ஷாட் பூட் த்ரீ,Shot Boot Three
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - அருணாச்சலம் வைத்யநாதன்
இசை - ராஜேஷ் வைத்யா
நடிப்பு - கைலாஷ், பிரணதி, பூவையார், வேதாந்த் வசந்த்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக எப்போதாவது ஒரு முறைதான் வருகிறது. அப்படி அபூர்வமாய் வந்துள்ள ஒரு படம்தான் இந்த 'ஷாட் பூட் த்ரீ'. பல குழந்தைகள், நாய்களின் மீது பிரியமாக இருப்பார்கள். அப்படி ஒரு நாயின் மீது பிரியமாகவும், பாசமாகவும் இருக்கும் ஒரு சிறுவன், அவனது நண்பர்களைப் பற்றிய படம்தான் இது.

சென்னையில் உள்ள பிரம்மாண்டமான அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் வெங்கட் பிரபு, சினேகா தம்பதியினருக்கு ஒரே மகன் கைலாஷ். உடன் விளையாட யாரும் இல்லாததால் நாய் வேண்டும் என பெற்றோரிடம் அடம் பிடிக்கிறார். கைலாஷின் நண்பர்களான பிரணதி, வேதாந்த் வசந்த் இருவரும் கைலாஷுக்கு நாய் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளிக்கிறார்கள். ஒரு நாள் அந்த நாய் காணாமல் போகிறது. கைலாஷ், பிரணதி, வேதாந்த் ஆகியோருடன் அந்த அபார்ட்மென்ட் வாட்ச்மேன் மகனான பூவையார் ஆகிய நால்வரும் நாயைத் தேடி சுற்ற ஆரம்பிக்கிறார்கள். நாயைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அபார்ட்மென்ட், குழந்தைகள் என்றாலே ஒரு காலத்தில் வெளியான 'அஞ்சலி' படம் தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். இந்தப் படத்தில் அவ்வளவு குழந்தைகள் இல்லை என்றாலும் நான்கு பேரை வைத்துக் கொண்டு சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருணாச்சலம் வைத்யநாதன். சாதாரணக் கதையாகத் தோன்றினாலும் கிடைக்கும் இடங்களில் சில சமூகக் கருத்துக்களையும் பதிவிட்டிருக்கிறார் இயக்குனர்.

கைலாஷ், வேதாந்த் வசந்தா, பூவையார், பிரணதி நான்கு பேரையும் பார்க்கும் போது படத்தில் நடிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் அவர்களாகவே தங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு இல்லாத அவர்களது நட்பு இந்தக் காலத்திய சிறுவர், சிறுமியர்களுக்கு அவசியமான ஒன்று. ஏழ்மை காரணமாக பள்ளி செல்லாமல் இருக்கும் பூவையாரையும் கைலாஷ் அவனது பெற்றோர்களிடம் சொல்லி பள்ளியில் சேர்த்துவிடுவது நெகிழ்ச்சியான ஒன்று.

கைலாஷ் பெற்றோராக வெங்கட் பிரபு, சினேகா. இடைவேளை வரைதான் இருவருக்கும் ஓரளவிற்கு முக்கியத்துவம். ஐ.டி-யில் வேலை செய்யும் இந்தக் காலத் தம்பதியினரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். வேலை, வேலை என பணத்திற்குப் பின்னால் ஓடும் அவர்களது வாழ்க்கை முறை இன்றைய சிறுவர், சிறுமியரை நிறைய பாதிக்கிறது என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.

படத்தில் கொஞ்சம் நகைச்சுவையும் இருக்க வேண்டும் என யோகி பாபுவின் கதாபாத்திரத்தையும் பொருத்தமாக சேர்த்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சமாக வந்து கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.

படத்தின் கதாநாயகன் என்றால் அந்த 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாயைத்தான் சொல்ல வேண்டும். சொல்லிக் கொடுத்ததைப் புரிந்து கொண்டு நன்றாகவே நடித்திருக்கிறது.

பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே தடம் பதித்துள்ளார்.

குழந்தைகளுக்கான படம் என்று சொன்னாலும் பெரியவர்களும், குடும்பத்துடன் பார்க்கலாம். அப்போதுதான் தங்கள் குழந்தைகளின் மீது என்ன மாதிரியான பாசத்தில் உள்ளோம் என்பதை அவர்களும் புரிந்து கொள்ள முடியும்.

ஷாட் பூட் த்ரீ - பாஸ்

 

ஷாட் பூட் த்ரீ தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஷாட் பூட் த்ரீ

  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓