2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கதிர், யோகி பாபு, ரோஷினி பிரகாஷ்
தயாரிப்பு - த போயட் ஸ்டுடியோஸ்
இயக்கம் - குமரன்
இசை - சாம் சி.எஸ்.
வெளியான தேதி - 6 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஓடுகிறது, வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட படங்கள் ஓடுகிறது, பேய்ப் படங்கள் ஓடுகிறது என தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் யாரோ ஆலோசனை சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதனால், எதற்கு ஒன்றை மட்டும் மையப்படுத்தி படமெடுக்க வேண்டும், மூன்றையும் ஒரே படத்தில் சேர்த்து எடுத்து விடுவோம் என இந்த ஜடா படத்தை எடுத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் குமரன், படத்தை ஆரம்பித்த விதத்தையும் அதன் பின் இடைவேளை வரை கொண்டு சென்ற விதத்தையும் சரியாகவே செய்திருக்கிறார். சில தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் காட்சிகளின் தன்மையில் ஒரு யதார்த்தம் இருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பின் சென்னையை விட்டு நகர்ந்து சாத்தான்குளம் சென்றதும் படத்திற்கு சாத்தான் பிடித்துவிட்டது. பேய்க் கதையாக பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் பழி வாங்கும் கதையாக மாற்றி, அடடா, விளையாட்டுப் படமாகத்தானே படத்தை ஆரம்பித்தோம் என ஞாபகம் வந்து இடையிடையே விளையாட்டையும் காட்டி படத்தை முடித்திருக்கிறார்கள்.

வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர் கதிர். சிறந்த கால்பந்தாட்டம் ஆடுபவர். அவரை எப்படியாவது மாநில அணியில் சேர்த்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என கோச் நினைக்கிறார். ஆனால், கதிருக்கு செவன்ஸ் என்ற ஏழு பேரை வைத்து எந்த விதியும் இல்லாமல் விளையாடும் கால்பந்து விளையாட வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக். கோச்சையும், தன் பேச்சால் பணிய வைத்து, பத்து வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அந்த செவன்ஸ் விளையாட்டில் விளையாட களம் இறங்குகிறார் கதிர். ஆனால், போட்டியில் ஒரு தகராறு ஏற்பட சென்னையில் அந்த விளையாட்டை நடத்த போலீஸ் தடை விதிக்கிறது. அதனால், செமி பைனல், பைனலை, சாத்தான்குளத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள் போட்டியாளர்கள். கதிரும் நண்பர்களும் அங்கு செல்கிறார்கள். அங்கு மர்மமான சில சம்பவங்கள் நடக்கின்றன. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

பரியேறும் பெருமாள் படத்தில் கிடைத்த பெயரை கதிர் இன்னமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. படத்தின் கதை எப்படியிருந்தாலும், கதிர் இந்தப் படத்தில் தன் கதாபாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், அவர் கதாபாத்திரம் மட்டும் சரியாக இருந்தால் போதாதே, கூடவே அழுத்தமான காட்சிகளும் இருந்தால்தானே கதாநாயகனுக்கும் பேர் கிடைக்கும்.

கதிரின் காதலியாக ரோஷினி பிரகாஷ். ஓரிரு காட்சிகளில் வருகிறார், காதலிக்கிறார். இடைவேளைக்குப் பின் ஒரே ஒரு முறை கதிருடன் போனில் பேசிவிட்டு காணாமல் போய்விடுகிறார்.

யோகி பாபு கால்ஷீட் எப்போது கிடைத்ததோ அப்போதெல்லாம் அவரைக் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற சமயங்களில் பொருத்தமாக ஒரு வசனத்தை பேசச் சொல்லிவிட்டு அவர் இல்லாமலேயே அந்தக் காட்சியைத் தொடர்கிறார்கள். யோகி பாபுவின் வசனங்களில் காமெடியெல்லாம் வரவில்லை. குணச்சித்திர கதாபாத்திரம் என்று வேண்டுமானால் சொல்லிவிடலாம்.

பிளாஷ்பேக்கில் கால்பந்து கோச் ஆக வருகிறார் ஆடுகளம் கிஷோர். சிறு வயதில் கால்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருக்கும் கதிர் மற்றும் அவரது நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஒரு செவென்ஸ் போட்டியில் கிஷோரைத் திட்டமிட்டு கொன்று விடுகிறார்கள். அவர் மீது அதிக பாசம் வைத்திருப்பதால்தான் பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த செவென்ஸ் போட்டியில் ஆட வேண்டும் என வெறியாக இருக்கிறார் கதிர். கிஷோர் நடிப்பு வழக்கம் போல, யதார்த்தத்துடன் அமைந்துள்ளது.

கதிரின் நண்பர்களாக நடித்திருப்பவர்களையும் வெறுமனே வந்து போக வைக்காமல் ஆளுக்கு சில வசனங்களைக் கொடுத்து பேச வைத்துள்ள இயக்குனரைப் பாராட்ட வேண்டும். வில்லனாக எ.பி ஸ்ரீதர். வட சென்னையைச் சேர்ந்த வில்லன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகம்.

சாம் சிஎஸ் இசை என்று டைட்டிலில் போடுகிறார்கள். அதை பின்னணி இசையில் ஓரளவிற்கு காப்பாற்றி இருக்கிறார் சாம். ஒரு சில பாடல்களையாவது ஹிட்டாக்கியிருக்கலாம்.

கால்பந்து விளையாட்டைப் படமாக்கியதில் ஒளிப்பதிவாளர் ஏஆர் சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். கிராமத்து இரவுக் காட்சிகளில் லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.

கால்பந்தையும் பேயையும் சேர்த்து படமெடுத்ததில் ஒன்றை விட்டு ஒன்றை வைத்திருக்கலாம். அவை இரண்டையும் சேர்த்ததால் திரைக்கதையில் பேயாட்டம் ஆடியிருக்கிறது.

ஜடா - ஜஸ்ட் பாஸ்

 

பட குழுவினர்

ஜடா

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓