ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தனக்கு வழங்கி கவுரவித்த விருதுகளை திருப்பி தரும் முடிவில் இளையராஜா இருப்பதாக இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா கூறிய நிலையில் அது எனது கருத்தல்ல, நான் அப்படி ஒரு கருத்தை கூறவில்லை என இளையராஜா கூறி உள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. சென்னை, சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு கூடம் உள்ளது. அதை, 35 ஆண்டுகளாக இவர் பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கு சமரச பேச்சுக்கு சென்றது. அதில், முடிவு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், ஒலிப்பதிவு கூடத்தில், ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார். மேலும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் பலக்கட்ட சமரசம், பேச்சுவார்த்தைக்கு பின் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா கூறினார். இதை ஏற்ற நீதிமன்றம், ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியது. மேலும் இளையராஜா தியானம் மேற்கொள்ளவும், இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இளையராஜா பெற்ற விருதுகள், அவரது உடமைகள் பலவும் குப்பை போன்று அங்கும், இங்குமாக வீசப்பட்டு கிடந்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் இளையராஜா.
இந்நிலையில் இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தினா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது : இசை கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு. இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றி ஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம். பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கிற செய்தி தவறானவை.
45 ஆண்டு காலாமாக இளையராஜா இசையோடு வாழ்ந்தது பிரசாத் ஸ்டுடியோ. முதல் நாள் மாலை ரிக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வழக்கம் போல சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டார். இது எட்டு மாத காலமாக நீடித்தது. அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார். நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதாரப்படுத்தபட்டிருந்தன. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. அவரை காலி செய்ய சொல்லி கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்
தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்கு தகவல் கூறி இருக்கலாம். இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் மவுனமாக வேடிக்கை பார்த்தது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக தற்போது உணர்கிறோம்.
ஐம்பதாண்டு காலம் இந்திய சினிமாவுக்கு தன் இசை பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தை பெற்று தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தன்னை கவுரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் உள்ளார் என்றார்.
இளையராஜா மறுப்பு
இப்படி ஒரு தகவல் வெளியான நிலையில் இளையராஜா இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ : நான் சொல்லாத ஒரு கருத்தை, தனிப்பட்ட ஒருவரின் கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது. அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
தினா விளக்கம்
இளையராஜா தான் அப்படி கூறவில்லை என்றதும், தினா தன் தரப்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார். இப்படி வீசிய விருதுகளை அவர் திருப்பி கொடுத்திருக்கலாமே என்று உணர்ச்சிபெருக்கில் நான் கூறியிருப்பேன். ஆனால் அவர் திருப்பி தருகிறார் என கூறவில்லை என்றார்.