2.75

விமர்சனம்

Advertisement

இயக்கம் - ஆனந்த் எல் ராய்
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலிகான்
வெளியான தேதி - 24 டிசம்பர் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 17 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஹிந்தியில் 'அத்ரங்கி ரே' என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டப்பிங் வடிவம் தான் இந்த 'கலாட்டா கல்யாணம்'.

2013ல் வெளிவந்த 'ராஞ்சனா' படத்தின் மூலம் தனுஷை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் மீண்டும் தனுஷை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ள ஹிந்திப் படம் இது. அக்ஷய்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாரா அலிகான். அவர் 21 முறை அவரது காதலன் அக்ஷய் குமாருடன் ஓடிச் செல்ல முயன்று, தோல்வியடைந்து குடும்பத்தினரிடம் சிக்கியவர். அவருக்கு யாரோ ஒருவருடன் திருமணம் செய்து வைக்க வேண்டுமென முடிவெடுக்கிறார்கள். அந்த ஊருக்கு எதற்காகவோ வந்த மருத்துவக் கல்லூரி மாணவர், தனுஷைக் கடத்தி வந்து கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தனுஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடக்க வேண்டிய நிலையில் சாராவுடன் திருமணம் நடந்து விடுகிறது. சாராவின் காதலன் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் வரையில் இருவரும் ஒன்றாகத் தங்கியிருக்க முடிவெடுக்கிறார்கள். இருப்பினும் தனது திருமண நிச்சயத்திற்குச் செல்கிறார் தனுஷ். அங்கு உண்மை தெரியவர நிச்சயம் நின்று விடுகிறது. பின்னர் சாராவுடன் தன்னுடைய ஹாஸ்டலுக்குத் திரும்புகிறார். அக்ஷய்குமாரும் திரும்பி வர, அவருடன் சாராவை அனுப்ப முடிவு செய்யும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை கலாட்டாவாக நகரும் படம், அதன் பின் எந்த திருப்பமும் இல்லாத காரணத்தால் தடுமாறுகிறது. அதைச் சரி செய்திருந்தால் மிகவும் சுவாரசியமான ஒரு படமாக அமைந்திருக்கும்.

முழு படத்தையும் தனுஷ் தான் தாங்கிப் பிடிக்கிறார். உணர்வுபூர்வமான பல காட்சிகள் அவருக்குப் படத்தில் உண்டு. இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார். தமிழ் இளைஞன் கதாபாத்திரம் என்பதால் அவருக்குப் பொருத்தமாகவும் உள்ளது. தமிழில் தனுஷே டப்பிங் பேசியிருப்பதால் டப்பிங் படம் பார்க்கிறோம் என்பதும் குறையாகத் தெரியவில்லை.

துரு துரு, சுறுசுறு கதாபாத்திரத்தில் சாரா அலிகான். அவருடைய கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு இளமைத் துள்ளலுடன் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார். இல்லாத அக்ஷய்குமார் கதாபாத்திரத்தை இருப்பது போல் உணரும் மனதளவில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். அது மாயை என்பது தெரியாமல் அப்படியே இயல்பாய் நடித்திருக்கிறார்.

சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக அக்ஷய்குமார் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பில்லை என்றாலும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

தனுஷின் நண்பராக நடித்திருப்பவர்தான் நகைச்சுவைக்குப் பொறுப்பு. பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஏஆர்.ரஹ்மான் இசையில் 'சக்க சக்க சக்களத்தி' பாடல் ரசிக்க வைத்துள்ளது. காரைக்குடி அரண்மனை போன்ற வீடுகளில் தமிழ் இயக்குனர்கள் கூட இவ்வளவு சிறப்பாக பாடல்களைப் படமாக்கியது இல்லை.

ஓடிடி தள வெளியீடு என்பதால் டைம் பாஸுக்காகப் படத்தைப் பார்க்கலாம்.

கலாட்டா கல்யாணம் - முதல் பாதியில் மட்டும்..கலாட்டா..

 

பட குழுவினர்

கலாட்டா கல்யாணம் (அத்ரங்கி ரே)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

தனுஷ்

டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் 2வது மகன்தான் தனுஷ். 1983, ஜூலை 28ம் தேதி பிறந்த இவரது நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நடித்த திருடா திருடி, தேவதையை கண்டேன், சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, பொல்லாதவன், உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இரண்டு தேசிய விருது வென்றுள்ள தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹிந்தி சினிமா, ஹாலிவுட் படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் விமர்சனம் ↓