கனா காணும் காலங்கள் சீரியலில் பள்ளி மாணவராக அறிமுகமானவர் இர்பான். பட்டாளம் படத்திலும் பள்ளி மாணவராக நடித்தார். அதன் பிறகு எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், எதிர்வீச்சு படங்களில் நடித்தார். இதில் சுண்டாட்டம் மட்டும் சுமாராக ஓடிய படம். மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்தார். சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பகுதியில் சரவணனாக நடித்தார். 200 எபிசோட்கள் கடந்த நிலையில் அதிலிருந்து விலகி விட்டார்.
இதுகுறித்து இர்பான் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு நல்ல பாப்புலாரிட்டியை கொடுத்தது உண்மைதான். இப்போதும் நான் வெளியில் சென்றால் என்னை சரவணனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் எனது லட்சியம் சினிமாவில் ஜெயிப்பதுதான். பொங்கி எழு மனோகரா, ரூ என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்கிற சூழ்நிலை. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சினிமாவுக்காக சின்னத்திரையை விட்டுவிட்டேன்.
பொங்கி எழு மனோகரா முழுநீள காமெடி படம் இந்தப் படம் எனக்கு சினிமாவில் நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன். சின்னத்திரை ரசிகர்கள் என்னை புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்புகிறேன். என்கிறார் இர்பான்.