அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மறைந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சிகரம் தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் பாலு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர் கடந்த செப்., 25ம் தேதி மறைந்தார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தார். இப்போது அவரது புகழுக்கு மற்றுமொரு மகுடமாய் பத்ம விபூஷண் விருதை அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... என்று அவர் பாடிய வரிகள் என்றும் நிலைத்து இருக்கும் என்பது திண்ணம்.

சின்னக்குயில் சித்ராவுக்கு பத்மபூஷண்
கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, சின்னக்குயில் சித்ரா என அழைக்கப்படுகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளார். 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் பெற்றுள்ள இவர், கடந்த 2005ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இப்போது மற்றுமொரு மகுடமாய் பத்மபூஷண் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருது
இதேப்போன்று பிரபல கர்நாடக பின்னணி பாடகியும், சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பாடி உள்ளார். தமிழில், நறுமுகையே நறுமுகையே...., வசீகரா வசீகரா... முதல் கனவே முதல் கனவே..., ஒன்றா இரண்டா..., மலர்களே மலர்களே மலர்ந்திட வேண்டாம்..., சுட்டும் விழி சுடரே..., உயிரே என் உயிரே... உள்ளிட்ட பல அருமையான பாடல்களை பாடி உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு இப்போது மற்றுமொரு மகுடமாய் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.