டிய நெருக்கடி உருவானது. கோவையில் மருந்து, மாத்திரைகள் விற்பனை நிறுவன மேலாளராக பணியில் சேர்ந்து காதலியை திருமணம் செய்தேன். பின்னர் உறவினர் உதவியால் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
ஷூட்டிங்கில் நடிகர் ஒருவர் வராததால் அவரது கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்தேன். அப்போது இயக்குனர் ராஜேஷ், உதவி இயக்குனரா, நடிகரா என்பதில் ஒன்றை முடிவு செய்யுங்கள். அது தான் வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என்பதை தெளிவுப்படுத்தினார்.
நடிகராகிறேன் என தெரிவித்தேன். அங்கிருந்து வெளியேறி நண்பர்களுடன் இணைந்து யுடியூப் சேனல் துவங்கி அரசியலை மையமாக வைத்து யதார்த்தமாக நடித்தோம்.
ஆளுங்கட்சியை கலாய்க்கும் நிகழ்ச்சி
அப்போது நண்பர் பரிந்துரையால் தொலைக்காட்சியில் ஆளும் கட்சியை கலாய்க்கும் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்க மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த டிவி சேனல் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஒரு கட்சிக்கு ஆதரவாக நடிப்பதாக மனதிற்கு தோன்றியதால் வெளியேறினேன். அப்போது 'சில்லுக்கருப்பட்டி' இயக்குனர் ஹலிதா ஷமீம் அறிமுகம் கிடைத்தது. அப்போது நான் எழுதிய கதையை சமுத்திரக்கனியிடம் தெரிவித்து சம்மதம் பெற்றேன். ஆனால் தெலுங்கு படபிடிப்பிற்காக சமுத்திரக்கனி வெளியூர் சென்றார். ஹலிதாவும் அவரின் பணியை செய்வதற்காக சென்றார். இதனால் இயக்குனர் ஆசை சில காலம் தாமதமானது.
அதன் பின் 'அயலி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு பின்பும் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது; நடிகராகவே தொடர்வோம் என முடிவு செய்தேன்.
லப்பர் பந்து
'லப்பர் பந்து' படத்தில் கதாநாயகனின் நண்பனாக, கதையை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இப்படத்தில் 'மாப்ள எப்போதும் முதல் பந்து சாமிக்கு விட்ருவான்'என்று நான் பேசும் வசனம் பிரபலமாகியது. அடுத்து வெளியான 'குடும்பஸ்தன்'படமும் வெற்றி பெற்றது.
ஒவ்வொரு முறையும் எனக்கான பயிற்சியை எடுத்து எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தேன். அடுத்தடுத்த படங்களை நானே தேர்வு செய்து நடிக்கும் நிலைக்கு 'லப்பர் பந்து'கொண்டு வந்துள்ளது. தற்போது 7 படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன்.எதிர்காலம் குறித்து திட்டமிடல் இல்லாமல் எனக்கான தகுதியை தயார்படுத்திக் கொள்ளும் பணியில் ஈடுபடுகிறேன். சினிமாவிற்குள் காலதாமதாக வந்தாலும் குடும்பத்தினருக்கு இருந்த மன வருத்தத்தை போக்கியது மகிழ்ச்சியாக உள்ளது.
சினிமா ஆசையில் சரியாக படிக்காமல் இருக்கக்கூடாது என்பது என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்டது.
இங்கு ஒருவருக்கு உள்ள அனுபவம் மற்றவரின் வாழ்க்கைக்கு ஒத்து போகாது. சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு எப்படி அணுக வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து அதற்கான நேரம் அறிந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.