துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
1980களில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தரமான இயக்குனர்களில் மிக முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர்தான் இயக்குநர் மணிரத்னம். குறைவான வசனங்களும், நிறைவான உணர்வுகளும் உள்ளடக்கிய கலைப் படைப்புகளைத் தந்து, ஒரு நிலையான இடம் பிடித்த தரமான இயக்குநராக இன்றளவும் அறியப்பட்டு வருபவர்தான் இவர்.
“மௌன ராகம்”, “அலைபாயுதே” போன்ற காதலைச் சொல்லும் கதைக்களமானாலும், “நாயகன்”, “தளபதி” போன்ற குற்றப் பின்னணியை சுற்றிச் சுழலும் கதைக்களமானாலும், “ரோஜா”, “பம்பாய்” போன்ற அரசியல் கதைக்களமானாலும் அல்லது “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்றுக் காவியங்களைச் சொல்லும் கதைக்களம் என எந்த ஒரு கதைக்களமானாலும் அவற்றில் இவரது படைப்புத் திறன் என்பது, இயக்கம் என்பதையும் தாண்டி, இசை, வசனம், திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் என அனைத்திலும் தனி கவனம் செலுத்தி, மற்ற படைப்பாளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதோடு, அதுவரை பார்த்திராத ஒரு புது சினிமாவைப் பார்க்கும் உணர்வினைப் பார்வையாளர்களுக்கு தரும் விதமாகவும் இருக்கும்.
அப்படி ஒரு வித்தியாசமான கலைப்படைப்பாக, யாரும் சிந்தித்திராத வகையில், ஒரு மூன்று வயதுக் குழந்தையை முக்கிய கதாபாத்திரமாக்கி, முற்றிலும் மாறுபட்ட ஒரு வெற்றிச் சித்திரமாக இவர் படைத்த ஒரு கலைப்படைப்புதான் “அஞ்சலி” என்ற ஒரு அபூர்வ கலைப்படைப்பு. மனநலம் குன்றி, மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்கும், அதன் குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான போராட்டம்தான் இந்த “அஞ்சலி” படத்தின் கதை.
தனது “நாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டங்களிலேயே “அஞ்சலி” திரைப்படத்திற்கான திட்டமிடலிலும் ஆர்வம் காட்டி வந்தார் இயக்குநர் மணிரத்னம். இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைக்க இயக்குநர் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப்.
“நிறக்கூட்டு”, “ராஜாவின்டே மகன்”, “நியூ டெல்லி”, “நம்பர் 20 மெடராஸ் மெயில்” போன்ற மலையாள மெகா ஹிட் திரைப்படங்களின் திரைக்கதாசிரியரான இவரும் “அஞ்சலி” திரைப்படத்திற்கான திரைக்கதையை அமைக்க ஒத்துக் கொள்ள, பின் வேலைப்பளு காரணமாகவும், நேரமின்மைக் காரணமாகவும் அவரால் “அஞ்சலி” திரைப்படத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது. அதன் பின் இயக்குநர் மணிரத்னமே திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியிருந்தார்.
அதேபோல் மணிரத்னத்தின் “மௌன ராகம்”, “நாயகன்”, “அக்னி நட்சத்திரம்” ஆகிய வெற்றித் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த பி சி ஸ்ரீராமும் இந்தப் படத்தில் இடம் பெறாமல் போனார். படத்தின் ஒளிப்பதிவாளராக மது அம்பாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் படத்தின் நாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகர் 'மைக்' மோகன். படைப்பு சம்மந்தமாக இயக்குநருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரும் படத்திலிருந்து விலக, அதன் பின் நாயகனாக ஒப்பந்தமானவர்தான் நடிகர் ரகுவரன்.
படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி நடித்திருந்த நடிகர் பிரபுவின் கதாபாத்திரத்திற்கு, “அஞ்சலி” திரைப்படத்தின் திரைக்கதையை எழுத முதலில் அணுகிய மலையாளத் திரைக்கதாசிரியர் டென்னிஸ் ஜோசப் பெயரையே வைத்திருப்பார் இயக்குநர் மணிரத்னம். மேலும் குழந்தை அஞ்சலியின் சகோதரி கதாபாத்திரத்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர் பிரபல பின்னணிப் பாடகியான பாப் ஷாலினி. அவரது படிப்பு பாதிக்கக் கூடும் என்ற காரணத்தால் அவரது தாயார் மறுப்பு தெரிவிக்க பின் அவரும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இயலாமல் போனது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான “அஞ்சலி” கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த அந்த மூன்று வயது பச்சிளங் குழந்தை வேறு யாருமல்ல. நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் உடன் பிறந்த தங்கையான ஷாமிலி. அந்த அரும்பு நிலையிலேயே பலரும் புருவம் உயர்த்திப் பார்க்கும் வகையில் தனது அபாரமான உடல் மொழி கொண்டு அசத்தலான நடிப்பை வெளிக்காட்டிய நடிகை ஷாமிலி பின்னர் திரைப்படங்களிலிருந்து விலகியது ஏன்? என்ற கேள்வியும் நமக்குள் உழன்று கொண்டுதானிருக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக 'இசைஞானி' இளையராஜா இசையமைப்பில் அவரது 500வது திரைப்படம் என்ற அடைமொழியோடு வெளிவந்தது படத்திற்கு மேலும் மகுடம் சூட்டியது போல் ஆனது. 1990ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், 1991ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பரிந்துரைக்கப்படாமலும் போனது. இத்தனை அலாதியான அனுபவங்களைச் சுமந்து, ஆர்ப்பாட்டமின்றி, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த ஒரு அழகியலான கலைப்படைப்பாக வந்து, அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவள்தான் இந்த “அஞ்சலி”.