நாய் சேகர்,Naai Sekar
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - கிஷோர் ராஜ்குமார்
இசை - அஜேஷ்
நடிப்பு - சதீஷ், பவித்ரலட்சுமி
வெளியான தேதி - 13 ஜனவரி 2022
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு சுவாரசியமான காமெடிப் படமாக வந்திருக்க வேண்டிய படம், ஆங்காங்கே கொஞ்சம் சறுக்கியதால் கொஞ்சம் சுமாரான காமெடிப் படமாக வந்திருக்கிறது.

சிறுவர், சிறுமியர்களுக்கான நகைச்சுவைப் படம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். 'ஸ்பைடர்' கடித்தால் 'ஸ்பைடர் மேன்' வந்த மாதிரி, 'நாய்' கடித்ததால் 'நாய் சேகர்', இதுதான் படத்தின் கதைக் கரு.

ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர் சதீஷ். அவரது வீட்டுக்குப் பக்கத்தில் வீட்டு விலங்குகள், பறவைகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஜார்ஜ் மரியான். ஒரு தவறான ஆராய்ச்சிக்காகத் தடை செய்யப்பட்டவர். அவர் ஆராய்ச்சிக்காக வைத்திருக்கும் நாய் ஒன்று, பக்கத்து வீட்டு சதீஷைக் கடித்து விடுகிறது. அதனால், சதீஷுக்கு அந்த நாயின் குணம் வந்துவிடுகிறது. சதீஷைக் கடித்த நாய்க்கு பேசும் சக்தியுடன் மனித குணம் வந்துவிடுகிறது. இதனால், சதீஷ் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் இடைவேளை வரை கதையில், திரைக்கதையில் ஒரு நேர்த்தி இல்லாமல் தடுமாறுகிறது. இடைவேளைக்குப் பிறகு அதைக் கொஞ்சம் சரி செய்து அடுத்தடுத்து விதவிதமான நகைச்சுவைக் காட்சிகளுடன் ஓரளவிற்கு சிரிக்க வைத்துவிடுகிறார்கள். முதல் பாதியைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் முழுமையான நகைச்சுவைப் படமாக அமைந்திருக்கும். கதாபாத்திர வடிவமைப்புகளில் கவனம் செலுத்திய இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் அதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் போதே அவ்வப்போது ஏதாவது ஒரு ஒன்லைனில் மட்டும் சிரிக்க வைப்பவர் சதீஷ். இந்தப் படத்தில் முதல் முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்திருக்கிறார். நாய் மாதிரி நடிப்பதற்கெல்லாம் கூச்சப்படாமல் நடித்ததற்குப் பாராட்டித்தான் ஆக வேண்டும். டயலாக் டெலிவரி மட்டும் காமெடி அல்ல, எக்ஸ்பிரஷனும் வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் சதீஷ்.


'குக் வித் கோமாளி' சீசன் 2ல் பங்கேற்ற பவித்ர லட்சுமி தான் படத்தின் கதாநாயகி. சதீஷின் காதலியாக நடித்திருக்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஓரளவிற்கு நடித்தும், மற்ற நேரங்களில் சிரித்தும் வைக்கிறார்.

வீட்டு விலங்கு, பறவைகள் ஆகியவற்றை வைத்து 'டிஎன்ஏ' மாற்றம் வரை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக ஜார்ஜ் மரியான். அவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளர், இரண்டு கண்ணாடி குடுவைகள், அதில் கலர் கலராக தண்ணி, ஒரு கம்ப்யூட்டர் என லோ பட்ஜெட் விஞ்ஞானியாக ஆர்வக்கோளாறு ஆராச்சியாளராகக் காட்டியிருக்கிறார்கள்.

அந்தக் கால இசையமைப்பாளர்களான சங்கர்-கணேஷ் இரட்டையரில் கணேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்புப் பக்கம் வந்திருக்கிறார். இப்படியான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரமெல்லாம் தமிழுக்குக் கொஞ்சம் புதுசுதான். இவரது உதவியாளராக மாறன், பாஸை விட அதிகம் பேசி சிரிக்க வைக்கிறார்.

படத்தின் பாடல்கள் பார்க்கும் போதே மனதில் இடம் பிடிக்கவில்லை. பின்னணி இசை ஏதோ நாடகத்திற்குப் போடுவதைப் போல போட்டிருக்கிறார் அஜேஷ்.

எலும்புத் துண்டுக்காக சதீஷ் குப்பைத் தொட்டிக்குள் விழுந்து சாப்பிடுவது, கம்பத்தைப் பார்த்ததும் சிறுநீர் கழிக்க காலைத் தூக்குவதெல்லாம் சில்லியான நகைச்சுவைக் காட்சிகள். விதவிதமாக எவ்வளவோ யோசித்திருக்கலாம், ஆனால், இப்படியான காட்சிகளைத்தான் அதிகம் யோசித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே 'லாஜிக் பார்க்காதீர்கள்' என்ற வேண்டுகோள் வேறு.

நாய் சேகர் - நான்கைந்து நகைச்சுவைக்காக…

 

நாய் சேகர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நாய் சேகர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓