இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் இவர் தற்போது பெப்சி சங்க தலைவராக உள்ளார். நடிகை ரோஜா உடன் காதல் வயப்பட்டது, திருமண பந்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி தினமலருக்கு அளித்த பேட்டியில் செல்வமணி கூறியிருப்பதாவது :
வாழ்க்கையில் பல அவமானங்கள், கஷ்டங்களை தாண்டி தான் வந்துள்ளேன். அதனால் எனக்கு எந்த விஷயத்திலும் பெரிய நாட்டம் கிடையாது. எல்லாவற்றிலும் இரண்டாம் பச்சமாக தான் இருந்தேன். ஆடை, கார் என எதிலும் நாட்டம் கிடைாது. காதல் விஷயத்திலும் அப்படி தான். ‛செம்பருத்தி' படத்தின் கதைப்படி ஹீரோ ஒரு ஓவியம் வரைவார். அந்த சீனை எடுப்பதற்காக 6 ஓவியங்களை முன்னரே வரைந்து ஒரு அறையில் வைத்துவிட்டோம். அந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைஜில் இருப்பது மாதிரி வரையப்பட்டிருந்தது. உதாரணமாக டிரஸ் இல்லாமல், டிரஸ் உடன்... இப்படி தனித்தனியாக 6 ஓவியங்கள் இருந்தன. அந்த அறைக்கு ரோஜா திடீரென வந்ததும், தனது ஓவியம் அரை குறை ஆடையில் இருப்பதை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
நான் என்ன என்று கேட்கும் போதும் என் கையை பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்த படி அழுதார். உடனே அந்த காட்சியை நிறுத்திவிட்டு வேறொரு காட்சியை எடுக்க சொன்னோம். அந்த பெயின்ட்டிங் எல்லாவற்றையும் துணியை போட்டு மறைத்துவிட்டு, அந்த அறையையும் பூட்டி விட்டோம். அதன் பின் தான் அவர் சரியானார். எனக்கு அந்த சமயம் அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. நான் படப்பிடிப்பு தளத்தில் டெரராக இருப்பேன். என்னை பார்த்தாலே செட்டில் இருப்பவர்கள் பயப்படுவாங்க. ஆனால் இவர் மட்டும் சாதாரணமாக என்னிடம் பேசுவார். அதுவும் அவர் மீது எனக்கான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.
எனக்கு லவ் பண்றது, ஊர் சுத்துறது மாதிரியான விஷயத்தில் விருப்பம் இல்லை. பெண் வீட்டாரின் ஆசையோடு தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். யாராக இருந்தாலும் பெற்றவர்களை அழ வைத்துவிட்டு திருமணம் செய்யக் கூடாது என்பது என் எண்ணம் ரோஜாவின் அப்பாவிடம் உங்க பொண்ண புடிச்சுருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன், உங்களுக்கு சம்மதமா என நேரடியாக போய் கேட்டேன். அவர் தனது மகன்களிடம் கேட்டு சொல்வதாக சொன்னார். பிறகு அவரின் அண்ணன் வந்து சம்மதம் சொன்னார். அதன்பிறகே ரோஜாவிடம் சென்று எனது விருப்பத்தை சொன்னேன். ஆர்கேஎஸ் என பொறிக்கப்பட்ட செயின் ஒன்றை பரிசாக தந்தேன். அதன்பின் எங்கள் காதல் மலர்ந்தது, திருமணம் செய்தோம்.
ஒருகட்டத்தில் எங்களின் திருமணமே இருவரது வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது. என்னோடு சில ஹீரோக்கள் படம் பண்ணாமல் போக அந்த கோபமும் ஒரு காரணம். ஹீரோக்கள், ஹீரோயின்களை தங்களது பொண்டாட்டி மாதிரி நினைக்கிறாங்க. நான் அவரை திருமணம் செய்தது அவர்களுக்கு கோபம். அதேப்போன்று ஒரு இயக்குனரை ரோஜா திருமணம் செய்துட்டாரே என அவர் மீதும் ஹீரோக்களுக்கு கோபம். அதனால் தங்களது படங்களை அவரை ஹீரோயினாக பயன்படுத்த யோசிச்சாங்க. இருந்தாலும் இந்த துறையில் எங்கள் இருவரின் வெற்றி தான் எங்களை கரை சேர்த்தது. இல்லையென்றால் எங்களை இவர்கள் காலி செய்திருப்பார்கள். இன்னும் கூட நாங்கள் பெரிய அளவில் முன்னேறி இருப்போம்.
இன்றைக்கு பல திருமண பந்தங்கள் நிலைப்பதில்லை. எனக்கும், ரோஜாவிற்கும் பல சண்டைகள் வந்துள்ளன. பிரிந்துவிடலாம் என்று கூட தோன்றி இருக்கிறது. அந்த சமயம் எல்லாம் எனக்கு இரண்டு பேர் ஞாபகத்திற்கு வருவார்கள். ஒருவர் வி.சேகர், மற்றொருவர் ஜெயலலிதா. அவர்கள் சொன்ன விஷயம் தான் எங்களை இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இணைத்து பயணிக்க வைத்திருக்கிறது. மூன்றாவது எங்களின் குழந்தைகளும் கூட. எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மனைவியை ஜெயிக்க முடியாது. மனைவியை ஜெயிப்பது வாழ்க்கை அல்ல, மனைவி ஜெயிக்கணும். அவர் ஜெயித்தால் நாம ஜெயிக்கலாம்.
இவ்வாறு செல்வமணி கூறினார்.