அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? |

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. 'ஆகோள்' எனும் முக்காலத்தையும் இணைத்த நாவலை உருவாக்கியுள்ள இவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது...
* வெளிநாட்டில் பயின்ற அனுபவம் குறித்து
சமூக மாற்றத்திற்கான தகவல் தொடர்பியல் முதுகலை படிக்க ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இதழியல் துறை வகுப்பை பகிரும் அனுபவம் கிடைத்தது. சமூக சிந்தனை சார்ந்த அரசியல் விவாதிக்கும் மேடையாக ஆஸ்திரேலியா அமைந்தது.
பின் சென்னை பல்கலையில் 2 ஆண்டுகள் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். தனியார் ஊடகம் ஒன்றை உருவாக்க வாய்ப்பு கிடைத்தது. சில ஆண்டுகள் பயணித்தேன். ஆனால் எழுத நேரம் கிடைக்காததால், படைப்பிலக்கியத்திற்கான இடைவெளி அதிகரித்ததை உணர்ந்தேன். அதனால் அதில் இருந்து விலகி படைப்பாளனாக பயணிக்கிறேன்.
* சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்துலகில் 'பிரேக்' எடுத்ததன் காரணம்
கவண், விவேகம் உள்ளிட்ட திரைப்படங்களின் பணி 4 ஆண்டுகளாக சென்றதால், எழுத நேரம் கிடைக்கவில்லை. ஆனால் முக்கிய காரணம் தமிழகத்தில் ஆரோக்கியமான பதிப்பு சூழல் இல்லை என்பதே. நுால்களை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கும், விநியோக கட்டமைப்பு சூழல் இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். உலகமே டிஜிட்டல் சூழலுக்கு மாறும்போது, அதை பயன்படுத்த தவறிவிட்டனர்.
'ஆகோள்' உடன் உங்கள் பயணம் பற்றி
'எது ஒன்றை உங்களால் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்க முடியாதோ அந்த ஒன்று தான் சிறந்தது' என்ற வாசகம் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோன்று எதனுள்ளும் அடைபடாத படைப்பை உருவாக்க நீண்ட நாட்களாக எனக்குள் தாகம் இருந்தது. ஒருநாள் உசிலம்பட்டி அருகே சிந்துப்பட்டியின் இடிந்து போன பழைய போலீஸ் ஸ்டேஷனை காண நேரிட்டது. துருப்பிடித்த பூட்டு, கூரைகள், இடியும் நிலையில் சுவர் என நுாறு ஆண்டுகளுக்கு முன் என்னை அழைத்துச் சென்றது. அங்குள்ள பெரியவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு கைரேகை சட்டத்தில் கைதானவர்களை இங்கு தான் அடைத்தார்கள் என்றார். 'கைரேகை தரமாட்டோம்' என உயிர்விட்ட பெருங்காம நல்லுார் மக்கள் பற்றி அறியும் போது, இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தியது.
பின் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்குமான உரையாடலைத் தொடங்கும் கதையை படைக்க வேண்டும் என்ற உந்துதலே என்னை ஆகோள் உலகை உருவாக்கத் துாண்டியது. ஆகோள் முதல் பாகம் 2030ல் நடக்கும் கதை. கடந்த காலத்தில் நடந்த சம்பவம் எதிர்காலத்தில் எப்படி எதிரொலிக்கும் என மனதில் வைத்து எழுதத் தொடங்கினேன். தற்கால அரசியல், சமூக, அறிவியல் சூழல்களை உள்வாங்கி தொலைநோக்கு பார்வையுடன் எழுதினேன்.
ஜப்பான் போன்ற நாடுகளில் குடும்பக்கட்டுப்பாட்டால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. 'இன்று உலகநா டுகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்தும் சூழலுக்கு வந்து விட்டார்கள். ஆகோள் 2ம் பாகமான மாக்கியவல்லி காப்பியம் நடக்கும் காலகட்டம் 2050 என்பதால், அப்போதைய அரசு 'நாம் இருவர் நமக்கு ஐவர்' என விளம்பரம் செய்வதாக எழுதியிருந்தேன்.
எதிர்காலத்தில் இன்னொரு நாட்டின் இணைய எல்லைக்குள் நுழைய 'சைபர் விசா' தேவைப்படலாம். இது போன்ற விஷயங்களை மாக்கியவல்லி காப்பியத்தில் பேசியுள்ளோம்.
* முன்னோர்கள் பற்றி எழுதும்போது அவர்களின் பிற்போக்கு விஷயங்களை எப்படி கையாளுவீர்கள்
அன்னப்பறவை தண்ணீரை விட்டு பாலை அருந்துவது போல, நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னோர்களின் வீரத்தை முன்னிறுத்துவது தான் ஆகோளின் நோக்கம். எட்டு நாடுகள் எனப்படும் கிராமங்களைப் பற்றி அறிய கிராம நிர்வாக அமைப்பு, நாட்டார் தெய்வ வழிபாடு, மொழி என கள ஆய்வு மேற்கொண்டு அறிந்தேன்.
* புத்தக திருவிழாக்களில் இளைஞர்கள் அதிகம் தென்படுகிறார்களே
புத்தக திருவிழா வாசிப்பிற்கான இடம் மட்டுமே. வரும் கூட்டத்தை வாசகர்கள் என முடிவிற்கு வர முடியாது. இன்றைய இளைஞர்கள் முந்தைய தலைமுறையை விட ஆழமான வாசிப்பை நோக்கி நகர்கிறார்கள். நவீன சாதனங்கள் அதிகம் வந்தாலும், இலக்கிய தாகம் கொண்ட இளைஞர்களும் இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள வேண்டும்.
* இளைஞர்கள் விரும்பும் ஜப்பானிய 'அனிமே' கார்ட்டூன்கள் பற்றி
சமீபத்தில் ஒரு 'அனிமே' காண தியேட்டர் சென்றிருந்தேன். அரங்கம் முழுவதும் பள்ளிக் குழந்தைகள் இருந்தனர். திரையில் ஒவ்வொரு கதாப்பாத்திரம் வரும்போதும், நம்மூர் ஹீரோக்கள் அளவிற்கு கைத்தட்டல் எழுந்தது. இன்றைய தலைமுறை எதை ரசிக்கிறார்கள் என்ற புரிதலும் கிடைத்தது. தமிழில் இதுபோன்று உருவாக்க வேண்டும். எனது சிறுகதையை அனிமே வடிவில் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.




