தெய்வ மச்சான்,Deiva machan
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - உதய் புரொடக்ஷன்ஸ், மேஜிக் டச் பிக்சர்ஸ்
இயக்கம் - மார்ட்டின் நிர்மல்குமார்
இசை - காட்வின் ஜே கோடன், அஜிஷ்
நடிப்பு - விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன்
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஒரு எளிமையான கிராமத்துக் கதையை எடுத்துக் கொண்டு முடிந்தவரையில் நகைச்சுவையாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அதிக பட்ஜெட் இல்லாத, கதாநாயகி இல்லாத, காதல் காட்சிகள் இல்லாத, டூயட் இல்லாத, சென்டிமென்ட் இல்லாத இப்படிப்பட்ட படத்தை இந்தக் காலத்தில் கொடுக்கவும் ஒரு துணிச்சல் வேண்டும். அதைச் செய்திருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார்.

எத்தனையோ அண்ணன், தங்கை பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அதில் இதுவும் ஒரு வகைதான், ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. கதாநாயகன் விமல், கிராமத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர். அவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு அவ்வளவு சீக்கிரத்தில் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. விமலுக்கு சிறு வயதிலிருந்தே கனவில் ஒரு 'சாட்டைக்காரன்' வருகிறார். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கிறது. தங்கை அனிதா சம்பத்திற்குத் திருமணம் நடந்தால் அவரது கணவரின் மச்சான் இறந்து போவார் என்கிறார் சாட்டைக்காரன். அனிதாவிற்கு ஒருவருடன் திருமணமும் நடந்து முடிகிறது. முதலில் மச்சான் என்பதை தனது தங்கையின் கணவர் என விமல் தவறாகப் புரிந்து கொள்கிறார். பின்னர்தான் அவர்தான் அந்த மச்சான் என்ற அர்த்தம் அவருக்குத் தெரிய வருகிறது. எங்கே தான் இறந்து விடுவோமோ என பயப்பட ஆரம்பிக்கிறார் விமல். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'சாட்டைக்காரன்' சொன்ன அந்த 'மச்சான்' யார் என்பதில் விமல் முதலில் தவறாக அர்த்தம் புரிந்து கொள்கிறார். அது அவர்தான் என்பதை அவர் புரிந்து கொள்ள கொஞ்சம் கால தாமதம் ஆகிறது. ஆனால், முதலில் அவர் தவறாகப் புரிந்து கொண்டபடி தன் தங்கையின் கணவர்தான் இறந்து போவார் என நினைத்து புது மாப்பிள்ளையான அவரை தாங்கு தாங்கென்று தாங்குகிறார் விமல். அந்தக் காட்சிகளும், அதன்பின், தான்தான் அந்த மச்சான் என்று தெரிந்த பின் அதிர்ந்து அவர் நடந்து கொள்ளும் விதங்களும்தான் இந்தப் படத்தை சுவாரசியமாக்கியுள்ளன. முதல் பாதியில் குறிப்பிடும்படியாக படம் நகரவில்லை. இருந்தாலும் அதை இரண்டாவது பாதியில் சரி செய்திருக்கிறார் இயக்குனர்.

கிராமத்து இளைஞன் வேடம் என்றால் இப்போதைக்குப் பொருத்தமாக நடிக்கக் கூடிய நடிகர்களில் விமலும் இடம் பிடிப்பார். வழக்கம் போலவே அதே 'களவாணி' ஸ்டைல் நடிப்பை இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார். படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிப்பவர்தான் கதாநாயகியாக இருக்க வேண்டும். ஆனால், அப்படி கதாநாயகி அளவுக்கு யாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைக்கவில்லை இயக்குனர். அவரது மச்சானின் தங்கையான நேகா ஜா என்பவர் மீது விமல் ஆசைப்படுவது போல சில காட்சிகளை வைத்து முடித்துவிட்டார்கள். மற்றபடி அனிதா சம்பத்திற்குத்தான் படத்தில் முக்கியத்துவம் அதிகம். அவரும் இயல்பாய் நடித்து சமாளித்திருக்கிறார்.

விமலின் நண்பனாக பாலசரவணன், அப்பாவாக பாண்டியராஜன், அத்தையாக தீபா சங்கர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. விமல் குடும்பத்தைப் பழி வாங்கத் துடிக்கும் ஜமீன்தாராக ஆடுகளம் நரேன். மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள் இவர்கள்தான்.

பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் ஓகே ரகம் தான். போரடிக்காமல் படம் நகர்கிறது. பி அன்ட் சி சென்டர் ரசிகர்களைப் படம் கவர வாய்ப்புண்டு.

தெய்வ மச்சான் - ஜாலி மச்சான்...

 

தெய்வ மச்சான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தெய்வ மச்சான்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓