Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

24

24,24
விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‛24’.
17 மே, 2016 - 17:29 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » 24

தினமலர் விமர்சனம்


தமிழில் வந்திருக்கும் ஹாலிவுட்டில் பிரசித்திப்பெற்ற டைம் மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் தான் 24!


யாவரும் நலம் விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் 24 படத்தில் சூர்யாவுக்கு விஞ்ஞானி டாக்டர் அப்பா, புத்திசாலி வாட்ச் மெக்கானிக் மகன், உறவு உபத்திர வில்லன்... என மூன்று கேரக்டர்கள் ஏகப்பட்டகெட்-அப்புகள்.


கதை 1990-ல் ஆரம்பமாகிறது. இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் 3 நிமிடம்(வில்லன் சூர்யா பாணியில் சொல்வதென்றால் சரியாக 180 வினாடிகள்...) மூத்தவருக்கு பின் பிறந்த இரண்டாமவரான விஞ்ஞானி சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் அந்த கடிகாரத்தை அடையத் துடிக்கும், விஞ்ஞானி சூர்யாவின் குருர முரட்டு உடன்பிறப்பு ஆத்ரேயா - வில்லன் சூர்யா, அதற்காக தம்பி சூர்யாவையும் அவரது குடும்பத்தையும், குழந்தையையும் அழித்து அடைய துடிக்கிறார்.


அவரது அடாவடி அதிரடியில் குழந்தையும், அந்த டைம் மிஷினும் எஸ்கேப் ஆகிகின்றன. குழந்தை வளர்ந்து ஆளாகி பெரிய சூர்யாவாகி, டைம்மிஷின் உதவியுடன் இழந்த பெற்றோரை அக்காலகட்டத்திற்கு சென்று மீட்டெடுத்ததா.? பெரியப்பாவை பழி தீர்த்ததா.? அல்லது பெரியப்பா சூர்யா முந்திக் கொண்டு தம்பியின் கண்டுபிடிப்பான டைம் மிஷினை கைப்பற்றி, தம்பி குடும்பத்தில் எஞ்சிய தம்பி மகனை கொன்றாரா.? யார் வென்றது.? என்னும் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கரு, கதை, களம் காட்சிப்படுத்தலுடன் லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட், எல்லாம் கலந்து 24 படத்தை 2.44 மணி நேரத்திற்கு பெரும் திரைப்படமாக தந்திருக்கிறது சூர்யா, இயக்குனர் விக்ரம்குமார் கூட்டணி.


சூர்யா, டாக்டர் சேதுராமன் எனும் விஞ்ஞானி அப்பாவாக, அவரது மகன் வாட்ச் மெக்கானிக் மணியாக பெரிய(ப்பா) வில்லன் ஆத்ரேயாவாக.... மூன்று கேரக்டர்களில் விதவிதமான கெட்-அப்களில் வித்தியாசம் காட்டி நடித்து இருக்கிறார். அதில், வில்லன் கம் பெரியப்பா சூர்யாவின் இளம் வயது கெட்-அப்பும் 26 வருடங்களுக்கு பிந்தைய முதிய வயது கெட்-அப்பும் தான், அப்பப்பா, என்ன குரூரமப்பா? எனும் அளவில் மிரட்டியிருக்கிறது. மனிதர், என்னமாய் விஞ்ஞானி தம்பியையும், தம்பி மகனையும் கூடவே, ரசிகர்களையும் அலற விட்டிருக்கிறார். வாவ்!


ஆயுஷ்மான் பவ என்றபடி எல்லாருக்கும் ரொம்ப நாள் வாழணும்னு ஆசை இருக்கும். ஆனா, வயசானவனா வாழ ஆசை இருக்காது என்று தத்துவார்த்தமாக பேசுவதிலாகட்டும், டைம் பத்தி உன்ன விட யாருக்குத் தெரியும் டாக்டர் சேதுராமன் உனக்கும், எனக்கும் 3 நிமிஷம், அதாவது 180 செகண்ட் பிறந்த நேரம் கேப், பட் இப்ப அந்த 180 செகண்ட், உன்னையும், என்னையும் 180 டிகிரி கோணத்துல எதிர் எதிரே நிக்க வச்சிருக்கு... பார்த்தியா... என தங்களது இரட்டை பிறப்பு ஹிஸ்ட்ரி பற்றி பீடிகை போடுவதிலாகட்டும், "இந்த உலகத்திலயே ஒரே ஆள... இரண்டு முறை கொலை செய்த முதல் ஆள் நான் தான்..." என்பதிலாகட்டும், சகலத்திலும், சகட்டுமேனிக்கு புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். அதற்காக, விஞ்ஞானி அப்பாவும், அவரது வாட்ச் மெக்கானிக் பிள்ளை சூர்யாவையும் சளைத்தவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அவர்களும், அவரவரது பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி நித்யா மேனன், சமந்தா மற்றும் டைம் மிஷினுடன் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அதிலும் சமந்தாவுக்கு

இமாஜினோ ரொமான் ஸோ பீலியா, வியாதி இருப்பதாக சூர்யா சிமிட்டம் 1, 2 ,3.. சொல்லி இச்சை ஏற்றுவது எல்லா தரப்பு ரசிகனுக்கும் பிடிக்கும்.


கதாநாயகி சமந்தா, அஞ்சான் அளவுக்கு சூர்யாவுக்கு ஆப்டாயில்லை என்றாலும் சமத்தாக வந்து சூர்யாவுடன் ஆடிப்பாடி வாழ்ந்திருக்சிறார் அம்மணி! அதிலும், கால்தரையில பட்டாச்சு... கைய எடுங்க.... எனும் அஞ்சான் டயலாக்... ரிமைனிங்கில் செம கலக்கல். அதே மாதிரி, சூர்யாவின் மாமன் மகள் தான் சமந்தா என்னும் எதிர்பாரா ட்விஸ்ட்டும் அவரது கோபால சமுத்திரம் ப்ளாஷ்பேக், அத்தை சரண்யாவுக்கான வெள்ளிக்கிழமை மவுன விரதமும் ரசனை!


அப்பா விஞ்ஞானி சூர்யாவின் ஜோடியாக, மகன் சூர்யாவின் நிஜ அம்மாவாக மற்றொரு நாயகி நித்யா மேனன் கொஞ்சம் நேரமே வந்து போனாலும், திரும்பவும் வந்தாலும் செம திருப்தி.


தாய் ஆகாமலேயே உனக்கு தாய்பால் கொடுத்தேன்... 10 மாசம் சுமக்கலை... 26 வருஷம் வளர்த்தேன்... எனும் வளர்ப்பு தாய் சத்யபாமாவாக சரண்யா, வழக்கம் போலவே செம பாசக்கார அம்மாவாக நெகிழ்ச்சி கூட்டுகிறார்! இவருக்கும், சமந்தாவுக்கு மான பெயர் காரணமும் பிரமாதம்.


சார்லி, சத்யன், அப்புக்குட்டி, கிரீஷ்கர்னாட், மித்ரன், பேபி விதி உள்ளிட்டவர்களில் மித்ரன் ஆக வருபவர் மிரட்டல் என்றால் சத்யன் ரொம்ப நாளைக்கப் புறம் கலக்கல்.


பிரவின் பூடியின் படத்தொகுப்பில் டைம்மிஷின் படமென்பதால், திரும்ப திரும்ப மாறி, மாறி வரும் சில காட்சிகளும், அடிக்கடி சூர்யா, சமந்தாவிடம் சொல்லும், நான் ஒரு வாட்ச் மெக்கானிக்காக்கும்... எனும் வழியல் டயலாக் சீன்களும் சற்றே ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றன.


எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு படத்தை படு பிரமாண்டமாக காட்டும் ஒவியப்பதிவு என்றாலும், 1990 வருடத்து காட்சிகள், ரொம்பவும் ரிச்சாக தெரிவது உறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, இரயில் பெட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், இந்தியன் இரயில்வே 1990-யில் இப்படியா? இருக்கும்... என கேட்க வைத்து விடுகின்றன. நாம் வாழும் காலத்திற்கு பல வருடம் பிந்திய காலம் சற்றேடல் அடித்து தெரிந்தால் தான் அது, இயல்பாக இருக்கும். இப்படத்தின் பாடல் காட்சிகள் போல அவை பாரீன் லொகேஷன்களாக இருப்பது ஒட்டவில்லை. மற்றபடி, பிற நிகழ்கால காட்சிகளும் சி.ஜி வேலைப்பாடுகளும் சூப்பர் ப....அதிலும் சூர்யா - சமந்தா , சம்பந்தப்பட்ட அந்த ஆரம்ப காட்சிகளில் மழை துளிகளை அப்படியே பாதியில் பிரீஸ் செய்வது, ஆரம்பத்தில் வரும் டைம்மிஷின் ஆய்வு கூட மிரட்டல்கள், பாடல் காட்சி வெளிநாட்டு லொகேஷன்கள் எல்லாம் ஹைலுக் கலர்புல்கள்!


ஏ.ஆர் .ரஹ்மானின் இசையில், ஆளப்பிறந்தவன் ஆராரோ..., மாயமில்லை மந்திரமில்லை...., நான் உன் அருகினிலே அழகினிலே..., அரசியே அடிமையே அழகியே... உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். இப்படத்திற்கு பின்னணி இசைபெரும் பலம்.


டைம் மிஷன் சாவி யதேச்சையாக சூர்யா கைக்கு கிடைப்பதும் அது டைம் மிஷின் சாவி என்பது தெரியாமல், மிஷினை கையில் கட்டி சூர்யா சமந்தா, சரண்யா, சத்யன் ஆகியோரிடம் பண்ணும் லந்துகளையும், லாஜிக்காக பார்த்து பார்த்து கலர்புல்லாக, கலக்கலாக படமாக்கிய இயக்குனர் விக்ரம் கே.குமார், படத்தில் வரும் கடிகார டைப் டைம் மிஷினை பெரும்பாலும் இப்படத்தில் 26 வருடங்கள்... பின்னோக்கி போக மட்டுமே (வருங்காலம் பற்றி எதுவுமில்லாது....) பயன்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரியது. இவை, எல்லாவற்றுக்கும் மேல் டைம் மிஷின், இழந்ததை மீட்டெடுப்பது, இன்னும் பிறவெல்லாம்..... இங்கிலீஷ் படம் பார்க்கும் சிட்டி ரசிகர்களுக்கு பிடிக்கும் வில்லேஜ் -வெகுஜன ரசிகர்களுக்கு பிடிக்குமா?, புரியுமா ...? என இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்!


அதே மாதிரி அப்பா கஷ்டப்பட்டு கண்டுபிடித்த 24 மணி நேர டைம் மிஷினில் கடிகார மெக்கானிக் பிள்ளை கஷ்டப்படாமலே தேதி, மாதம், வருஷம் எல்லாம் 26 வருடங்களுக்குப் பின்செட் செய்வது நம்பும்படி படமாக்கப்படாதது... லாஜிக்காக லட்சோப லட்சம் கேள்விகளை எழுப்புகிறது. இது மாதிரி குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் 24 திரைப்படத்துக்கு 12 பி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட தமிழ் படங்களே முன்னோடியாக தெரிவது பலவீனம்!


அதே மாதிரி 24 மணி நேரம் முன்னும், பின்னும் செல்லும் டைம் மிஷினை 26 வருடங்கள் பின்னோக்கி கொண்டு செல்வதை விட 24 வருடங்கள் மட்டும் பின்னோக்கி கொண்டு சென்றிருந்தால் டைட்டிலுக்காவது லாஜிக்காக இருந்திருக்கும்!


ஆகமொத்தத்தில் 24 - 2..44 மணி நேரப்படமென்பது கொஞ்சம் ஜாஸ்தி! மற்றபடி 24 கலக்கல்.


-------------------------------------------------------




குமுதம் சினி விமர்சனம்


காலத்தைப் பின்னோக்கி நகர்த்தும் ஒரு டைம் மெஷின் கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் '24'.

விஞ்ஞானி சூர்யா (சேதுராமன்) அந்த டைம் மெஷின் கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதை அபகரித்த வில்லன் சூர்யா (ஆத்ரேயா) தம்பி சூர்யாவையும் தம்பி மனைவியையும் கொல்கிறார். மகன் சூர்யாவையும் டைம் மெஷின் கடிகாரத்தையும் காப்பாற்றிவிட்டு விஞ்ஞானி சூர்யா இறக்கிறார். வில்லன் சூர்யா விபத்தில் சிக்கி கோமாவாகிறார்.

26 வருடத்திற்குப் பிறகு, வாட்ச் மெக்கானிக்காக வரும் மகன் சூர்யா(மணி)யிடம் அந்த டைம் மெஷின் வாட்ச் வந்து சேருகிறது. கோமாவிலிருந்து விழித்துக் கொள்ளும் வில்லன் சூர்யா, அந்த வாட்சை இளம் சூர்யாவிடம் இருந்து எப்படி அபகரிக்கிறார் என்பது மீதிக்கதை.

மகன் சூர்யாவிடம் கடிகாரம் வந்ததும் கதை சூடு பிடிக்கிறது. அதை அடைய வில்லன் சூர்யா நகர்த்தும் ஒவ்வொரு காயும் விறுவிறுப்பு. உதாரணத்துக்கு யாரிடம் அந்த வாட்ச் இருக்கிறது என்பதை வில்லன் கண்டுபிடிக்கும் காட்சி. இளம் சூர்யாவின் அப்பாவாக வில்லன் சூர்யா நாடகமாடும் இடமும் அவரின் நிஜமுகம் வெளிப்படும் இடமும் அப்ளாஸ். வில்லன் சூர்யா தனித்து நிற்கிறார்.

இளம் சூர்யா துறுதுறு. மழையைத் தடுப்பது கிரிக்கெட்டை நிறுத்துவது. காதல் காட்சிகள், வாழைப்பழத்தில் வழுக்கிவிழும் நபரை தடுப்பது என்று மகன் சூர்யா, கால எந்திரத்தை குழந்தைகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக செய்து காட்டியிருப்பது நல்ல நடிப்பு. சமந்தாவுடனான காதலுக்கு அந்த கடிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது நல்ல கலகல என்றாலும் காதல் காட்சிகள் நீளம்.

மூன்று வேடம் சூர்யாவுக்கு என்றாலும் நன்கு வித்தியாசம் காட்டியிருக்கிறார். விஞ்ஞானி சூர்யா நடிப்பில் அச்சு அசல் விஞ்ஞானியேதான்.

நித்யாமேனன் மனதில் நிற்கும் விதத்தில் வந்து போகிறார். சமந்தா, அழகுக்கு அழகு சேர்க்கிறார். அம்மா சரண்யா உருக வைக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் ரம்யம். திருவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ. கலை இயக்குநரின் கை வண்ணத்தில் ஆய்வுக்கூடம் ஆச்சரியம்.

டைம் மிஷினை எளிதாக புரிய வைத்தது. கடிகாரத்தை இளம் சூர்யாவிடமிருந்து கைமாற வைப்பது, அப்பா சூர்யாவுக்கு மின அதிர்ச்சி ஏற்படுவது, வில்லன் சூர்யா இளம் சூர்யாவை ஏமாற்றுவது, கிளைமாக்ஸ் திருப்பம் என்று எல்லாமே கச்சிதமாக ஸ்கிரீன் பிளே. தர்க்கரீதியாக சில இடங்களில் குறைகள் உண்டுதான். அதை ஒதுக்கிப் பார்த்தால்தான் அது சயின்ஸ் ஃபிக்ஸன். சபாஷ்!


24 : பரபர!


குமுதம் ரேட்டிங் - நன்று


-----------------------------------------------------------


கல்கி சினிமா விமர்சனம்




ஹெச்.ஜி. வெல்ஸின் கதையை அடிப்படையாக வைத்து எடுத்த 'டைம் மிஷின்' படத்திலிருந்து, சமீபத்தில் வந்த 'இன்று நேற்று நாளை' படம் வரை உள்ள 'கால எந்திர'க் கதைகளில் இதுவும் ஒன்று.

இரட்டையர்களில் ஒருவன் நல்லவன்; மற்றொருவன் கெட்டவன் என்னும் சூத்திரத்தை 'உத்தமபுத்திரனி'லிருந்து 'வாலி' வரை எத்தனை படங்களில் பார்த்துச் சலித்திருக்கிறோம்? இதிலும் அதே!

கதாநாயகிக்கு 'சத்தியபாமா' என்று பெயர் சூட்ட சொல்லப்படும் காரணம் சுவை. ஆனால் அந்தக் காரணமே டைம் மெஷினால் அழிந்த பிறகு, மீண்டும் அதே பெயரைச் சூட்டியிருப்பது இடிக்கிறது.

சிகையலங்கார நிபுணர், 'இனி, தங்கத்தில் கத்தரிக்கோல், வௌ்ளியில் பிளேடு' என சந்தோஷப்பட்டுக் கொள்வது செம தமாஷ்!

வித்தியாசமான லொக்கேஷன்கள், திவ்யமான படப்பிடிப்பு.

'நான் ஒர வாட்ச மெக்கானிக். எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்' என்னும் வசனம் டாப். சூர்யா அதைச் சொல்லும் போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல் ஓசை!

பல காலம் ஆராய்ச்சி செய்து ஒருநாள் மட்டுமே முன்பின் செல்லும் கால எந்திரத்தை அப்பா சூர்யா உருவாக்கும் காட்சிகள் அசத்தல். ஒரு ஸ்க்ரூ ட்ரைவரின் உதவியால் அதை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் முன்னோக்கியோ, பின்னோக்கியோ போகும் படி மகன் சூர்யா ஓரிரு நொடிகளில் மாற்றி அமைப்பது அறிவியல் அதிசயம்!

முன்பாதியில் சூர்யா, சமந்தா காதல் மலர்வது அருமை, புதுமை!

இருபத்தாறு ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் வில்லன் கையில் சாவி அப்படியே இருக்கிறது. இது ஒரு மெடிக்கல் மிராக்கிள்.

அறிவாளியான வில்லன், கைக்குக் கிடைத்த போலி கால எந்திரத்தைப் பரீட்சை செய்யாமல், தான் செய்த கொடூரங்களைப் பட்டியல் இடுவது, செக்கில் தன் அசல் பெயரை எழுதுவது போன்ற அபத்தங்கள் நிரம்ப உண்டு.

இமேஜினோ ரொமான்ஸோ ஃபீலியா என்ற சுகமான வியாதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பலே!

சூர்யாவின் ஆராய்ச்சி சாலையின் கருவிகள் மிரட்டுகின்றன.

எடிட்டிங் கனகச்சிதம்.

இசை காதைக் கிழிக்கவில்லை. உற்றுக்கேட்டால் பாடல் வரிகள் ஓரளவு புரிகின்றன.

நீளம் அதிகம்.

ஓரளவு குழப்பம் இல்லாத திரைக்கதை.

நித்யாமேனன் - நடமாடும் முழுநிலா.

லாஜிக் பார்க்காதவர்களுக்கு மனம் கவரும் மேஜிக்.




வேலூர் கே. சங்கேஷ் கருத்து: இது போன்ற கண்டுபிடிப்பு வேண்டாம் எனக் கடைசியில் தூக்கி எறிவது அருமை. கிராஃபிக்ஸ் எல்லாம் படு அமர்க்களம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
24 தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in