சபாபதி,Sabapathy

சபாபதி - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆர்கே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சீனிவாச ராவ்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சந்தானம், ப்ரீத்தி வர்மா
வெளியான தேதி - 19 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

விதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லாத ஆட்களே இருக்க முடியாது. என்ன நடந்தாலும் விதியின் மீது குறை சொல்பவர்களும், பழி சொல்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

இந்தப் படம் விதியின் விளையாட்டு. சமீபத்தில் சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த விநோதய சித்தம் படம் போலவே இந்தப் படத்தில் சந்தானத்திடம் விதி விளையாடுகிறது. விதியின் விளையாட்டால் சந்தானத்திற்கு நல்லது நடந்ததா கெட்டது நடந்ததா என்பதுதான் படத்தின் கதை.

இயக்குனர் சீனிவாச ராவ் சந்தானத்தை வைத்து நகைச்சுவைப் படம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் ஒரு சீரியசான படத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் எப்போதோ ஒரு முறைதான் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது. மற்றபடி அப்பாவுக்கும் மகனுக்குமான ஒரு சென்டிமென்ட் படமாகத்தான் இப்படம் அமைந்திருக்கிறது.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் எம்எஸ் பாஸ்கரின் மகன் சந்தானம். அரியர்ஸ் வைத்து படித்து முடித்தவர். தன் மகன் சந்தானம் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அப்பா பாஸ்கர். சிறு வயதிலிருந்தே திக்கித் திக்கிப் பேசுபவர் சந்தானம். அவருக்கு எதிர்வீட்டு ப்ரீத்தி மீது காதல் வேறு. வேலைக்குச் சென்றால் காதலி கிடைப்பார் என்கிறார் தங்கை. அதனால் இன்டர்வியூவிற்குச் செல்ல ஆரம்பிக்கிறார் சந்தானம். இன்டர்வியூ செல்லும் போதெல்லாம் அதுவே அவருக்குப் பிரச்சினையாக இருக்கிறது. அப்படிப்பட்டவருக்கு திடீரென 20 கோடி நிறைந்த ஒரு சூட்கேஸ் கிடைக்கிறது. அதை வைத்து அவர் என்ன செய்தார், வேலைக்குப் போனாரா, காதலி கிடைத்தாரா என்பதுதான் மீதிக் கதை.

இப்படி ஒரு சீரியசான கதாபாத்திரத்தை சந்தானம் ஏற்று நடித்ததன் காரணம் தெரியவில்லை. மற்றவர்களின் உடல் குறைபாட்டை வைத்துத்தான் சந்தானம் காமெடி செய்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது உண்டு. அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த திக்கிப் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது. சந்தானம் மீது பரிதாபப்பட்டு எல்லாம் நம்மால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. சந்தானம் குடித்து விட்டு வந்து கலாட்டா செய்யும் காட்சியில் மட்டும் தியேட்டரில் ஓரளவிற்கு சிரிக்கிறார்கள். சந்தானத்திடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடி படங்களைத்தான்.

படத்தின் நாயகி ப்ரீத்தி வர்மாவுக்கு அதிக வேலையில்லை. நான்கு காட்சிகளில் வந்திருந்தாலே ஆச்சரியம்தான். அவரை விட அவர் அம்மா ரமா அதிக காட்சிகளில் வந்திருக்கிறார். சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர், அம்மா உமா பத்மநாபன், தங்கை ஆகியோர் தான் படம் முழுவதும் வருகிறார்கள். வழக்கம் போல சென்டிமென்ட், காமெடி நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார் எம்எஸ் பாஸ்கர். வில்லன்களாக சாயாஜி ஷின்டே, வம்சி. அரசியல்வாதிகளாக நடித்திருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி புகழ் அறிமுகமாகும் படம் என எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சந்தானம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. இரண்டே காட்சிகளில் மட்டும் வந்துவிட்டு சிரிக்கவும் வைக்க முடியாமல், காணாமல் போகிறார் புகழ்.

காமெடி படங்களுக்கு இசையமைப்பது என்பது தனி கலை. த்ரில்லர் படங்களுக்கு இசையமைத்துப் பழகிப் போன சாம் சிஎஸ் பின்னணி இசையில் தடுமாறியிருக்கிறார்.

ஒரே படத்தில் பல கிளைக் கதைகளை வைத்து, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எனத் தெரியாமல் திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர். என்ன மாதிரியான படம் பார்த்துவிட்டு வந்தோம் என்ற ஏமாற்றம் வெளியில் வரும் ரசிகர்களின் முகத்தில் தெரிகிறது.

சபாபதி - ஸ்ஸ்ஸ்ஸஸசபா...

 

சபாபதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சபாபதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓